1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சமூகங்களின் நலனை முன்னிறுத்தியே

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான முடிவொன்றினை மேற்கொள்ளுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும்?” என்பது தொடர்பில், கடந்த 10,11,12ஆகிய தினங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற, மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்களின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“தலைமையுடன் நட்பையும் உறவுகளையும் கொண்டிருப்பதைக் காரணமாக வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முடியாது. சுமார் நான்கரை வருடகால ஆட்சியில் நமது சமூகம் எதிர்கொண்ட இன்னல்களை நாம் மறந்துவிட முடியாது. அதேபோன்று, எதிர்க்கட்சியில் நாம் இருந்தவேளை, கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தலைமைக்கும் ஏற்படுத்திய துன்பங்கள் மறக்கமுடியாதவை.

IMG 20240813 132059 800 x 533 pixel

கொழும்பிலே தலைமையும் கட்சியும் முடிவெடுத்த பின்னர், மக்களிடம் வந்து ‘இந்த வேட்பாளரைத்தான் ஆதரியுங்கள்’ என்று நாம் கூறவில்லை. இதற்கு மாற்றமாக மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், ஆலோசனையின் அடிப்படையில் நாம் முடிவுகளை மேற்கொள்வோம். இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு எந்த வேட்பாளர் வித்திடுகின்றாரோ, அவரை நாம் தெரிவுசெய்ய உழைப்போம்.

இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர்காய நினைப்போரை அடக்குவதற்கான முறையான சட்டங்களை உருவாக்கும் ஆட்சியாளரையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவொரு இக்கட்டான சூழலாகவும் வித்தியாசமான தேர்தலாகவும் இருப்பதனால், நாம் தீர்க்கமான முடிவை மேற்கொள்வதே பொருத்தமானது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரிய முறையில் முன்கொண்டு செல்பவராகவும் கைத்தொழில் மேம்பாட்டில் அக்கறைகொண்டவராகவும் நாட்டின் எதிர்காலத் தலைவர் இருக்க வேண்டும். அத்துடன், முறையான வெளிநாட்டுக்கொள்கையை அவர் பின்பற்ற வேண்டும். பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோட்பாட்டையும் எதிர்காலத் தலைமை மேற்கொள்ள வேண்டும். இவற்றைதான் நமது கட்சி முன்வைக்கிறது.

அதுமட்டுமின்றி வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிராமல், இதனை முடிவுக்குக்கொண்டுவரும் ஒருவரை நாம் அடையாளப்படுத்துவது  இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானது. இறைவன் மீது நம்பிக்கைகொண்டு, நாம் பொருத்தமான முடிவொன்றை எடுப்போம்” என அவர் உறுதியளித்தார்.

வவுனியா, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடல்களில், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி