1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்விதத் தொடர்பும்

இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலைப் பிரகடனம்' உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத் தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்க நேரும் என்பதால் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத் தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலகத் தமிழர் பேரவையும், பௌத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்றிட்டமே இந்தப் பிரகடனமாகும்.

“இதில் அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு' என்ற சொற்பதம் பௌத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

“அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

“எனவே, அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்றிறன் தங்கியுள்ளது. அதேவேளை, உலகத் தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை.' - என்றார்.

(காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி