1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து

குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியுள்ளது.

அதன்படி, முத்துஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவில் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடிக்கு வான் பாய்வதனால் முத்துயன்கட்டு, பேராறு , முத்துவினாயகபுரம், பண்டாரவன்னி, வசந்தபுரம், மன்னகண்டல் ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதால் வீதிப் போக்குவரத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், மதவளசிங்கன்குளம் இரண்டு அடி வான் பாய்வதனால் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு, முறிப்ப பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோன்று தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர், இதனைவிடவும் வட்டுவாகல் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், வவுனிக்குளம் வான் பாய்வதால் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, இதனைவிட பாலியாறு பெருக்கெடுத்து பாய்வதால் சிறாட்டிக்குளம் மக்கள் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம், கொக்காவில் வீதியில் மருதங்குளம், ஐயன்கன்குளம் வான் பாய்வதாலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது, தவிரவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புளியமுனை விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாது வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் படகு சேவை மூலம் மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,126 குடும்பங்களை சேர்ந்த 3,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை என்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைகின்றமையாலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகின்றதென, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையிலிருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு செல்வதன் காரணமாக நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

“கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

“குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய வடக்கு பகுதியும் , மன்னர் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கிடைக்கின்ற கனமழை மற்றும் மேலதிக மேற்பரப்பு நீர் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

“தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 54 நடுத்தர மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுவதற்றுவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பல பிரதேசங்களில் பதிவாகி இருப்பதன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

“வெள்ள அர்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், ஆற்றங்கரை ஓரம், குளங்கள் மற்றும் வான் பாய்கின்ற பகுதிகளுக்கு அண்மித்திருக்கின்ற மக்கள் முன்னேற்பாடாக முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

“அதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைத்து வருகின்ற மழையானது நாளை பிற்பகுதியுடன் படிப்படியாக குறைவடைந்து மீண்டும் 23 ஆம் திகதியளவில் மழை வீழ்ச்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

“வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 19, 20, 22 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகுவதன் காரணமாக இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் ஒரு கனமழையை எதிர்நோக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதியும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் மீளவும் காட்டு சுழற்சிகள் தோன்றுவதற்கான வெப்பநிலை சாதகங்கள் வங்காள விரிகுடாவில் காணப்படுவதன் காரணமாக வடக்கு மாகாணம் அடுத்த ஆண்டு நுட்பகுதி வரை தொடர்ச்சியாக கன மழையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.

“ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் உள்ள குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உவர்நீரை தற்சமயம் வெளியேற்றி வருகின்றது.  இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.

“எனவே மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி