1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இனவாதி என்று அகில இலங்கை

மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி  எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை. அந்த முடிவையும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க மு.கா மற்றும் அ.இ.ம.கா கட்சி தலைவர்கள் முடிவு செய்தாலும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கரத்தை பலப்படுத்தவே முன்வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க ஏற்கெனவே முஸ்லிம்கள் தீர்மானித்திருந்த நிலையில் இறுதி நேரத்தில் முஸ்லிம் கட்சித் தலைமைகள் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்த அவர்கள் இம்முறையும் கட்சித் தலைவர்கள் இறுதி நேரத்தில் தமது முடிவை மாற்றக் கூடும் எனவும் குறிப்பிட்டனர்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷராப், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இதனைத் தெரிவித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்கள், சஜித் பிரேமதாஸ இனவாதி என்றும் அவரை ஆதரிக்கக் கூடாது எனவும் கட்சியிலுள்ள பலரும் கோரியும்  முதுகெலுப்புடன் உறுதியாக முடிவெடுக்க கட்சித் தலைமை தவறிவிட்டதாகவும்  மக்கள் கருத்தறிந்து முடிவு எடுப்பதாக நாடகமாடியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷராப்

ALI SABRI RAHEEM 750x375

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தக் கட்சி சார்பில் தெரிவான 4 எம்.பிகளில் மூவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். கட்சித் தலைவர் ரிசாத் பதியுதீன் மாத்திரம் தான் சஜித்துக்கு ஆதரவான முடிவில் இருக்கிறார்.

யாருக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்க பல கூட்டங்களை அவர் நடத்தினார். அனைவரினதும் கருத்தைப் பெறுவதாக நாடகமாடி ஏற்கெனவே தீர்மானித்தவாறு சஜித் பிரேமாஸவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமும் இவ்வாறே சஜித்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரால் கட்சியிலுள்ள அனைத்து எம்.பிகளையும் இணைத்து இதனை அறிவிக்க முடியவில்லை.

கடந்த காலங்களில்  கட்சித் தலைவர் ரிசாத் பல இடங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவான கருத்துக்களை வௌியிட்டிருந்தார். 225 எம்.பிகளில் ரணில் தான் சிறந்தவர் என்றும் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். இதே வேளை சஜித் ஒரு இனவாதி என்று கட்சியைச் சேர்ந்த அப்துல்லா மஹ்ரூப் கூட பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். சஜித் இனவாதி என்பதற்கு நாமும் சாட்சியாக இருக்கிறோம். கட்சித் தலைவர் ரிசாத் பயங்கரவாதி என அநியாயமாக கைதானபோது சஜித் தரப்பு அவருக்காக குரல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால்  வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றிக்கடன் செலுத்த தயாராகிவிட்டனர். யாரை ஆதரிப்பது என அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டனர். கட்சித் தலைவர்கள் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தாலும் அந்தக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராகி விட்டனர். மு.காவினதும் அ.இ.ம.கா கட்சியினதும் முடிவு ஒட்டுமொத்த முஸ்லிங்களின் முடிவல்ல. சிலர் சஜித்துடன் டீல் அடித்து செயற்படுகின்றனர். நாடு குறித்து சிந்திப்பவர்கள் ஜனாதிபதி ரணிலைத் தான் ஆதரிப்பார்கள்.

வேலு குமார் எம்.பி உட்பட பலர் தமது ஆதரவை அறிவித்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் இவ்வாறான மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும்.

2015 தேர்தலில் முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க முடிவு செய்தனர். இறுதி நேரத்தில் தான் எமது தலைவர்கள் அந்த முடிவுக்கு வந்தார்கள். இம்முறையும் இவர்கள் இறுதி நேரத்தில் வெட்கமின்றி ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பதாக அறிவிக்கக் கூடும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனாதிபதி கைலாகு கொடுக்க முயன்றபோது அதனை சஜித் பிரேமதாஸ நிராகரித்து அநாகரிமாக நடந்து கொண்டார். இதே போன்று தான் தேசிய பட்டியல் எம்.பியாக ரணில் விக்ரமசிங்க முதன்முறையாக பாராளுமன்றம் வந்த போது சகல கட்சியினரும் அவரை வாழ்த்தினார்கள். சஜித் மாத்திரம் தான் கண்டுகொள்ளாமல் இருந்தார். இத்தகைய நபர் எந்த வகையிலும் நாட்டுக்கு பொருத்தமானவரல்ல. ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் விறகு அடுப்பு  யுகத்திற்கு செல்வதாக சிலிண்டரை ஏற்பதா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்:

நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தலைவராக இருக்கிறேன். யாரை ஆதரிப்பது என நாடெங்கும் மக்கள் கருத்தறிவதாக கட்சித் தலைவர் கூறினாலும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததைத் தான் அங்கு பலரும் பேசினார்கள். சஜித்துடன் டீல் செய்துள்ள அமீர் அலி தான் இந்த ஆதரவு முடிவின் பின்னணியில் இருக்கிறார்.

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் மக்கள் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தயாராகி விட்டனர். அவர் தான் நாட்டை மீட்டார். இனமத பேதங்களை ஒழிக்கக் கூடிய தலைவர் அவர் ஒருவர் தான். ஆனால் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு எந்த நிபந்தனையுடன் இவர்கள் சென்றார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. நாட்டுக்காக அன்றி தனிப்பட்ட நலனுக்காகத் தான் இவர்கள் சஜித்தை ஆதரிக்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகாவிட்டால் இந்த நாடு 6 மாதங்களில் இன்னொரு பங்களாதேஷாக மாறிவிடும்.

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்:

அனைத்து முஸ்லிங்களும் தன்னுடன் இருப்பதாக கட்சித் தலைவர் காண்பிக்க முயல்கிறார். மன்னாரிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணத்திலும் சுமார் 40 ஆயிரம்  வாக்குகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் போடுகிறார். சஜித் பிரேமதாஸவை ரிசாத் பதியுதீன் ஆதரித்தாலும் முஸ்லிங்கள் அவர்களுடன் செல்லவில்லை. பெரும்பான்மையான முஸ்லிங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கின்றனர். இரண்டு வருடங்களில் நாட்டை மீட்ட  தலைவரை ஆதரிக்க மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளனர்.
ரிஷாத் பதியுதீன் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறார். நாடு பற்றி எண்ணம் அவருக்கில்லை.
கேள்வி.எத்தகைய நிபந்தனையுடன் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தீர்கள்?

பதில்: (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப்)  இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் கட்சித் தலைவர்கள்  பல ஒப்பந்தங்களை செய்துள்ளனர். அவற்றில் ஏதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? கரையோர மாவட்டம், காணி விடுவிப்பு என அவர்கள் சொன்னாலும் எத்தனை அமைச்சுக்கள்,எத்தனை இராஜாங்க அமைச்சுகள்,தலைவர் பதவி எத்தனை என்று தான் அந்த நிபந்தனைகளில் இருக்கும். நாம் பொய்யான நிபந்தனைகளை வழங்கி ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டோம்.

புத்தளம் ஆஸ்பத்திரியை தரமுயர்த்துவதை ஒரு நிபந்தனையாக சேர்ப்பதாக ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். கடந்த 4 வருடத்தில் அம்பாறை மாவட்டத்தில் பீ தரத்தில் இருந்த ஆஸ்பத்திரியை நான் சாதாரண ஒரு எம்பியாக இருந்து தரமுயர்த்தி இருக்கிறேன். பல வருடம் பாராளுமன்றத்தில் இருந்த இவர் ஆஸ்பத்திரியை தரமுயர்த்துவதை நிபந்தனையாக இடுவது வெட்கக் கேடு. பலஸ்தீனத்தை தனிநாடாக மாற்றுவதை நிபந்தனையாக இடுமாறு மற்றொரு கட்சி முக்கியஸ்தர் கூறியுள்ளார். அந்த கோரிக்கை 1988 களிலே இலங்கையினால் முன்வைக்கப்பட்டு விட்டது.

சஜித் பிரேமாஸவை ஆதரிக்க எடுத்த முடிவு தவறு என்பதை எமது தலைவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கூடியவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான்.இவர்களில் இனவாதமற்ற தலைவர் யாரென்றால் அதுவும் அவர் தான்" என்றும் அவர் தெரிவித்தார். (நன்றி தெரன)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி