1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

நடைபெறவில்லை. கிறிஸ்மஸ் குளிரை அனுபவிக்க பல அமைச்சர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் சிலர் தத்தமது ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

இதனால், ஊடகங்களும் சுவார்யஷ்யமில்லாமல் போய்விட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இடையில் வெளியிடுவதற்குத் தகுந்த செய்திகளும் இல்லாமல்போயுள்ளன.

டிரான், தேசபந்துவுக்கு புண்ணியம்சேர, யுக்திய சுற்றிவலைப்புச் செய்திகள் கொஞ்சம் கிடைத்து வருகின்றன. இவ்வாறான நிலையில்தான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மிக விசேடமான Press Releases ஒன்று வெளிவந்தது. உண்மையில் அது மஹிந்தவினுடையதா இல்லையா என ஊடகங்களில் பலருக்கும் குழப்பம்.

இறுதியாக மொட்டுக் கட்சியின் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து, அது உண்மை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். எவ்வாறாயினும், மஹிந்தவின் Press Releases, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த அறிக்கையை அடுத்து, “இதற்கெல்லாம் நாங்கள் ஆளில்லை” என்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மஹிந்த முயற்சிக்கிறாரா இல்லை, ரணிலுக்கு பக்கபலமாக இருக்க நினைக்கிறாரா என்ற சந்தேகத்துக்கு பலரும் வந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள கமெண்டுகள் அப்படித்தான் இருக்கின்றன.

அடுத்த தேசிய தேர்தல் வரையில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கடமையென்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதுவே  மொட்டின் அடிப்படை பொறுப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது, மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஏனெனில், குறித்த நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை.

கோட்டா தப்பியோடியதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்று உறுதியளித்தே, மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பெற்று அடுத்த ஜனாதிபதியாக ரணில் தெரிவானார். ஏனெனில், கடந்த தேர்தலின்போது முதன்முறையாக நாடாமன்றம் வந்த எம்பிக்கள் ஓய்வூதியம் பெறுவதாயின், 5 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தால் மாத்திரமே ஓய்வூதியத்தைப் பெறலாம்.

அதுமாத்திரமன்றி, மீண்டும் அவர்களால் நாடாளுமன்றத்துக்கு வரமுடியுமா என்ற நம்பிக்கையும் இல்லாதிருக்கலாம். அதனால், காலம் முடியும்வரை இருந்துவிட்டுச் செல்வோமென்று அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால்தான், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துங்கள் என்று நாமல் தரப்பு கோரியபோது, மொட்டு எம்பிக்கள் அதனை எதிர்த்துள்ளனர்.

எனவே, தேர்தல் வரை நிலையான அரசாங்கத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர, மஹிந்தவினால் வேறு என்ன சொல்லமுடியும்? அதனால்தான், வரிச்சுமையைக் குறைத்தல் என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது மாத்திரமன்றி, அரசாங்கத்தில் மொட்டுக் கட்சி அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும், தமது கட்சிக்கு மாறான கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதை, தங்களுடைய வீடுகள் மீண்டும் எரிக்கப்படுமென்ற அச்சத்தில்கூட கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது. வரி அதிகரிப்புக்கு நாலாபுறத்திலிருந்தும் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தப் பயத்தில்தான், அந்தத் தீர்மானத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கலாம்.

ஆனால், ரணிலின் வரவு செலவுத்திட்டம் மற்றும் வரித் திருத்தச் சட்டமூலம் போன்றவற்றுக்கு ஆளுக்கு முன்னால் கை உயர்த்திய மொட்டுக் கட்சி, “இதற்கும் எமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று இப்போது கூறிவிட்டுத் தப்பித்துவிட முடியுமா? 

தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகத் திங்கட்கிழமையன்று ஜனாதிபதி விடுத்த அறிவிப்பை அடுத்து, இரண்டே நாட்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறான ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும், ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறிய கதையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லையாம். ஷம்பிக்க ரணவக்க, வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமன்றி, சஜித் பிருமதாசகூட, “ரணில் அவ்வாறு கூறினாலும் அவர் போட்டியிடமாட்டார்” என்றே கூறுகிறார்.

இதற்கு, ஐதேகவின் உபதலைவர் ரவி பதிலளித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது காலத்தின் தேவை எனவும், ரவி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

‘ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற அரசியல் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். இது அனைத்துக் கட்சிகளின் கூட்டாகத்தான் இதைச் செய்யவேண்டும். பலர் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு நாடு அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கும்போது, ​​அதிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் வலிமைகொண்டவர்கள் மிகச் சொற்பமளவிலேயே உள்ளனர்” என்றும் ரவி குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர் தம்மிக பெரேராதான். பிஸ்னஸ் டீல் ஒன்றின் அடிப்படையில் அனைத்துக் கட்சிகளுக்கும் உதவி செய்துகொண்டிருந்த தம்மிக்க பெரேராவை, மொட்டுக் கட்சியின் தேசியப் பட்டியலில் களமிறக்க BR க்கு பட்டாதான் யோசனை முன்வைத்துள்ளார்.

சிங்கப்பூருக்குச் சென்று தலைமயிர் நட்டுக்கொண்டு இந்தக் களத்தில் இறங்குவோமென, ஹாடீதான் Push செய்துள்ளார். இவை அனைத்தும், ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுமென்று BR வழங்கிய வாக்குறுதியின் பேரில்தான் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

BR, OK என்று சொன்னது முதல், மொட்டின் சக்தியாக தம்மிக மாறியுள்ளார். இப்போது அக்கட்சியின் அனைத்து விடயங்களுக்கும் தம்மிகதான் செலவளிக்கிறாராம். கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கட்சியின் சின்னச் சின்ன செலவுகளுக்குகூட, மாதமொன்றுக்கு அவரால் 500 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, கடந்த திங்கட்கிழமையன்றுதான் வெளியானது. அன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதுதான், ஜனாதிபதியும் தான் தேர்தலுக்குத் தயாரென்று அறிவித்தார். எவ்வாறாயினும், தம்மிக எவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் என்பது குறித்து, பிரசன்ன மற்றும் கஞ்சன தரப்பு, சாகரவை கடிந்துகொண்டுள்ளது. மொட்டுக்குள் எஞ்சியிருப்பவர்களும் விட்டுச்செல்ல இந்தச் செய்தி வாய்ப்பளித்திருக்கிறதென்றும் அவர்கள் கொழுத்திப் போட்டுள்ளனர்.

அதன்பின்னர்தான், மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளாரென்று வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று, மொட்டு அலுவலகத்தில் இருந்து செய்திகள் வர ஆரம்பித்தன. கட்சி என்ற ரீதியில் இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அக்கட்சி அறிவித்தது.

அது மாத்திரமன்றி, மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிருவதற்கு நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்தப் பட்டியலில் தம்மிக பெரேராவின் பெயரும் உள்ளடங்குகின்றதென்றும் குறிப்பிட்டார்.

உண்மையில், இந்தக் கதைகளில் உண்மை எது, பொய் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி நாடகமொன்றைப் பார்ப்பது போலத்தான் மக்களும் இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்டுவிட்டு, “ஆ, அப்படியா” என்று கேட்டுவிட்டு உறங்கிவிடுகிறார்கள். மீண்டும் அடுத்தநாள் வழமைபோல அதே நாடகத்தைப் பார்க்கிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி