1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும்

பாக்கியம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

“உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி, இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

“நாட்டில் குழந்தைப்பேறுகள் குறைவடைந்துள்ளமையினால் 5 வயதை கடந்த குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

“தற்போது சுமார் 292,000 குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  பத்து வருடங்களுக்கு முன்னர் 340,000 பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.

இதேவேளை, அடுத்த வருடம் பெப்ரவரி 19ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பெரும்பாலான பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்படும்.

“நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலைகளில் உள்ள 7,47,093 மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்குவதற்கு இரண்டாயிரத்து இருநூறு மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

“எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, “தரம் ஐந்து மாணவர்களுக்கு நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு விடையளிக்க முடியாத வகையில் அப்பரீட்சைக்கான வினாக்கொத்துக்கள் அமைந்திருப்பதாகவும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ளது போன்று ஐந்தாண்டு புலமைப்பரிசில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அதனை நிறைவேற்ற முயற்சித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்தப் புலமைப்பரிசில் பரீட்சையானது, பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த் தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“எமது நாட்டின் கல்வியானது, புரட்சிகரமான மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும். 50களில் இருந்த சிங்களம் மட்டும்தான் என்ற கொள்கையுடன், எம்மால் நாடு என்ற ரீதியில் தற்போது முன்னோக்கி நகர முடியாது. எல்லைகளை வகுத்துக் கொண்டு பயணிக்கும் பயணத்தினால் நாட்டுக்கு சௌபாக்கியமான எதிர்க்காலம் கிடைக்காது.

“சிங்கள மொழியுடன், ஏனைய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். விசேடமாக ஆங்கில மொழி மூலமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். க.பொ.த சாதாரணத் தரப்பரீட்சைக்கு பின்னர் அல்லது அதற்கு முன்னர் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்கள் தொழிற்கல்வியை எதிர்ப்பார்க்கிறார்கள்.

“எனினும், தொழில்நுட்பக் கல்வி முறைமையானது நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ளது. 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயர்த்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்து, அதில் 15-20 வீதமானவர்கள் மட்டும்தான் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள். ஏனைய 7-8 வீதமானவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்கிறார்கள். எனினும், எஞ்சியுள்ள 70 வீதமான மாணவர்களுக்கு பட்டப்படிப்பை தொடர முடியாத நிலைமை காணப்படுகிறது.

“இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், நாம் இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்த வேண்டும். இதன் ஊடாக பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாத 70 வீதமானோருக்கு உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான தெரிவை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி