1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தி/கூட்டணி

தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் கையெழுத்திட்டு உருவாக்கப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) ஆவணத்தின் அடிப்படையிலான மலையக சாசனம் (மலையக விஞ்ஞாபனம்)

திரு. சஜித் பிரேமதாச அவர்கள்  தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இலங்கை வாழ் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் இனம், குறிப்பாக பெருந்தோட்டத் துறையில் வாழ்கின்ற மக்கள், எதிர்நோக்கும் சவால்களை ஏற்றுக்கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) எனும் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஜனநாயக மக்கள் முன்னணி (DPF), தொழிலாளர் தேசிய முன்னணி (WNF) மற்றும் மலையக மக்கள் முன்னணி (UPF) ஆகிய அமைப்புகளுக்கு இடையே ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பரந்த அரசியல் ஏற்பாட்டிற்குள் 2024 ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொழும்பில் முறையான புரிதலின் மூலம் சம்பந்தபட்ட அமைப்புகளின் தலைவர்களினால் கையெழுத்து இட்டு ஏற்படுத்த பட்ட எழுத்து மூல வெளிப்பாடு இதுவாகும். 

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையக சாசனம்

முன்னுரை

 

  1. மலையகத் தமிழ் பெண்களும், ஆண்களும் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பொது நல்வாழ்வுக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை உறுதிப்படுத்துதல்;

 

  1. ஒரு தனித்துவமான அடையாளத்துடன் கூடிய ஒரு சமூகமாக முழு அளவிலான உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை அனுபவித்து சம பிரஜைகளாகக் கருதப்படுவதற்கான அவர்களின் உரிமையையும்,  பரந்து பட்ட இலங்கையர் அடையாளத்திற்கு பங்களிப்பு செய்தலையும் அங்கீகரித்தல்; 

 

  1. சுதந்திரத்திற்குப் பிந்தைய கணிசமான காலத்திற்கு இந்த சமூகம் அதன் குடியுரிமை, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இழந்துள்ளதையும் மற்றும் இவற்றின் விளைவாக ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பெரும்பாலான சமூக-பொருளாதார மற்றும் மனித வளர்ச்சி சுட்டிகளில் பின்தங்கியுள்ளது என்பதனையும்  ஏற்றுக்கொள்ளுதல்; 

 

  1. மலையக தமிழ் சமூகத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் எந்தவொரு முன்னேற்றமும் ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மனித அபிவிருத்திக்கு சாதகமான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்பதையும் அங்கீகரித்தல்;

 

வழிகாட்டி  கோட்பாடுகள்

 

  1. சமூகத்தின் அபிலாசைகள், இலங்கையின் அரசியல், நிர்வாக, பொருளாதார மற்றும் சமூக பிரதான நீரோட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக இருக்க வேண்டும் என்பதை வரவேற்று ஆதரவளித்தல்

 

  1. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிதறியும்,  நுவரெலியா மாவட்டத்தில் செறிவாகவும், மலையக சமூகம் வாழ்வதையும்  கருத்தில் கொள்ளுதல் 

 

  1. புதிய வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களின் கணிசமான பிரிவினருடன், மலையக சமூகம் மாற்றம் அடைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுதல்

 

  1. அர்த்தமுள்ள ஒருங்கிணைப்பை அங்கீகரிக்கும் நோக்கில், 

 

  1. நன்கு வரையறுக்கப்பட்ட விசேட சாதக நடவடிக்கை குறைதீர் ஏற்பாடுகள் (Affirmative Action) உள்ளடங்களாக, இலக்கை நோக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்க பட வேண்டும்;

 

  1. மலையக தமிழ் சமூகத்தின் காணி உரிமை பிரச்சினை தீர்க்க பட வேண்டும்;

 

  1. தோட்ட நிறுவனங்களை சார்ந்திராமல், அரசாங்க சேவைகளை சமமாக பெற்றுக்கொள்ள மலையக சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; 

 

  1. கல்வி மற்றும் தொழில் திறன்களில் முதலீடு செய்தல் வேண்டும்; 

 

இதன் மூலம் நாம், பின்வருவனவற்றுக்கு உடன் படுகிறோம்;

 

(அ) <கல்வி மற்றும் தொழில் பயிற்சி மூலம் மலையக  இளைஞர்களை எதிர்காலத்திற்காக  தயார் செய்வதன் மூலம் ஒரு விரைவான  முன்னேற்றம்>

 

  1. மலையக சமூகத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வி மட்டம், தேசிய சராசரிக்கு இணையாக கொண்டு வரப்பட வேண்டி, ஒரு விசேட சாதக செயல் திட்டத்தை  (Affirmative Action)  உருவாக்குதல். இது, அரசாங்க கொள்கை, பலதரப்பு உதவிகள், இந்தத் துறையில் முந்தைய தலையீடுகள் மூலம் அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அடைய பட வேண்டும்.

