1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியுடன், மொட்டுக் கட்சியும் வாடி வதங்கிப் போய்விட்டது.

அறுபத்தொன்பது இலட்சம் என்ற ஜனாதிபதியின் ஆணையும், மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற ஆணையும் இல்லாமல் போனது.

இவ்வாறாக வாடி வதங்கிப் போயிருந்த மொட்டுக்கு நீர் தெளித்து மீண்டும் உயிர் கொடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மொட்டுக் கட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிவைத்தே, இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஆண்டுவிழா, டிசம்பர் 15ஆம் திகதியன்று, அதாவது இன்று, கொழும்பு சுகததாசவில் கொண்டாடப்படவுள்ளது. நாடாளுமன்ற சுற்றுப் பாதைகள் அனைத்தும், கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மக்களை அழைத்துவந்து, பெரிய கண்காடசியொன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெசில், நாமல், சாகர மூவரும், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த மாநாட்டிற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நாமலுக்கு அதிகூடிய பதவி கிடைக்கப் போவதாக சில வாரங்களாக செய்திகள் வந்தாலும், கட்சியின் தலைமைப் பதவி, தலைவர் பதவி போன்ற கட்சியின் உயர் நிர்வாக பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாதென, தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்வாக அதிகாரிகளை அப்படியே விட்டுவிட்டு, 2024இல் வரப்போகும் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் நாமல் மற்றும் இளைஞர் அணி களமிறங்கி கட்சியை கட்டியெழுப்பும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று 15ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்பது இன்னும் சரியாக தெரிவிக்கவில்லை. உரிய நேரத்தில் வருவேன் என அமைச்சர் டிரான் தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு வந்து, தற்போது சுயேட்சையாக செயற்படும் அமைச்சர்களான நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா, நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் எவரும் இந்தக் கட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளனர் என்று தெரியவருகிறது.

இதேவேளை, இன்று 15ஆம் திகதி தனது ஆசனத்தில் நடக்கவிருக்கும் மஹாபொல கண்காட்சிக்கு வருமாறு, அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாபொல புலமைப்பரிசில் நிதிக்கான நிதி சேகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட மஹாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி, 14 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கண்காட்சி டிசம்பர் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜா-அல மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. 15ஆம் திகதி கண்காட்சியை திறந்து வைக்க, அமைச்சர் டிரான் மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மொட்டுக் கட்சியின் மாநாட்டைப் புறக்கணிக்க நடவடிக்கை எடுத்திருக்கும் போது, மொட்டுக்கு ஆதரவான கலைஞர்கள், இந்த மாநாட்டில் தாங்கள் கட்டாயம் கலந்துகொள்வதாக, அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உறுதியளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராமவில் உள்ள அவரது இல்லத்தில் சந்திப்பதற்காக கலைஞர்கள் குழுவொன்று சென்ற போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“அடுத்த வருடம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். ஆனால் அது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூறமுடியாது. ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். பெசில், நாமல் ஆகியோர், எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள்” என்று, தனது வீட்டுக்கு வந்த கலைஞர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்தார்.

அத்துடன், பொதுத் தேர்தல் நடக்கும்போது, தேர்தலில் போட்டியிடவும் தயாரா இருங்கள் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தல் பற்றி கூறும்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தேர்தல்கள் பற்றிய குறிப்பை வழங்கினார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம்தான் அதனை ஒத்திவைக்க முடியும் என்றும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் மாநாட்டை முதன்மைப்படத்தி, மக்கள் முன் முழந்தாழிட்டாவது மொட்டுக் கட்சி மீண்டும் நிமிர்ந்து நிற்கப் பார்ப்பதே, அடுத்தாண்டு நடக்கவுள்ள தேசியத் தேர்தல்களை எதிர்கொள்ளவேயாகும்.

விடயம் என்னவென்றால், மக்கள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள் என்பதே முக்கியமாகிறது. காரணம், இந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க, மஹிந்த, பெசில் மற்றும் கோட்டாபய ஆகியோரே காரணமென்று, உயர்நீதிமன்றத்தினால் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேர்தல் ஆண்டொன்றை இலக்குவைத்து மாபெரும் கண்காட்சியொன்றை நடத்துவதும் இலகுவான காரியமல்ல.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி