1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

- தேசிய, சர்வதேச நிறுவனங்களின்

பெயர்களில் போலியான விளக்கப்படங்களும் வெளிவருகின்றன. 

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டுள்ள நிலையில், பிரபல்யமான கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் பெயர்களையும், சின்னங்களையும் பயன்படுத்தி போலியான பல கருத்துக்கணிப்பு அறிக்கைகள் வெளிவருவதனை factseeker இனால் அவதானிக்க முடிந்துள்ளது. 
 
இவ்வாறான போலியான கருத்துக்கணிப்புகள் மூலமாக மக்களை குழப்பும் மற்றும் தவறாக வழிநடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
அந்த வகையில் அண்மையில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் logically.ai அமைப்பின் முத்திரையைப் பயன்படுத்தியும், அதேபோல் பிரித்தானிய நிறுவனமென குறிப்பிடப்படும் Brighouse Data Analytical center நடத்தியதாகக் கூறப்படும் ஒரு கருத்துக்கண்ணிப்பு வெளியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. 
 
இந்த கருத்துக்கணிப்புக்கு அமைய,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெறுவார் எனவும், தேசிய மக்கள் சக்தியின் ( NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க  இரண்டாவது இடத்தில் உள்ளார் எனவும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் (SJS)  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மூன்றாவது இடத்தில் உள்ளார் எனவும் விளக்கப்படம் ஒன்றுடன் கூடிய பதிவொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது. 
 
IMG 20240917 WA0436
 
இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான 90% வாக்காளர்களின் டிஜிட்டல் நடத்தைகளை ஆய்வு செய்ததாகக் கூறப்படும் இந்த கணக்கெடுப்பானது செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று மாலை 3 மணிக்கு நடத்தப்பட்டது எனவும், Mr.Brian murphy இன் உறுதிப்படுத்தலின் கீழ் இந்த கணக்கெடுப்பு தரவுகள் வெளியிடப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய factseeker அவதானம் செலுத்தியது. 
 
அதற்கமைய, Brighouse Data Analytical center என்ற நிறுவனம் தொடர்பில் factseeker ஆராய்ந்து பார்த்ததில், Brighouse Data Analytical center என பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்று பிரித்தானியாவில் இயங்கவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. எனினும் இந்த கருத்துக்கணிப்பை உறுதிப்படுத்தியதாக கூறப்படும் Mr.Brian murphy என்பவர் Logically.AI நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஆவார். 
 
ஆகவே Logically.AI நிறுவனத்தினால் இவ்வாறான ஒரு கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதா என வினவியபோது, Logically.AI நிறுவனத்தின் தகவல் தொடர்புகளின் உலகளாவிய தலைவர்
 
ஹோலி மெர்சர் (Holly Mercer) தாம் இவ்வாறான எந்தவொரு கருத்துக்கணிப்பையும் முன்னெடுக்கவில்லை என factseeker இடம் தெரிவித்திருந்தார். 
 
அத்துடன்,Logically.AI யின் உத்தியோகபூர்வ முத்திரையை பயன்படுத்தி இவ்வாறு பகிரப்படும் விளக்கப்படத்துடன் கூடிய செய்தியானது Logically.அல்லது அதன் துணை நிறுவனங்களின் தயாரிப்பு அல்ல எனவும், இவ்வாறு பகிரப்படும் விளக்கப்படம் எம்மால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு என்பதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் என்பதையும் உத்தியோகபூர்வமாக factseeker இடம் உறுதிப்படுத்தினர். 
 
"தர்க்கரீதியாக தவறான தகவல், போலியான தகவல் மற்றும் இணைய  அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இணைய தகவல் ஒருமைப்பாட்டிற்கு பொறுப்பான நிறுவனமாக, நாங்கள் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் இந்த தவறான செயல்பாட்டின் தோற்றம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.  மேலும், இவ்வாறான தவறான தகவல் மற்றும் போலியான தகவல்களின் கூடுதல் நிகழ்வுகளை முறைப்பாடு செய்ய , எம்மை தொடர்பு கொள்ளுமாறு உண்மைச் சரிபார்ப்பவர்களையும், ஊடகவியலாளர்களையும்  நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." எனவும் Logically. நிறுவனமானது factseeker இடம் தெரிவித்தது. 
 
மேலும்,  90% வாக்காளர்களின் டிஜிட்டல் நடத்தைகளை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்ததாக இந்த விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்தத் தரவுகளும் உண்மையில்லை என்பதையும் factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது. 
 
2024 இல் இலங்கையின் டிஜிட்டல் நிலையை கருத்தில்கொள்ளும் போது, 
 
- 2024 இன் தொடக்கத்தில் இலங்கையில் டிஜிட்டல் பயன்பாட்டில், 12.34 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளதாகவும், இது மொத்த சனத்தொகையில் 56.3 சதவீதமாகும் எனவும், 
 
- 2024 ஜனவரியில் இலங்கையில் 7.50 மில்லியன் சமூக ஊடகப் பயனர்கள் உள்ளனர், இது மொத்த சனத்தொகையில் 34.2 சதவீதமாகும் எனவும், 
 
- 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் மொத்தம் 32.49 மில்லியன் கையடக்கக்தொலைபேசி இணைப்புகள் செயல்பாட்டில் இருந்ததாகவும், இது மொத்த சனத்தொகையில் 148.2 சதவீதத்திற்கு சமமானதாகும் எனவும் சமீபத்திய DataReportal புள்ளிவிவரங்களின்படி தெரிய வருகின்றது. 
 
ஆகவே, factseeker இன் ஆய்வு மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த விளக்கப்படத்துடன் கூடிய பதிவானது போலியான ஒன்று எனவும், மக்களை குழப்பும் விதத்தில் இந்த விளக்கப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி