1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் பிரதம நீதியரசர்களுள் ஒருவரான அசோக த. சில்வா கோத்தாபய ராஜபக்ஷவுக்காக கலிபோனியா நீதிமன்றத்தில் ஆஜரானமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரால் மீண்டும் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது தொடர்பில் சட்ட நிபுணர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளில் கருத்துக்களைத் தெரிவித்திருந்ததைக் காணக் கூடியதாக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ தனது தந்தையைக் கொலை செய்வதற்கு “சதி செய்தல், ஒத்துழைப்பு வழங்கியமை அல்லது உடந்தையா இருந்தமை” தொடர்பில் குற்றம் சுமத்தி ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க கலிபோனியா நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.  எவ்வாறாயினும், தனது சேவை பெறுனர் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் எந்த வகையிலும் தொடர்பட்டிருக்கவில்லை என கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

கலிபோனியா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்யாது தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர்களுள் ஒருவரான அசோக த. சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் பிரதிவாதி கோட்டாவுக்காக மனு தாக்கல் செய்து வாதிட்டனர்.

ஓய்வு பெற்றதன் பின்னர் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா?

இது தொடர்பில் பீபீசி சிங்கள சேவை ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் த அல்விஸிடம் கேட்ட போது, “இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் உச்ச நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதிகளால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது. ஆனால் நீதிமன்றத்தில் அறையில் இருந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க முடியும். (Chamber Practise). இதுவே சாதாரண சம்பிரதாயம்” எனக் கூறியுள்ளார்.

”ஆனால் ஜனாதிபதியின் அனுமதியுடன் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியும். முன்னாள் பிரதம நீதியரசர் அசோக த. சில்வா ஆஜராகியிருப்பது வேறு நாடொன்றின் நீதிமன்றத்தில் என்பதால் தொழில்நுட்ப ரீதியில் பிரச்சினைகள் எழப் போவதில்லை”

“சட்ட விடயத்தில் நாம் சொற்களுக்கு வரைவிளக்கணம் வழங்குகின்றோம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் அசோக தி. சில்வா தவறு செய்யவில்லை. ஆனால் பாராளுமன்றம் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கத்தையும் பார்க்க வேண்டும்.  உயர் மட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீண்டும்  சட்டத்துறைக்கு வந்து செயற்படும் போது சுயாதீனத் தன்மை தொடர்பில் பிரச்சினைகள் எழலாம். அதேபோன்று ஏனைய நீதிபதிகளுக்கும் அழுத்தங்கள் ஏற்படக் கூடும்.  உதாரணமாக, முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் வந்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராரகினால் அதன் மூலம் நீதவானுக்கு அழுத்தங்கள் ஏற்படக் கூடும்”
Gota lasantha

“இவ்வாறான காரணங்களால்தான் இவ்வாறான பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் வெளிநாட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியது இதற்கு தாக்கத்தைச் செலுத்தாது. உண்மையிலேயே இதில் இருப்பது ஒரு தார்மீக விடயமாகும். உலக நாடுகளின் உயர் மட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் மீண்டும் நீதிமன்றங்களில் ஆஜராகாமலிருப்பது தார்மீகக் காரணங்களினாலாகும். எனினும் அண்மைய காலங்களில் இலங்கையின் பிரதம நீதியரசர்கள் வங்கி பணிப்பாளர் பதவிகளையும் கூட பொறுப்பேற்றிருக்கின்றார்கள். இதனை இதுவரையில் எவரும் சவாலுக்கு உட்படுத்தவில்லை” என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

“சட்டம் தொடா்பில் நம்பிக்கை இல்லாமல் போகும்”

சட்டத்தரணி நுவன் போபகே இது தொடர்பில் பீபீசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் இவ்வாறு சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியதன் ஊடாக சட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை இல்லாமல் போகும் எனத் தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கள வழங்கிய பின்னர் அது நாட்டின் சட்டமாக ஆகிவிடும். அந்த சட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு, நம்பிக்கைத் தன்மை போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்பில் அரசியலமைப்பில் சட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உதாரணமாக, பிரதம நீதியரசர் ஒருவர்  கோத்தாபய ராஜபக்ஷவின் வழக்கு ஒன்றில் அவருக்குச் சார்பாக தீர்ப்பை வழங்குகின்றார். அந்நேரத்தில் பொது மக்கள் நினைப்பது அது பக்கச்சார்பான தீர்ப்பு என்றேயாகும். அதே போன்று அந்த தீர்ப்பு நாட்டின் சட்டமாகவும் ஆகிவிடும். எனினும் அதற்குப் பின்னர் பிரதம நீதியரசர் ஓய்வு பெற்ற பின்னர் அதே நபருக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அதனால் மக்களிடத்தில் சட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படுத்தப்படுகின்றது. அத்துடன் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு இருக்கும் பெறுமதி மற்றும் பாரம் இல்லாமல் போகின்றது”

“இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர்கள் அரசியல் மேடைகளில் ஏறியிருக்கின்றார்கள். தற்போது இந்த முன்னாள் பிரதம நீதியரசரான அசோக த. சில்வா சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கின்றார். இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் அல்லது நீதிமன்றங்கள் நூற்றுக்கு நூறு வீதம்  சுயாதீனமானதா? என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.

சமூக வலைத்தளத்தில் பதிவான கருத்துக்கள்

“இது விதிகள், சம்பிரதாயங்கள் தொடர்பான கதை.... சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்கு அவருக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை...”

சிந்தா ஆட்டிகல முகநூலில் தனது கருத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

“...முன்னாள் பிரதம நீதியரசருக்கு இது தொடர்பில் ஏதேனும் சட்ட ரீதியான பதில் இருந்திருக்கக் கூடும். என்றாலும், இவ்வாறு ஆஜராகியதன் மூலம் இலங்கை நீதிமன்ற சம்பிரதாயங்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் ஒருவர் இவ்வாறு வேறு நாடொன்றின் கீழ் நீதிமன்றத்தின் நீதிபதியின் முன்னால் ஆஜராகியதன் மூலம் இலங்கை அரசாங்கமும், அதன் நீதிமன்ற கட்டமைப்பு படிநிலையும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய முன்னாள் பிரதம நீதியரசர்களும், முன்னாள் உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும் இவ்வாறு நீதிமன்றங்களில் ஆஜராக ஆரம்பித்தால் நிலைமை எவ்வாறானதாக ஆகும்?” என துலான் தசநாயக்கா முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மலீஷா குமாரகே முகநூலின் ஊடாக தெரிவித்த கருத்தில்  “தனது நிலையைப் பற்றியும் சிந்திக்காது பணத்திற்காக வலையும் இவ்வாறானவர்கள் நீதிபதிகளாக இருந்த காலத்தில் விசாரணை செய்த வழக்குகளுக்குச் சரியான தீர்ப்புக்களை வழங்கியிருப்பார்களா? என்ற சந்தேகம் எழுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அசோக த சில்வா

இலங்கையின் 42வது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட அசோக த சில்வா கண்டி சென் அந்தோனி வித்தியாலயத்தில் கல்வி கற்று 1967ம் ஆண்டில் கொழும்பு பீடத்தில் அனுமதிபெற்றுள்ளார். அதன் பின்னர் சட்டக்கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்ததன் பின்னர் 1972ம் ஆண்டு சட்டத்தரணியாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.


1981ம் ஆண்டு அரச சட்டத்தரணியாகச் செயற்பட்ட அவர் 1987ம் ஆண்டில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகச் செயற்பட்டார்.

1995ம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணைந்து கொண்டதோடு 2001ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2004ம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் அவர் ஐக்கிய நாடுகளின் இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதி பதவியையும் வகித்துள்ளார்.

2009ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையில் அவர் இலங்கையின் பிரதம நீதியரசராகவும் செயற்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி