1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கடந்த 8 நாட்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் அங்காங்கே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதன்படி, இலங்கையில் இன்றைய தினமும் நால்வர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

நாட்டில் இதுவரை 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த பணியகத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், 101 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 199 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மலையகத்தில் முதலாவது கொரோனா தொற்று

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலையக பகுதியில் இன்று முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அக்குரணை - தெலம்புகஹவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இன்று அடையாளம் காணப்பட்ட நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்ட நால்வரில் இருவர், இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்னரும் சென்னையிலிருந்து வருகைத் தந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 14 நாட்களுக்குள் யாராவது சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளை சந்தித்து விடயங்களை தெளிவூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார தரப்பினர் தகவல்களின் பிரகாரம், சுய கண்காணிப்புக்கு உள்ளாகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் ஏற்கனவே இந்திய பிரஜையொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்தும் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்து, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கண்காணிப்பின் பின்னர் தமது வீடுகளை நோக்கி பயணித்து வருகின்றனர்.

ராணுவத்தின் கீழ் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பொலன்னறுவை - வெலிகந்த கண்காணிப்பு மத்திய நிலையத்திலிருந்து இன்றைய தினம் 60திற்கும் அதிகமானோர் தமது வீடுகளை நோக்கி பயணித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது.

அத்துடன், பூனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 78 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவினர் தமது வீடுகளை நோக்கி பயணித்துள்ளனர்.

மேலும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத் தந்து, வவுனியாவில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 167 பேர் இன்று தமது வீடுகளை நோக்கி சென்றுள்ளனர்.

5000 திற்கும் அதிகமானோர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதனை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1358 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 20ஆம் தேதி முதல் இன்று நண்பகல் வரையான காலப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படும் யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடைக்கிடை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, அந்த பகுதிகளுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி