1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதிக்கான கனவு காண்பவர்கள் மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமருக்கான கனவு காண்பவர்களும்

இருக்கின்றனர். ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல மாத்திரமன்றி, தனக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு தவறி, சஜித் ஜனாதிபதியானால் பிரதமராகும் எதிர்பார்ப்பு சரத் பொன்சேகாவுக்கும் இருக்கிறதாம்.

இதற்கிடையே, மற்றுமொருவரம் பிரதமர் கனவில் இருந்துகொண்டு, அதற்கான காயை நகர்த்தி வருகிறாரென்று ஐமச தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கதையின் பிரகாரம், டலஸுக்கு நெருக்கமான எம்பி ஒருவர், அண்மையில் ஒருநாள், ஐமசவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவைச் சந்தித்துள்ளாராம்.

உடைந்துப்போயுள்ள ஐமச சுதந்திர முன்னணியின் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் டலஸின் யோசனையை எடுத்துக்கொண்டுதான் அவர் போயுள்ளார். “மொட்டுக் கட்சியின் வாக்குகளை உடைத்து, அவற்றை உங்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே டலஸ் உள்ளிட்ட தரப்பு முயற்சிக்கின்றது. அதற்கு, எமது குழுவின் சில யோசனைகளும் உள்ளன” என்று அந்த எம்பி குறிப்பிட்டுள்ளார்.

“சரி, உங்களுடைய யோசனைகள்தான் என்னவென்று கூறுங்கள்” என, மத்தும பண்டார கேட்டுள்ளார். “இந்த ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவராக டலஸ் எம்பியை நியமிக்க வேண்டும்” என்று அந்த எம்பி குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாகவே அமைதிச் சுபாவம்கொண்ட மத்தும பண்டார எம்பிக்கு, அந்தக் கதையைக் கேட்டதும் கோபம் ஏற்பட்டுள்ளது.

“பைத்தியக்கார கதைகளைப் பேசாதீர்கள். கடந்தமுறை டலஸை ஜனாதிபதி வேட்பாளராக்கப்போய், தலைவரும் நானும் தலைகுணிய நேர்ந்தது. எமது எம்பிக்கள் இன்றும் அதைச் சொல்லி ஏசுகிறார்கள். டலஸுடன் ஆரம்பத்தில் இருந்த நான்கைந்து பெரைத் தவிர, அவர் அழைத்து வருவதாகச் சொன்ற மொட்டுக் கட்சியின் ஒரு உறுப்பினர்கூட வந்துசேரவில்லை என்று எங்களுடைய தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

“சஜித் கேட்டிருந்தால் உங்கள் குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்போது சஜித்துக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டிருப்பர், அது உங்களுக்கும் தெரியும். எங்களுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து சிறு கட்சிகளின் தலைவர்களும், டல்லஸுக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக இன்னும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ சஜித்துக்காக ஒரு வார்த்தையாவது அந்த டலஸ் பேசியதுண்டா, இல்லை” என்று, மத்தும பண்டார பிரித்து மேய்ந்துள்ளார். 

அந்தக் கதை அத்துடன் முடியவில்லை. மீண்டும் அதுபற்றி பேசத் தொடங்கியுள்ளார். “அடுத்த பிரதமர் பதவிக்காகத் பிரதித் தலைவர் பதவியை டல்லஸ் கேட்கிறார். அப்படிச் செய்தால் இந்த முறை எங்கள் கட்சியும் உடைந்துவிடும். எனவே அந்த கோரிக்கையை அனுப்ப வேண்டாம் என்று டல்லஸிடம் சொல்லுங்கள். உங்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் விரும்பவில்லை.

“ஏனென்றால், உங்கள் குழுவில் உள்ள 5 பேர் எங்களுடன் நேரடியாக வேலை செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். வேலியில் போகும் ஓநாயை சேலைக்குள் போட்டுக்கொள்ள நாங்கள் தயாரில்லை. எங்களிடம் இருப்பவர்களே எங்களுக்குப் போதும்” என்று, டலஸின் தூதுவரின் காதுகளில் பஞ்சு அடைத்துக்கொள்ளும் அளவுக்கு ரஞ்சித் மத்தும பண்டார விலாசித் தள்ளியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வெளியேறியவுடன் இடம்பெற்ற உரையாடல் குறித்து ரஞ்சித் பண்டாரவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு சஜித்தும் கடும் கோபத்தக்கு ஆளாகியுள்ளார். உடனேயே ஜீஎல் பீரிஸுக்கு அழைப்பை எடுத்துள்ளார்.

"உண்மையா பேராசிரியரே, டல்லஸ் எங்கள் அரசாங்கத்தின் பிரதமராக வரும் நோக்கத்தில்  கூட்டணியின் துணைத் தலைவர் பதவியைக் கேட்கிறாராம்" என்று, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பல எம்பிக்கள் மற்றும் சிறுபான்மை கட்சியொன்றின் தலைவர் ஒருவரும் இருக்கும் இடத்தில், சஜித் கேட்டுள்ளார்.

இதற்கு பீரிஸ் என்ன பதிலைச் சொன்னார் என்று கேட்கவில்லையாயினும், டலஸின் அந்தக் கோரிக்கை தனிப்பட்டதேயன்றி, அக்குழுவின் கோரிக்கையல்ல என்றே, அந்த அழைப்புக்குப் பின்னர் சஜித் தெரிவித்திருக்கிறார். ஆனால், அப்படி கோரிக்கை வந்தால் நிராகரிப்போம் என்று, ரஞ்சித் உள்ளிட்டோரிடம் சஜித்தினால் கூறப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மேற்படி யோசனையைக் கொண்டுவந்த எம்பியை, நாடாளுமன்றத்தில் வைத்து எதிக்கட்சித் தலைவர் நேருக்கு நேர் சந்தித்துள்ளார்.

“நான் பெயர் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பதவிக்காக காத்திருக்கும் பலர் எதிர்காலத்தில் எங்களுடன் இணைவார்கள். அந்தப் பதவிக்காக எனது கட்சியிலும் பலர் காத்திருக்கின்றனர். எனவே அந்த முன்மொழிவு எனக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும். எனவே எம்பி டலஸ் எங்களுடன் வந்தாலும் அந்த பதவியை என்னால் தர முடியாது என்று சொல்லுங்கள்'' என டலஸின் சகாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இந்தக் கதையின் உண்மைப் பொய் எதுவானாலும், இதைப் பரப்பித் திரியும் ஐமச உறுப்பினரும், அந்தப் பதவிக்காகக் காத்திருப்பவர் என்று தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஐமசவின் பிரதமர் வேட்பாளரைத் தேடுவதைவிட, சஜித்துக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஏற்கெனவே அரசாங்கத் தரப்பினர் அநுரவைத்தான் எதிர்க்கட்சித் தலைவரென்று அழைக்கிறார்கள். சஜித்தை ஐந்து சதத்துக்குகூட மதிப்பதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும், ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்க டலஸ் முயற்சி செய்திருந்தார். இம்முறையும் அவ்வாறான சிக்கலொன்று ஏற்படுமோ என்ற அச்சத்தில்தான் சஜித் இருக்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி