1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆசியாவில் அழிந்து வரும் இனமாக இருக்கக்கூடிய பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பது என்பது இளைஞர்கள் இல்லை என்றால் நடக்காத ஒரு காரியமாக இருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

"இளைஞர்கள் இல்லை என்றால் பனிச்சிறுத்தைகள் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஆராய்ச்சிகளும் இயலாத ஒரு காரியமாக இருக்கும்," என்கிறார் உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கெளஸ்துப் ஷர்மா தெரிவிக்கிறார்.

"இதில் களப்பணி என்பது, கடினமான இடங்களில், கடுமையான பருவநிலைகளில் ஆசியாவில் உள்ள உயர்ந்த மலைகளில் ஏற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி சென்று கண்காணிப்பது, கணக்கெடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். இது நிபுணர்களால் இயலாது. எனவே இளைஞர்களை நம்பிதான் இந்த பணி உள்ளது," என்கிறார் ஷர்மா.

எனவே இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியா, ரஷ்யா மற்றும் மங்கோலியாவை சேர்ந்த இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இவ்வாறு களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களில் ஒருவர் ஜானகி. இவருக்கு 26 வயது.

கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஜானகி 2017ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்புக்கான உலகளாவிய நிதியத்தில் பயிற்சிப் பணியில் சேர்ந்தார். அப்போது முதல், பனிச்சிறுத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். 2018ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் முழுவதும் உள்ளூர் இளைஞர்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக கணக்கெடுப்புகளை எடுத்து வருகிறார்.

இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் உயரிய மலைகளில் பல நாட்களாக கால்நடை மேய்ப்பர்களுடன் பயணம் மேற்கொண்டு பனிச்சிறுத்தைகளை கண்காணிக்க கேமராக்களை பொருத்தி வருகிறார் ஜானகி.

பனிச்சிறுத்தைக்காக அருணாச்சல பிரதேச மலைகளில் ஏறும் சென்னையின் ஜானகி

பனிச்சிறுத்தைக்காக அருணாச்சல பிரதேச மலைகளில் ஏறும் சென்னையின் ஜானகி

இந்த தொலைதூர பகுதி சர்வதேச அளவில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்த பகுதியில் ஜானகி, புத்த மதத்தை பின்பற்றும் மான்பா என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடி மக்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இவர்கள் மதம் மற்றும் கலாசார நம்பிக்கையின்படி, விலங்குகளை வேட்டையாடமாட்டார்கள்.

"இருப்பினும் அவர்களின் கால்நடைகள் பனிச்சிறுத்தைகளாலும், காட்டு நாய்களாலும் கொல்லப்படுவதால் அவர்கள் கால்நடைகளின் உடல்களில் விஷம் வைத்தோ அல்லது கண்ணி வலைகளை வைத்தோ அவைகளை கொல்ல முயல்வர்" என்கிறார் ஜானகி.

"இன்னும் சொல்லப்போனால், இந்த பனிச்சிறுத்தையையோ அல்லது காட்டு நாயையோ வேட்டையாடி அதன் உடலை காட்டினால் மொத்த கிராமமும் சேர்ந்து அந்த நபருக்கு பரிசளிக்கும் ஒரு நடைமுறை இங்கு பின்பற்றப்படுகிறது," என்கிறார் அவர்.

"அந்த சமுதாய மக்கள் கால்நடைகள் குறைந்து வருவது குறித்து அவர்களின் மதகுருவை நாடினர். அவர் சில சடங்குகளை நடத்திய பின் காட்டெருமைகளை காட்டு நாய் மற்றும் பனிச்சிறுத்தைகளிடமிருந்து காப்பாற்ற மந்திரித்த வளையம் ஒன்றை அதன் கொம்புகளில் மாட்டினார்" என்கிறார் ஜானகி.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், இந்திய இமயமலைப் பகுதியில் சுமார் 500 பனிச்சிறுத்தைகள் மட்டுமே உள்ளதாக கூறுகிறது.

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சிறுத்தைகளின் வாழ்விடங்கள் நிறைய உள்ளன. ஆனால் இங்குள்ள புவியியல் அமைப்பு சற்று சவாலானது.

இம்மாதிரியான தொலைதூர பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கு போராடும் மக்களின் கதைகளையும் ஜானகி கேட்டு வருகிறார்.

அம்மாதிரியான ஒரு கதைதான் 200 காட்டு எருமைகளை பனிச்சிறுத்தைகளுக்கு பறிகொடுத்த ஒரு கிராமத்தின் கதை.

பனிச்சிறுத்தை

பனிச்சிறுத்தை

"அந்த கிராமத்தில் உள்ள மேய்ப்பர் ஒருவர், இந்த பனிச்சிறுத்தைகள் ஒரே சமயத்தில் 20 காட்டெருமைகளை கூட கொன்றுவிடும். ஆனால், அது எதையும் உண்ணாது என எரிச்சலோடு கூறினார்."

"நான் அங்கு உட்கார்ந்து அவரின் பேச்சை தொடர்ந்து கேட்டபோதுதான் எனக்குப் புரிந்தது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள மோதல் என்பது எப்போதும், `நாம் மற்றும் அவைகள்` என்றுதான் பார்க்கப்படுகிறது. இதுவே உள்ளூர் மக்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குமான ஒரு பிரிவினையாகவும் உள்ளது" என்று கூறுகிறார் ஜானகி.

அந்த புரிதலுக்குப் பிறகு, சமூதாயம் சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார் அவர். அதை அவர் சமூக சுற்றுச்சூழல் அமைப்பு என்கிறார்.

ஜனாகியை போன்று ரஷ்யாவில் உள்ள எர்கின் தாட்யோரோவும் பனிச்சிறுத்தைகளை பாதுகாப்புக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த வருடம் ரஷ்யாவில் பனிச்சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பின்போது, கடுமையான பருவநிலை போன்ற காரணிகளால் அதன் இருப்பிடங்களை நெருங்க முடியவில்லை.

இதன் காரணமாக நிபுணர்களால் 2019ஆம் ஆண்டை காட்டிலும் குறைவாகவே கணக்கிட முடிந்தது.

பனிச்சிறுத்தைகளின் கணக்கெடுப்பிற்காக ரஷ்யாவின் அல்டாய் குடியரசில் உள்ள கோஷ் அகாச் மாவட்டத்தில் உள்ள சய்யூகேம்ஸ்கி தேசிய பூங்காவில் உள்ள நதி, உறையாத காரணத்தால் அதை கடந்து போக முடியவில்லை. அதன்பிறகு பெருமழையின் காரணமாக அந்த நதியை கடக்க முடியவில்லை.

இருப்பினும், இது எதுவும் 23 வயது எர்கினுக்கு தடையாக இல்லை.

எர்கின்

"நான் மைனஸ் 40 டிகிரியிலும் பணி செய்வேன். ஏனென்றால் நான் இந்த இடத்தை சேர்ந்தவன். எனக்கு இங்குள்ள அனைத்து இடங்களும் பரீட்சயம்" என்கிறார் அவர்.

இயற்கை பாதுகாப்புக்கான உலகளாவிய நிதியம் ரஷ்யாவில் 70 - 90 பனிச்சிறுத்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளது அதில் பாதி அல்டாய் குடியரசு பகுதியில் உள்ளது.

அங்குள்ள தேசிய பூங்காவில் ஏதும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் அதையும் எர்கின் தெரியப்படுத்துவார்.

எர்கின் கால்நடைகளை மேய்க்கும் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் தந்தை ஒரு வேட்டையாள்.

மங்கோலியா, சீனா மற்றும் கஜகஸ்தானை எல்லைகளாக கொண்ட இந்த பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, 2010ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அமைக்கப்பட்டது. எர்கினின் தந்தைக்கும் இந்த பூங்காவில் ஒரு பணி கிடைத்தது.

"இந்த பகுதியில் பனிச்சிறுத்தைகளை பாதுகாக்கும் பணியை எனது தந்தைதான் எனக்கு கற்றுக் கொடுத்தார்," என்கிறார் எர்கின்.

2015ஆம் ஆண்டு தனது தந்தை பணி ஓய்வு பெற்ற பிறகு எர்கின் தேசிய பூங்காவில் தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

உள்ளூர் மக்களின் கால்நடைகளை கொல்லும் நரிகளுக்கு வலை வைப்பதில் சில நேரம் பனிச்சிறுத்தைகளும் சிக்கிக் கொள்கின்றன. மேலும் கடத்தல்காரர்களும் அங்கு உண்டு. எனவே இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள பாதுகாவலர் பணியில்தான் விரைவில் சேர வேண்டும் என்று விரும்புகிறார் எர்கின்.

15 வயதிலிருந்து ஆர்வலராக இருக்கும் மங்கோலியாவின் பயார்மா சுலூன்பட்

பயார்மா

மங்கோலியாவில் சுமார் 1,000 பனிச்சிறுத்தைகள் வரை உள்ளன என்கிறது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்.

தனது பதின் வயதில் வலை ஒன்றில் தனது கால்கள் மாட்டிக் கொண்ட பனிச்சிறுத்தையின் புகைப்படத்தை பார்த்ததிலிருந்து 20 வயதாகும் பயார்மா பனிச்சிறுத்தைகளை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மங்கோலியாவின் வடக்கில் 2,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதியான கோவ்ட் மாகாணத்தில் உள்ள கால்நடை மேய்ப்பர்கள் பனிச்சிறுத்தைகளை கொல்லும் பணியை விடுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார் இவர்.

தங்கள் கால்நடைகளை கொல்லும் பனிச்சிறுத்தைகளை வலை வைத்து பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் இந்த உள்ளூர் மக்கள். மேலும் இங்கு கடத்தல்காரர்களும் அதிகம்.

கடத்தல்காரர்களை தன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்கிறார் பயார்மா.

"நான் சிறுவயதில் இருக்கும்போது, எனது தந்தை பனிச்சிறுத்தைகள் அமைதியின் அடையாளம் என்று கூறுவார். மேலும் அவை பாதுகாப்பாக இருந்தால் நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் அவர் கூறுவார்," என்கிறார்.

பயார்மா தனது 15 வயதிலிருந்து தனது பள்ளியில் உள்ள இக்கோ கிளம்பின் மூலம் தனது நண்பர்களையும் வலைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.

மேலும் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பள்ளி வகுப்பறைகளில் பனிச்சிறுத்தை பாதுகாப்பு குறித்துப் பேசி வருகிறார்.

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள்

பனிச்சிறுத்தை

உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம், 12 ஆசிய நாடுகளில் உள்ள இமயமலை பகுதிகளிலும் மத்திய, ஆசிய பகுதிகளிலும், பனிச்சிறுத்தை கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறது.

இயற்கை பாதுகாப்பு சர்வதேச யூனியன், உலகளவில் மொத்தம் 7,000 - 8,000 பனிச்சிறுத்தைகள் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்கின்றனர்.

இந்த பனிச்சிறுத்தைகள் 20 லட்சம் சதுர கிலோமீட்டர் வரை வாழ்விடங்களை கொண்டிருக்கலாம். மேலும் அது வியத்தகு அளவில் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளக்கூடியவை. எனவே அது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக உள்ளது.

இந்த அரிய இனம், கடத்தல்காரர்கள், விவசாயிகளின் பதில் நடவடிக்கைகள், உணவாக இருக்கக்கூடிய விலங்கின் அழிவு, மனித நடவடிக்கையால் வாழ்விடம் சுருங்குதல், பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தால் குறைந்து வருகிறது. இந்த இனத்தை நாம் பாதுகாக்கவில்லை என்றால் அது ஒரு நாள் முற்றிலுமாக அழிந்து போகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி