1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப் பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாகப் பேசப்பட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் திடீரெனக் கூட்டத்துக்கு நடுவே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்குள் வந்தது.

அமைச்சர் டக்ளஸ், கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். எனினும், அமைச்சர், மேற்படி நபர் பொது அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரிடம் அறவிடப்படும் தண்டப் பணத்தை, மீனவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி