1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், ஒருவேளை உணவுகூட கிடைக்குமா என்ற நிலைமையில் காணப்பட்ட நாடொன்று, இன்று

சற்று ஆறுதல்படக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை, அதுபோல இது, திருப்தியடையக்கூடிய நிலைமையும் அல்ல.

மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்கின்றனர், எல்லா பக்கங்களிலிருந்தும் அழுத்தம், மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைபோல, அரசியல்வாதிகள் தேர்தல் கேட்கின்றனர், மக்கள் பிழைப்புக்காக போராடும் போது, ​​அரசியல்வாதிகள் பதவிக்காக போராடுகிறார்கள்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக, ஆட்சியைப் பிடிப்பது மற்றும் அதிகாரத்தை உறுதிப்படுத்துவது பற்றி கேள்விகள்தான் அரசியல்வாதிகளிடம் உள்ளன.

கடந்த 6ஆம் திகதியன்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்திடம் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார். “வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியப் போகிறதா?” என்றார். அத்துடன், அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்து நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதென, ஐமசவின் ஊடகப் பேச்சாளர் எஸ்எம் மரிக்கார் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் அவசர செய்தியாளர் மாநாட்டை நடத்தி தெரிவித்திருந்தார்.

“அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் ஊழல்களை மறைக்க நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கப் பார்க்கிறார்கள்! அது நடந்த பின்னர், கோப், கோபா குழுக்களும் களையப்படும், ஊழல்களும் ஊழல்வாதிகளும் மறைக்கப்பட்டுவிடுவார்கள். அப்படிச் செய்தால், கோப் குழு, கோபா குழு மற்றும் நிதிக் குழு உள்ளிட்ட அனைத்துக்கு குழுக்களும் செயலற்றதாகிவிடும். கோப் குழுவின் கூட்டுறவுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை. ரஞ்சித் பண்டாரவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாகக் காட்டி, அரசாங்கத்தின் அடிப்படை அலுவலகங்களில் நடக்கும் ஊழல் மோசடிகளை எல்லாம் மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது” என, மரிக்கார் எம்பி கடுமையாகச் சாடியிருந்தார்.

ஆனால், இந்தக் கேள்விக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை. அதாவது, அப்படியொரு சம்பவம் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?

எவ்வாறாயினும், எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மொட்டுக் கட்சியின் மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களின்படியே இந்த அரசாங்கம் தொடர்ந்து இயங்குவதா, இல்லையா என்ற தீர்மானம் எட்டப்பட வாய்ப்பிருக்கின்றனதென்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை மாநாட்டை சுகததாசவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தாலும், தாங்கள்தான் எல்லாம் என்று காண்பிப்பதற்காக, கொழும்புக்கு ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்றுதிரட்டப்போகிறார்களாம். சிலவேளை இந்த அரசாங்கத்திலிருந்து மொட்டுக் கட்சி விலவிட்டால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்றே, பெசில் மற்றும் நாமல் தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்தை உருவாக்குவதல்ல நாமலின் நோக்கம், எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் அமர்வதே அவரது நோக்கம். அவரது டார்கெட் 2030ஆம் ஆண்டாம்!

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது கிடைத்துள்ளது.

உதாரணமாக, 2023 டிசெம்பர் 18, 2024 ஜனவரி 2, பெப்ரவரி 2 அல்லது மார்ச் 2ஆம் திகதியென, இவற்றில் ஏதாவதொரு நாளன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால், வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் தேர்தலை நடத்தக்கூடிய அண்மித்த திகதிகள் பின்வருமாறு இருக்கலாம் என்று, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 வரவு செலவுத்திட்டத்துக்குப் பின்னர், அதாவது டிசெம்பர் 18ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின், பெப்ரவரி இரண்டாவது வாரத்திலும் 2024 ஜனவரி இரண்டில் கலைக்கப்படுமாயின் பெப்பரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலும், 2024 பெப்ரவரி இரண்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஏப்ரல் முதல் வாரத்திலும், 2024 மார்ச் இரண்டில் கலைக்கப்பட்டால் ஏப்ரல் இறுதி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத் தேர்தலை நடத்தவேண்டி ஏற்படுமென்று தென்னகோன் தெரிவித்துள்ளார்.

2024 ஜூலை மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படவுள்ளதால், மேற்கண்ட காலகட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.

பெசில், சஜித் ஆகியோர் இத்தகைய அவசர பொதுத் தேர்தலில் ஆர்வம் காட்டினாலும், ஜேவிபி தலைமையிலான திசைக்காட்டி கட்சி,  ஜனாதிபதித் தேர்தலையே விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் எண்ணமாக உள்ளதென, ஜனாதிபதியின் மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவிர, மொட்டுக் கட்சியின் பெசில் மற்றும் நாமல் தரப்பினர் ஏதேனும் பிரச்சினையை எழுப்பினால் மாத்திரம்தான் அவசர பொதுத் தேர்தலுக்குப் போகவேண்டி ஏற்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்குதான் வழங்கப்படுமென்று, அக்கட்சியின் தலைவர் மஹிந்தவும் அவரது மனைவி ஷிராந்தியும் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனர் என்று தெரியவருகிறது.

எவ்வாறாயினும், கோட்டாபய ஜனாதிபதியான நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், அதாவது ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு இருக்கிறது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி செப்டம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு, இந்திய ஜோதிடர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளாராம். அந்தக் கதைகள் உண்மையா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதித் தேர்தலை கோருவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

செய்திகளின்படி, இந்த முறை பிரச்சாரப் பணிகள் அனைத்தும், இந்திய பிரதமர் மோடிக்கு நட்பான ஒரு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம், அந்த நிறுவனத்துடன் சாகலவே தொடர்பில் இருக்கிறாராம்.

இவை அனைத்தும் வெறும் செய்திகள்தான், ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள், ஆயத்தமாக இருங்கள்! ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா, இல்லையா என்பதை பெசில் தரப்புதான் தீர்மானிக்கும். அதற்கான குறிப்பு, எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மொட்டுக் கட்சியின் மாநாட்டின் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி