1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு

மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் மற்றும் பல்துறை கட்டிட நிர்மாணம் மிகப் பாராட்டத்தக்க ஒரு நிகழ்வாகும் என முன்னாள் ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,
 
2021ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பரவிக்கொண்டிருந்த கொவிட் -19 (கொரோனா) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணித்த நம் சொந்தங்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே நாங்கள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அனுமதியைப்பெற்றுக் கொண்டிருந்தோம். அதன் பலனாக , ஓட்டமாவடி மக்களின் அன்பார்ந்த அன்பளிப்பாக கிடைத்த மஜ்மா நகர் காணியில் இன்று பௌத்த, கிறித்தவ, இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி 3634பேர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  
 
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டின் ஒக்டோபர் ஓராம்  திகதி கொரோனா தொற்றினால்  காலமான பேருவளை, சீனங்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூமா ஹாஜியானி இரீபதுல் ஹைரா ஸவாஹிரின் ஞாபகார்த்தமாக, இன்று மஜ்மா நகரில் ஒரு பள்ளிவாயல் மற்றும் பன்னோக்கு கட்டிடம் ஒன்று   நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
 
சீனங்கோட்டையைச் சேர்ந்த பிரபல மாணிக்க வர்த்தகர் மர்ஹும் அப்துல் வதூத் ஹாஜியார் ஹாஜியானி ஜமீலா உம்மா தம்பதிகளின் புதல்வியான ஜனாபா மர்ஹுமா ஹாஜியானி இரீபதுல் ஹைரா ஸவாஹிரின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் ஏ.இஸட். எம் ஸவாஹிர் ஹாஜியார் மற்றும் பிள்ளைகளினால் “பைத்துல் ஹைராத்” என்ற நாமத்துடன், அழகிய தோற்றத்தோடு, அனைத்து வசதிகளுடனும் இப்பள்ளிவாயல் மற்றும் பன்னோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கும்பொது மக்கள் பாவனைக்குமாக திறந்து இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
 
உண்மையில்   பேருவளை ஸவாஹிர் ஹாஜியார் குடும்பத்தின் இந்த முன்மாதிரி பெரும் பாராட்டுக்குரியதாகும். மிகச் சிறந்த மனிதாபிமான  செயற்பாடொன்றை இன, மத வேறுபாடுகள் தாண்டி அவர்கள்  மேற்கொண்டுள்ளனர்.  ஸதகதுல் ஜாரியாவின் மிக உயர்ந்த செயற்பாடுகளில் ஒன்றாகவே இதனை கருத முடிகின்றது.
 
ஸவாஹிர் ஹாஜியார் குடும்பத்தின் இந்த முன்மாதிரியான செயலை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களின் அன்புக்குரிய ஹாஜியானி இரீபத்துல் ஹைரா ஸவாஹிர் அவர்களுக்கு  ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் வழங்கப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
 
அதேபோன்று இந்த மஜ்மா நகர் மையவாடியில் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது  தொடர்பான நடவடிக்கைகளில் ஆரம்பம் தொட்டு பல்வேறு வழிகளிலும் பங்களிப்புகளை வழங்கிய அனைவரையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன்.  அவர்களுடைய தியாகம், அர்ப்பணிப்பு காரணமாகவே நாங்கள் அரசியல் ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பான முறையில் பலனளித்தது என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
 
மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அனைவருடைய குடும்ப உறவுகளும் இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக முஸ்லிம்களின் பெருந்தன்மையான குணத்தை உணர்ந்து கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்த ஸவாஹிர் ஹாஜியார் அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் இந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும், கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் செயற்பாட்டை நீண்ட போராட்டங்களின் பின் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தவன் என்ற வகையிலும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் ஸவாஹிர் ஹாஜியார் குடும்பத்தினருக்கும் நம் அனைவருக்கும் சகல  சௌபாக்கியங்களையும் தந்து மேலான வாழ்வையும், ஈருலக வெற்றிகளையும் நல்லருள் பாலிப்பானாக என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
 
நன்றி-வஸ்ஸலாம்
 
Z.A. நஸீர் அஹமட்
முன்னாள் ஆளுநர்
(வடமேல் மாகாணம்)
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி