1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

'த rண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் - லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15

ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

இலங்கையில் ஏனைய பல கொடூரக் கொலைகள் போல இக்கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படாமல், சுதந்திர மனிதர்களாக சமூகத்தில் நடமாட விடப்பட்டிருக்கின்றார்கள். சில சமயங்களில் மக்களின் தலைவர்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும்கூட அவர்கள் தொடர்ந்து விளங்கக் கூடும். அக்காலத்தில் மோசமாகப் பேணப்பட்ட தண்டனை விலக்களிப்பு போக்கு இத்தகைய கொடூரக் கொலைகளைப் புரிந்தவர்களுக்கும், அவற்றுக்கு வழிகாட்டிய சூத்திரதாரிகளுக்கும் குற்றங்களில் இருந்து மூடி மறைக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. அது இன்று வரை நீடிக்கின்றது.

தான் கொலை செய்யப்படுவார் என்பதை முற்கூட்டியே நன்கு புரிந்துகொண்ட லசந்த விக்கிரமதுங்க, தன் கொலை விசாரணை இப்படித்தான் பயனற்று, தொடராமல் போகும் என்று சாக முன்னரே எழுதி வத்திருந்தமைதான் அந்த ஊடகவியலாளனின் தீர்க்கதரிசனச் சிறப்பு.

தன்னைக் கொலை செய்யப்போகின்ற சூத்திரதாரியைக் குறிப்பிட்டு 'என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். (நான் கொல்லப்பட்டதும்) நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, பொலிஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது...'' என்று, தனது கடைசி உயில் போல தான் எழுதி வைத்த குறிப்பில் குறிப்பிட்டிருந்தார் லசந்த விக்கிரமதுங்க.

அதுவே நடந்துகொண்டிருக்கிறது.

அதையே அவரின் இந்தப் பதினைந்தாவது ஆண்டு நினைவு நாளில் சுட்டிக்காட்டியிருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை. லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்களை தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

'லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கை, உள்ளக ரீதியில் தீர்ப்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்ற போதிலும், வழக்கு விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி லஸந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடிவரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றைய திகதி வரை நீதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டனைகளிலிருந்து விடுபடுவதை உடன் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

அவர்களைத் தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யவேண்டும்.' - என்று மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஆனால், எதுவும் நடக்கப் போவதில்லை என்பது உறுதி. யுத்தகாலத்தில் தென்னிலங்கைத் தரப்புப் புரிந்த அனைத்து அடாவடித்தனங்களையும் 'பயங்கரவாதத்துக்கு எதிரான நியாயமான நடவடிக்கை' என்று வகைப்படுத்தி அவற்றை மூடி மறைக்கும் போக்கே, பௌத்த - சிங்கள அரசின் கொள்கைக் கோட்பாடாக இருக்கும்போது - தொடரும் போது - அதிலிருந்து மாற்றான அணுகுமுறை கொழும்பு ஆட்சிப்பீடத்திலிருந்து - அதிகாரத் தரப்பிடமிருந்து - வருவது துர்லபமே.

இலங்கை அரசுகளினதும் பல அரசியல் வாதிகளினதும் உண்மை முகங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்து அம்பலப்படுத்திய பிரபலமான ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க, குற்றவாளிகள் சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக அது பற்றிய உண்மைகளை தைரியமாக வெளிக் கொணர்ந்தார். அதற்காக முன்னரும் பல தடவைகள் அவர் இலக்கு வைக்கப்பட்டார்.

1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்துக்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில், அவரது வீட்டின் மீது கிரேனைட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலஞ் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், இந்த சம்பவங்களில் எந்தவொன்று தொடர்பிலும் பொலிஸார் உரிய விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவே அவரது படுகொலை விடயத்திலும் தொடர்கின்றது.

-காலைமுரசு

Lasantha2_2024.01.08.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி