1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை வாங்கிய குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி அல்ல என முன்னாள் சுகாதார அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையை முற்றாக திரித்து வெளியிடும் கருத்துக்களுக்கு பதிலளிக்காவிடின் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களும் உண்மையாகி விடும் எனவும் இச்சம்பவம் தொடர்பில் ஆகஸ்ட் 2ஆம் திகதி தானே முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பிரச்சினையை எழுப்பியுள்ள உற்பத்தியாளர், 2013ஆம் ஆண்டு முதலே தனக்கு தொழிற்சாலை இருப்பதாக கூறி வருகிறார் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு மருந்து வழங்க அவர் முயற்சித்ததாகவும் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர், தான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் கோரிக்கை முன்வைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்த கோரிக்கைகளை தாம் ஒரு அமைச்சர் என்ற முறையில் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்ததாகவும், சில வாரங்களுக்குப் பிறகு அந்த கோரிக்கைகளுக்கு தாம் உடன்படவில்லை என ஆணையாளர் தெரிவித்ததையடுத்து, அமைச்சராக தன்னால் இதுவிடயத்தில் செயற்பட முடியாது என்றும் தான் அறிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

முடியாது என்பதனால் அதன் பின்னர் அதுபற்றிப் பேசப்படவேயில்லை. என தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அதன் பின்னரான கொள்வனவு நடவடிக்கைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்.

இம்யூனோகுளோபுலின் வழங்குனருக்கு திடீரென பணம் வழங்கியமைக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வலையமைப்பே இதனை நடைமுறைப்படுத்தியதாகவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரைக் கைது செய்ய வேண்டுமென ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் கூச்சல் போடுவதால் அது நடக்காது என்றும் இந்த விவகாரத்தில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் கூறியுள்ளதாவது,

“முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலப்பகுதியில் தரகு பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பதிலாக அத்தியாவசியமற்ற பல மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

“அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட தரப்பினரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அதேநேரம் தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“எவ்வாறாயினும் குறித்த நபரே, அந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரா? என்ற கேள்வி நிலவுகிறது. குறித்த தடுப்பூசியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான இம்யூனோ குளோபுலின் காணப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இம்யூனோ குளோபுலின் மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் ஜனக சந்திரகுப்த, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி