1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் என்ற வகையினர் இருக்கக்கூடாது. அனைவரையும் மீள்குடியேற்ற வேண்டும் அல்லது பொருத்தமான

இடங்களில் குடியமர்த்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடந்த கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 4 மணியளவில், யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.

உலங்கு வானூர்தி தாமதம் காரணமாக திட்டமிட்டதை விட ஒரு மணித்தியாலம் தாமதமாகவே கூட்டம் ஆரம்பித்தது. இதனால், கூட்ட நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்ட விடயங்கள் அனைத்தும் கலந்துரையாடப்படவில்லை.

நிகழ்ச்சி நிரலின் முக்கிய விடயங்கள் மட்டுமே ஆராயப்பட்டன. வீதி அபிவிருத்தி, கடற்றொழிலாளர் விவகாரம் உள்ளிட்ட சில விவகாரங்களே ஆராயப்பட்டன.

வடக்கில் பெரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

“இந்த வருட இறுதியில் அனைவரும் தேர்தல் காய்ச்சலில் இருப்பார்கள். அதனால் அதற்கு முன்னதாக அபிவிருத்தி திட்டங்களை முடிக்க வேண்டும். 4 வருடங்களாக அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் நடக்காமல் இருந்தது. இந்த ஆண்டில் அதை நாம் மீள ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு இந்த மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒத்துழைக்க வேண்டும்” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் மட்டுமே இப்போது நடக்கிறது. அதை ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். பலாலி அபிவிருத்தி திட்டத்தில் வேறு ஆட்களும் ஈடுபடவுள்ளனர்” என்றார்.

இந்நிலையில், பலாலி விமான நிலையத்தை தனியார் துறையிடம் கையளிக்கும் திட்டம் ஜனாதிபதியிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினாலும், பிற அரச நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்ட காணி விவகாரம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. காணி அமைச்சின் நடமாடும் சேவையை நடத்தி, காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோர் விவகாரம் பேசப்பட்ட போது, யுத்தம் முடிந்து 10 வருடங்களிற்கு மேலாகிய பின்னரும் இடம்பெயர்ந்தோர் இருப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, “2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் என்ற வகையினர் இருக்கக்கூடாது, அனைவரையும் மீள்குடியேற்ற வேண்டும் அல்லது பொருத்தமான மாற்றிடத்தில் குடியேற்ற வேண்டும்” என அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

வடக்கில்- குறிப்பாக யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு பணிக்காக இணைக்கப்பட்டவர்கள், தற்காலிக அடிப்படையிலேயே பணியாற்றுவதாகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது.

அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படாமல், வெறுமனே கலந்துரையாடல் என்றளவிலேயே முடிந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி