1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை

ஆதரிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்துக்களைத் கேட்டறிந்து வருகிறது.

இந்நிலையில், எவரும் தங்களது கருத்துக்களைப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் கூறலாம். இந்த அடிப்படையிலேயே நானும் எனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறேன்.

எனது கருத்துக்களைப் பகிரங்கமாக தெரிவிக்க எவருக்கும் நான் அஞ்சப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  முக்கிய பிரமுகரும் திருமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஃரூப் தமிழ் லீடருக்கு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் ரணிலை ஆதரிக்கிறேனா, சஜித்தை ஆதரிக்கிறேனா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அதுவரையில் ஜனநாயக ரீதியிலான கருத்துக்கள் கூறும் அதிகாரம் எங்களுக்குள்ளது.

எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நானும் சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூற முடியும். எங்களது வாய்களை யாரும் மூடலாம் என நினைக்கக் கூடாது என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 14 ஆம் திகதிக்கு முன்னர்  எமது கட்சித்தலைவர் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் வாய் திறக்க முடியாது.  ஆனால், இது தொடர்பில் கீழ்மட்டத்தினரின் ஆலோசனை நாடளாவிய ரீதியில் கேட்டறிந்த ஒரேயொரு தலைவர் ரிசாத் பதியுதீன் மட்டுமே என்பதனை இங்கு பெருமையுடன்  கூறிக் கொள்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவூப் ஹக்கீம் , ரிசாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோருக்கு தேசிய பட்டியல் தருவதாக கூறிய சஜித் பிரேமதாச அவற்றை வழங்காமல் வாக்கு மீறினார்.

எமது கட்சித் தலைவர் ரிசாத் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்காக ரணில் குரல் கொடுத்தார். ஆனால் வாய்மூடி மெளனியாக இருந்தார் இந்த சஜித் பிரேமதாச.

ஹமாஸ் முக்கிய தலைவர் ஹானியா கொல்லப்பட்டபோது  அநுரகுமாரவோ சஜித்தோ வாய் திறக்காத நிலையில் ரணில் விக்ரமசிங்க அவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கு சுதந்திரமான தனி நாடே தீர்வென்று கூறியவர் ரணில் விக்ரமசிங்கவே.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திருமலை மாவட்டத்தில் மூன்று சிங்கள வேட்பாளரை நியமித்தவர் சஜித் பிரேமதாசவே.

இந்நிலையில், 500 ரூபாவரை சென்ற அமெரிக்கா டொலர் ஒன்றை 300 ரூபாவுக்கு மட்டுப்படுத்தியவர்  ரணில் விக்கிரமசிங்கவே.

42 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட பசளையை 10 ஆயிரம் ரூபாவுக்கு கொண்டு வந்தவர் ரணில்.
எரிபொருள், எரிவாயு வரிசை யுகத்தை இல்லாமல் செய்தவர் ரணில் விக்கிரமசிங்கவே.

இவற்றையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் தெளிவுள்ள மனிதர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே

இந்நிலையில் கட்சித் தலைவர்கள் சரியான தீர்மானம் எடுக்காவிட்டால்  மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்.

எனவே, கட்சித் தலைமை எடுக்கும் தீர்மானத்தை 14ஆம் திகதிக்கு பின்னர் பார்த்து அதற்கேற்ப எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி