ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை தமிழ் முற்போக்கு
கூட்டணி வரவேற்கும். அதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது என்று கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி. வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று பார்வையிட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்த தெரிவிக்கையில்,ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிபெற செய்ய யார் வந்து இணைந்தாலும் தவறு இல்லை. ஆகையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபினையும் இல்லை.
அத்தோடு 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு காரணம் இரண்டு கட்சிகளின் இழுபறி நிலையே.
எனவே எக் காரணம் கொண்டும் இரண்டு தேசிய கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது நம்நாட்டுக்கு பொருத்தமானதல்ல. இதன் காரணமாக ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்தால் அந்த ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கும்.
அதனை உணர்ந்து மக்கள் அணைவரும் ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்வரும் பொது தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும்.
திருமணம் நடைபெற்றதன் பின்பு கணவனும் மனைவியும் சேர்ந்து பயணித்தால் தான் அந்த குடும்பம் நல்ல குடும்பமாக இலக்கை நோக்கியும் பயணித்து வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும். அப்படி இல்லாமல் திருமணத்தின் பின்பு இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எற்பட்டால் அந்த குடும்பம் தனது இலக்கை அடைய முடியாது.
சமுதாயத்திலும் அவப்பெயரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நிலையே இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எற்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாகவும் ஒத்த கருத்துடனும் ஒரே இலக்கை நோக்கி பயணித்தார்கள். அதன் மூலம் பல வெற்றிகள் கிடைத்தது.
பின்பு இருவருக்கும் இடையில் எற்பட்ட கருத்து முரண்பாடு அதன் மூலம் அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க ஆரம்பித்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் தனது இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் போய்விட்டது.
இதன் மூலம் நாங்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்த தவறை எதிர்காலத்தில் நாம் செய்ய முடியாது. மக்களும் வாக்களிக்கின்ற பொழுது சிந்தித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்கின்ற வகையில் வாக்களிப்பார்களேயானால் அது சிறப்பானதாக இருக்கும்.