 

  1. நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, குருநாகல் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை கல்வி வலயம்,  ஆகிய இடங்களில் மொத்தம் 25 பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி, அங்கு விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பப் பாட பிரிவுகளை மேம்பட செய்தல்.

 

  1. தொடர்பு பட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற தீர்மானங்கள் ஆகியவற்றின்  அடிப்படையில் பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் முகமாக தோட்டப்  பிரதேசங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் விளையாட்டு மைதானங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். அனைத்து தோட்டப் பள்ளிகளுக்கும், விளையாட்டு மைதானம் உட்பட தேவையான அவசியமான காணிகள் குறித்து உடனடியாக ஆய்வு வரையறை, கணக்கெடுப்பு மேற்கொண்டு எல்லைகளை அடையாளப்படுத்தி அவற்றுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குதல்.

 

  1. மலையக, தமிழ் சமூகத்தினரின் சிறப்புத் தேவைகளுக்காக தமிழ் மொழியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் (STEM) ஆகிய பாடங்களை போதிக்கும் ஆசிரியர்ககளை பயிற்றுவிக்க முழு அளவிலான கல்வியியல் கல்லூரியை  ஸ்தாபித்தல். தேவையான தகுதியைக் கொண்டுள்ள பொருத்தமானவர்களைக் கொண்டு தோட்டப்பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுதல். தற்காலிக ஏற்பாடாக வெளியில் இருந்து பொருத்தமானவர்களை தெரிவு செய்து வெற்றிடங்களை நிரப்புதல்.
  1. பெருந்தோட்டப் பகுதிகளில் பாலர் வகுப்பு கல்வியை முறைப்படுத்தவும் ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன் முன்பள்ளி மற்றும் ஆரம்ப மட்ட பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டங்களின் ஊடாக போசாக்களித்தல்.

 

  1. யுனெஸ்கோ வழிகாட்டுதலின்படி பெருந்தோட்ட பகுதி தமிழ்ப் பிள்ளைகள் தங்கள் தாய் மொழியில் கற்பதற்கு அருகாமையில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அனுமதி பெறுவதனை உறுதி செய்தல். இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தல். 

 

  1. தேவைப்பாடுள்ள குழந்தைகளுக்கான விடுதி வசதிகளுடன் கூடிய குடியிருப்புப் பாடசாலைகளை உருவாக்கி, தேவையான இடங்களில் நிறுவுதல்.

 

  1. தொலைதூர பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் குடியிருப்புகளுக்கான சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

 

  1. பெருந்தோட்டப் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அடைகாக்கும் மையங்களை உருவாக்க இருதரப்பு மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை உறுதி செய்தல்.

 

  1. இலங்கை ஹைலண்ட் பல்கலைக்கழகம் (மலையக பல்கலைக்கழகம்)  என்ற முன்மொழியப்பட்ட பெயருடன், முழு அளவிலான பல்கலைக்கழகத்திற்கான முதற் படியாக, ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு வளாகத்தை ஹட்டனில் நிறுவ நடவடிக்கை எடுத்தல். முன்மொழியப்பட்ட நிறுவனம் தொடக்கத்தில் நவீன மற்றும் ஏற்றுமதி விவசாயம், உணவு விஞ்ஞானம், கால்நடை அபிவிருத்தி, பெருந்தோட்ட ஆய்வுகள், தகவல் தொழில்நுட்பம், நில அளவை ஆய்வு (QS), கல்வி, மொழிகள், மலையகக் கலை மற்றும் கலாச்சார ஆய்வுகள், சுற்றுலா, விருந்தோம்பல் முகாமை, வணிக முகாமை, நிதி முகாமை, இயற்கை வள முகாமை, சுற்றுச்சூழல் அறிவியல், மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து பட்டப்படிப்புகளை ஆரம்பித்தல்.

 

  1. மலையக இளைஞர்களின் தொழில் பயிற்சிக்கு அர்ப்பணிப்புள்ள பயிற்சி நிறுவனங்களைத் அமைப்பதன் மூலம் தமிழ் மொழி மூலம் தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அவசியமான  கற்கைநெறிகளை அறிமுகம் செய்தல். மலையக இளைஞர்களை உள்வாங்குவதற்கான நுழைவு அளவுகோல்களை உறுதிசெய்து, கல்வியை பூர்த்தி செய்து  முடிக்கும் வரை  மாணவர்களுக்கு மானியம் மற்றும் உதவித்தொகையை வழங்குதல்.

 

  1. விசேட தாதியர் பயிற்சி நிலையமொன்றை அமைத்து மலையக இளம் யுவதிகளை பராமரிப்புப் பணியில் நிபுணத்துவம் உள்ளவர்களாக பயிற்று வித்தல்.

 

  1. தொழில் வழிகாட்டுதல் மூலம் மலையக இளைஞர்களின் தொழில் முனைவோருக்கு ஆதரவு, தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க  நிதி உதவி,  பெருந்தோட்ட நிர்வாகத்தின் அனுமதி அவசியமற்ற வணிகப் பதிவு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவினை  வழங்குதல்.

 

(ஆ) <சுகாதாரம், போசாக்கு மற்றும் நலவுரிமை>

 

  1. தொடர்பு பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக  தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் தோட்டத் துறையில் உள்ள அனைத்து சுகாதார வசதிகள்/நிறுவனங்களையும் மாகாண மற்றும் தேசிய சுகாதார வலையமைப்புடன் ஒருங்கிணைத்தல்.

 

  1. ஏனைய குடிமக்களுக்கு இணையாக மலையக சமூகத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சுகாதார பாதுகாப்பில் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக தகுதியான வைத்திய நிபுணர்களை நியமித்தல்.

 

  1. குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய நிலை, இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே ஏற்படும் இரத்த சோகை மற்றும் தேசிய சராசரியை விட மோசமாக இருக்கும் தாய் சேய் இறப்பு வீதம் போன்ற பிற முக்கியமான சுகாதார குறிகாட்டிகளை நிவர்த்தி செய்ய ஊட்டச்சத்து குறைநிரப்பி உள்ளிட்ட இலக்குகளை கொண்ட திட்டத்தை செயல் படுத்தல்.

 

  1. பெருந்தோட்டப் பகுதிகளில், பொது சுகாதார கண்காணிப்புச் சேவைகளை (PHI) விரிவு படுத்துவதன் ஊடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட தோட்ட பகுதிகளில் புதிய பொது சுகாதாரப்  கண்காணிப்பாளர் சேவை வலயங்களை நிறுவுவதன் மூலமும் பொதுச் சுகாதார சேவைகளை மேம்படச்செய்தல்.

 

  1. சமூகத்தின் வறுமை நிலைமை மற்றும் பிற குறை வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து அஸ்வெசும போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முன்னுரிமை அளித்தல்.  

 

(இ) <தோட்டங்களில் வாழ்வாதார காணி உரிமை மற்றும் வேலை வாய்ப்பு>

 

  1. தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட விவசாயிகளாக மாற்றுவதற்கான விரிவான அரசாங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்தி, தேயிலை கைத்தொழிலை பாதுகாத்தல். இந்த நோக்கத்துக்காக நுவரெலியா மற்றும் பிற மாவட்டங்களில் நிலப் பயன்பாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் பல்வேறு தோட்டப் பகுதிகளின் அடிப்படை புவியியல் நிலைமைகளை கருத்தில் கொள்ளல். 

 

  1. சிறு தோட்ட உரிமையாளர் என்ற  கொள்கையை நடைமுறை படுத்தும் தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் போது, தொடர்புற்ற பங்குதாரர்களால் முன்வைக்கப்படும் பல்வேறு மாற்று யோசனைகளை பரிசீலனை செய்து, வெவ்வேறு மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான வழிவகைகளை தீர்மானித்தல். 

 

  1. தோட்டத்துறை கூட்டுறவு திணைக்களத்தை நிறுவி, தொழிலாளர்கள் சிறு தோட்ட விவசாயிகளாக மாறும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் அதிகாரசபையில் அல்லது தோட்டத்துறை கூட்டுறவு திணைக்களத்தில் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தினை வெளியிட வழி செய்தல்.

 

  1. தொழிலாளர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக்கப்படுகின்ற இந்த நிலைமாறு காலத்தில், அரசாங்கத்தின் தீவிர ஈடுபாடு  மற்றும் பங்குதாரர் ஒப்பந்தங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு கௌரவமான ஊதியம் பெறுவதனை உறுதி செய்தல்.

 

  1. தேயிலை பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு, வீட்டு தோட்டம் மற்றும் பிற தொழில் முனைவோர் நடவடிக்கைளுக்கு முன்னுரிமை அளிக்கும் வாழ்வாதார நோக்கங்களுக்காக அவ்வந்த தோட்டங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கைவிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத காணிகளை, தோட்டங்களில் வசிப்பவர்களுக்கு பகிர்ந்தளித்தல்.

 

  1. தேசிய உணவு பாதுகாப்பிற்கு பங்களித்து வரும் தோட்டங்களில் குடியிருப்பவர்களால் ஏற்கனவே நீண்ட காலமாக பயிரிட பட்டு வரும் காணிகளுக்கு பாதுகாப்பான காணி உறுதிகளை நெறிப்படுத்தி வழங்குதல்

 

  1. மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் பொது அரச துறை மற்றும் அரை-அரச நிறுவனங்களுக்கு  ஆட்சேர்ப்பு செய்யும் போது  மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மலையக சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்தல். இது வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு காலக்கெடுவுக்கு உட்பட்ட சாதகமானதும், உறுதியானதுமான  செயல் திட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த திட்டத்தில் மலையக, இளைஞர்கள் வேலை  வாய்ப்புகளில் நுழைவதற்கு ஏற்ற சிறப்பு அளவுகோல்கள் இருக்க வேண்டும்.

 

  1. தனியார் தோட்டங்கள் உட்பட தோட்டப் பகுதிகளில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பிற சட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதை மேற்பார்வை செய்வதை வலுப்படுத்த தொழில் திணைக்களத்தினால் ஒரு சிறப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதுடன் தோட்டப் பகுதிகளில் தமிழ் பேசும் தொழில் திணைக்கள பரிசோதகர்களை நியமிக்க ஏற்பாடு செய்தல்.

(ஈ) <குடியிருப்பு காணி உரிமை மற்றும் புதிய கிராமங்கள்>

 

  1. தோட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டை அமைக்க காணி உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்யத் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தல். காணிகள் கலந்துரையாடல் முறையில் தெரிவு செய்ய பட்டு, புவியியல் ரீதியாக அண்மைய போக்குவரத்து வீதியை எளிதில் அணுகக்கூடியதாக அமைய வேண்டும். தாம் வசிக்கும் இடத்திலேயே வசிப்பது அல்லது வீடமைக்க புதிய காணியை பெறுவது தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் காணியின் அளவு, அதே பிரதேச செயலக பகுதியில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கு வழங்கப்படும் காணி உரிமை அளவுகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு வழங்க படும் அதே சட்டபூர்வ அந்தஸ்துடன் காணி உறுதிகள்  இருக்க வேண்டும். ஒரு குடும்பம்/வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் கூட்டு உரிமை வழங்கப்பட வேண்டும். திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். ஒவ்வொரு குடும்பமும் வீட்டு மனைக்காக காணியை பெற உரிமை உடையவர் ஆவர்.

 

  1. இந்த காணிகளில் தமது சொந்த நிதியை பயன்படுத்தி வீடுகளை நிர்மாணிக்க விரும்புபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிர்வாக உதவிகளை  வழங்குதல்.

 

  1. வீடமைக்க நிதியுதவி தேவைப்படும் வறிய மலையக குடும்பங்களுக்கு அரசாங்க நிதியுதவி வீட்டுத் திட்டங்களில் இடமளித்தல். மலையகத் தமிழ் சமூகத்திற்கு வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை நிர்மாணிக்க இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி (சர்வதேச) உதவிகளை அரசாங்கம் தீவிரமாக பெற வேண்டும். 

 

  1. கடந்த மூன்று தசாப்தங்களில் பல்வேறு அரசாங்க திட்டங்களின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கான உரிமை பத்திரங்களை முறைப்படுத்தி வழங்குதல்.

 

  1. குடிநீர் வழங்கள் மற்றும் வடிகால் வசதிகள் தொடர்பில், தேசிய சராசரிக்கு ஏற்ப நிலைமையை தோட்ட சமூகத்தினரிடையே கொண்டு வருவதை இலக்காக கொண்டு, அரசால் இயக்கப்படும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் வசதி திட்டங்களைச் செயல்படுத்துதல்.

 

  1. பெருந்தோட்ட மனித குடியிருப்புகளை தேவையான பௌதீக மற்றும் சமூக வசதிகளுடன் கூடிய புதிய கிராமங்களாக உருவாக்குதல். தோட்டங்களில் நகரங்கள் மற்றும் புதிய கிராமங்களை உருவாக்குவதில் அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கு, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NEVIDA) அதிகாரம் அளித்து, போதுமான நிதியையும்  வரவு செலவுத்திட்டம் மூலமாக  வழங்குதல். 

 

உ<மாகாணங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் தமிழ் மக்களுக்கான ஆதரவுக் கட்டமைப்பு>

 

  1. காத்திரமான சமூக வள மையங்களை நிறுவி, அவற்றில் குறைந்த வருமானம் உள்ள இடம்-பெயர் மலையக இளைஞர்களுக்கு தொழில்முறை வழிகாட்டுதல், தொழில் பயிற்சி,  தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் மென் திறன்கள் பயிற்சி, கலாச்சார மேம்பாடு  மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.

 

  1. கஷ்டமான வாழ்விடங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியேறி வசிக்கும் இந்த இடம்-பெயர் குடும்பங்களை, நகர்ப்புற குறை வருமான மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உட்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒருங்கிணைத்து,  அவர்களை தற்போதைய துன்புறு நிலைமைகளில் இருந்து மேம்படச்செய்தல்.

 

  1. வீட்டுப்பணியாளர் பாதுகாப்பு மற்றும் பணியிட துன்புறுத்தல் பற்றிய தொடர்பான சர்வதேச தொழில் அமைப்பின் (ILO) நியமங்களை அங்கீகரிக்கவும், இந்த துறையில் உள்ள ஆயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், வீட்டு பணி தொழில் துறையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இயற்றுதல்

 

  1. இக்குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும்  நகர்ப்புற தமிழ் மொழி மூல பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் மனித வளத் தேவைகளை பூர்த்தி செய்தல்.

 

  1. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் உட்பட நகர்ப்புற மையங்களில் நிரந்தரமாக வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் முறையான வாக்காளர் பதிவு செயல்பாட்டில் உள்ள நிர்வாக சிக்கல்களை நிவர்த்தி செய்தல்.

 

(ஊ) <மலையகத் தமிழர்களை பொது அரச நிர்வாகம் மற்றும் தேசிய நீரோட்டத்தின் கீழ் கொண்டு வருதல்>

 

  1. புதிய எல்லை நிர்ணயம் மூலம் பெருந்தோட்ட பிரதேசங்களில் கிராம சேவையாளர் (GN)  மற்றும் பிரதேச செயலக (DS)  பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். மலைநாட்டின் போக்குவரத்து சிரமம் மற்றும் நிலப்பரப்பின் புவியியல் பரவல் காரணங்களினால்,  பிரிவுகளின் எல்லை நிர்ணய அடிப்படை வரம்புகள், தேசிய சராசரி வரம்புகளுக்கு குறைவான மக்கள் தொகை மற்றும் புவியியல் எல்லைகளை கொண்டதாக இருக்க செய்தல். 

 

  1. நுவரெலியா மாவட்டத்தில், ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய பிரதேச செயலக அலுவலகங்கள் முழுமையாக இயங்குவதற்கு போதிய வளங்களை ஒதுக்கீடு செய்தல்.

 

  1. நாட்டின் கிராம சேவையக, பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக மட்ட அரச நிறுவனங்களின் பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தினால் வழங்க படுகின்ற நலன்புரி சேவைகளை பெறுகின்ற சமமான வாய்ப்புகளை பெருந்தோட்ட வாசிகளுக்கும் அளிப்பதன் மூலம், தோட்ட நிர்வாகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்  என்ற நிலையில் இருந்து, நாட்டின் முழுமையான குடிமக்களாக அவரகளை மாற்றல். 

 

  1. தோட்டங்களில் உள்ள வீதி கட்டமைப்பை உள்ளூராட்சி, மாகாண மற்றும் மத்திய அரசாங்க அமைச்சகத்தின் ஆளுகைகளின் கீழ் கொண்டு வந்து, அவற்றை வழமையான பராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காக தேசிய (சாலை) கட்டமைப்பில் ஒருங்கிணைத்தல்.

 

(எ) <மலையகத் தமிழர்களை ஆட்சியில் பங்குதாரர்களாக்குதல்>

 

  1. தீவின் பெரும்பாலான பகுதிகளில் சிதறி பரந்தும், நுவரெலியா மாவட்டத்தில் செறிவாகவும் வாழும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு, மத்தியிலும், பிராந்தியங்களிலும்,  அதிகாரப் பகிர்வை உறுதி செய்தல். இது தேசிய மட்டத்தில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் மாகாண மட்டங்களில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மட்ட அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

 

  1. மலையகத் தமிழ் சமூகத்தின், பரந்து வாழும் ஜன தொகை அமைவை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்த செயல்பாட்டில், ஒரு ஆளுகை அமைப்பாக நிலவரம்பற்ற சமூக சபை  (Non-Territorial Community Council - NTCC) என்ற நிறுவனத்தை உருவாக்குதல். பரந்து வாழுகின்ற  இந்த சமூகத்தின் நலன்களைக் கவனிக்கும் ஆணையை இந்த நிறுவனம் பெற்றிருக்கும். பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் மலையக வம்சாவளியை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பிரதிநிதித்துவம் இல்லாத பிரதேசங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையக வம்சாவளி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த சபையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் சட்டங்கள் மற்றும் விதி முறைகளில், மலையகத்  தமிழ் சமூகத்தின் கலாச்சார, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவற்றை கண்காணித்தல், ஆய்வு செய்தல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுவதற்கான ஆலோசனை மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் இந்த நிறுவனத்திற்கு இருக்க வேண்டும்.

 

  1. புதிய எல்லை நிர்ணயம் மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மலைநாட்டின் போக்குவரத்து சிரமம் மற்றும் நிலப்பரப்பின் புவியியல் பரவல் காரணங்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பிரதேச சபை (PS) பிரிவினதும் நிலப்பரப்பின் எல்லை நிர்ணய அடிப்படை வரம்புகள், தேசிய சராசரி வரம்புகளுக்கு குறைவான மக்கள் தொகை மற்றும் புவியியல் எல்லைகளை கொண்டதாக இருக்க செய்தல். 

 

  1. பெருந்தோட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்க பட்ட பிரதேச சபைகளை நகர சபைகளாகவும், நகர சபைகளை மாநகர சபைகளாகவும் தரம் உயர்த்தல்.

 

  1. அரசியலமைப்பு சட்டமான மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல். தமிழ் பேசும் பணியாளர்கள் மற்றும் மொழி பெயர்ப்பாளர்களை நியமிப்பதன் மூலம் சமூகம்  அரச அதிகாரிகளுடன் தமிழில் தொடர்பாட முடியும் என்பதை உறுதிப்படுத்தல். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 4 இன் கீழ் தேவைப்படும் இரு மொழி பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நடவடிக்கைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தல்.

 

  1. பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில், விகிதாசார தேர்தல் முறையை பேணுதல். மலையகத்  தமிழ் சமூகத்தின் சனத்தொகை வீதத்திற்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் எல்லை நிர்ணய செயல் முறையை நடைமுறை படுத்தல்.

 

  1. அரசியலமைப்புச் சபை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அத்தகைய பொறிமுறைகள் உட்பட தேசிய அமைப்புகளில் மலையகத் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல்.

 

  1. மலையக சமூகத்தின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NEVIDA) போதுமான வள வசதிகளை வழங்குதல்.                          

                                                                                                                     

                             கையொப்பங்கள் 

கௌரவ. சஜித் பிரேமதாச பா.உ கௌரவ. மனோ கணேசன் பா.உதலைவர் ஐ.ம.க & ஐ.ம.கூ             த.மு.கூ(TPΑ) தலைவர்                                                    எதிர்க்கட்சித்தலைவர்                         தலைவர் – ஜ.ம.மு                                           இலங்கைப் பாராளுமன்றம்

 

கௌரவ. பி.திகாம்பரம் பா.உ கௌரவ. வி.ராதாகிருஷ்ணன் பா.உ

தலைவர் - தொ.தே.மு (WNF)                 தலைவர் – ம. ம. மு. (UPF)   

   பிரதி தலைவர் - TPA                         பிரதி தலைவர் - TPA

 

                       கௌரவ. எம்.உதயகுமார்

          TPA பாராளுமன்ற உறுப்பினர் – நுவரேலியா மாவட்டம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி