1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ள நிலையில், மீண்டும் இந்த அரசாங்கத்தின் வரவு செவுத் திட்டத்துக்கு வாக்களிப்பதில்

எந்தப் பயனுமில்லை” என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இம்முறை வரவு செலவுத் திட்டமும் எமது மக்களுக்கானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினுடைய மூன்றாம் வாசிப்பான நேற்றைய தினம். கடந்த வருடம் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

“அதற்கான காரணம் ஜனாதிபதி அவர்கள் கடந்த வருடம் 2023.02.04 அன்று அதாவது 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களினுடைய தேசிய இனப் பிரச்சினையினை தீர்ப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாக கூறினார்.

“ஆகவே அவரது கூற்றினை வரவேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் நாங்கள் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்திருந்தால் நாங்கள் அதற்கு வாக்களித்திருப்போம்.

“2023ம் ஆண்டிற்குள்ளே தமிழ் மக்களுக்கு எவ்வித நலன் சார்ந்த விடயமும் ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் இந்த அரசாங்கத்தினால் இழைக்கப்படும் பாரிய கொடுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

“மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகளை சுட்டு அழித்துக் கொண்டிருக்கும் கொடூர செயல் 90வது நாளாகவும் தொடர்கிறது.

“மேலும் இன்று தொல்பொருள் என்ற பெயரில் இனவாதிகள் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கும் எங்களின் ஆலயங்களை அழித்து கொண்டிருக்கின்றனர்.

“கடந்த வாரம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இளைஞர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

“எமது மக்களினுடைய பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்றவை காணப்படுகின்றன. பெரும்போக விவசாயத்தினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கான திகதியினைக் குறிக்கும் படி கூறியிருந்தும் இன்று வரை அதற்கான திகதி குறிக்கப்படவில்லை.

“இந்த வருடமும் உரத்திற்கான நிதியின்றி விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். வட மாகாணத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்கள் அச்சுறுத்தலின் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

“மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழ் மக்கள் வாழும் பல இடங்களிலும் மேய்ச்சல் தரைகளை இனங்கண்டு; கால்நடைகளை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இவ்வாறான காலப்பகுதியிலேயே 2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

“30 வருட காலமாக நிகழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வட மாகாண மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. வட மாகாணத்திலுள்ள விமான நிலையத்தினை விஸ்தரித்து சர்வதேச விமான நிலையமாக மாற்றி பல விமானங்களும் வந்து செல்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதியினை ஒதுக்கவில்லை ஆனால் 4வது விமான நிலையத்தினை அமைப்பதற்கு பேசிக்கொண்டு இருக்கின்றார்.

“இவ்வாறான வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரவு வழங்கலாம் எனும் கேள்வியை எமது மக்கள் எழுப்ப வேண்டும்.

“வரவு செலவுத் திட்டத்தினூடாக எமது மக்களுக்கு நிதி ஒதுக்கவில்லையாயினும், பொருளாதார ரீதியாக அவர்களை எழுச்சியடையச் செய்யாதுவிடினும் எமது மக்களை அவர்களது கிராமங்களில் நிம்மதியாக வாழச் செய்யலாம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் விடலாம்.

“இவ்வாறு எமது மக்களை அவர்களது இயல்பு நிலைக்கு ஏற்ப வாழ விடாத அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் எமது மக்கள் சரியான பாடத்தினை அவர்களுக்கு புகட்ட வேண்டும்.

“18% வரியினை அதிகரித்துள்ள அரசாங்கம் பால்மா தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரியினை அதிகரிப்பதற்கு முயன்றுள்ளனர். எமது மக்களிடமே பணத்தைப் பெற்று மீண்டும் கிள்ளி எரிகின்றனர். கிள்ளி எறியும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் எனக் கூறுபவர்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

“எமது பிரதேசத்தில் மலசலகூடமொன்றினை அமைப்பதாக இருந்தாலும் எமது மக்களது வரிப்பணத்திலேயே அதனை மேற்கொள்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அபிவிருத்திகளை வடக்கு, கிழக்கில் மேற்கொண்டது.

“யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் அனுசரணையுடன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டதோடு நெடுஞ்சாலைகளும், புகையிரத நிலையங்களும் அமைக்கப்பட்டன. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. நல்லாட்சி காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்தினுடைய நிதி வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டது.

“2024ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்துடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் எமது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிலடியினை வழங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மை” என்று அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி