1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி

ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கடப்பாட்டை நினைவுறுத்துகிறேன். இதை சொல்ல இதுதான் சிறந்தவேளை என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உணர்கிறேன்” என தமுகூ தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தற்போது சென்னையில் அயலக தமிழர் மாநாட்டில் தமிழக அரசின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் சென்னையிலிருந்து தனது அதிகாரபூர்வ டுவீடர் தள செய்தி மூலம் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை, பிரித்தானியா வரலாற்றில் கறுப்பு பக்கம், பெருந்தோட்ட மக்களின் அத்தியாயம்தான்.  இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும்போது கல்வி, சுகாதாரம், காணியுரிமை, வீட்டுரிமை, தொழிலுரிமை ஆகியவற்றில் மிகவும்  பின்தங்கிய தரவுகளை கொண்ட  தமிழ் பெருந்தோட்ட வதிவாளர்களின், குறை வளர்ச்சி தொடர்பிலான பிரித்தானிய முடியரசின் வரலாற்று கடப்பாட்டை இளவரசி ஆன் ஏற்க வேண்டும்.  

“நலிவுற்ற பிரிவினரான நமது மக்கள் தொடர்பிலான குற்றச்சாட்டு பட்டியலை இளவரசி ஆன் மீது சுமத்த நான் விரும்பவில்லை.  ஆனால் இந்த கறுப்பு பக்கம் தொடர்பான நினைவூட்டலை நான் எடுத்து கூற விரும்புகிறேன்.

“இன்று இந்திய வம்சாவளி மலையக தமிழர் என்று இனரீதியாக அழைக்கப்படும் இம்மக்கள், பிரித்தானிய முடியரசின் பிரதிநிதிகளான கிழக்கிந்திய கம்பனியால் 1823ம் ஆண்டு முதல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்கள்.  இன்றும்கூட, எமது உழைக்கும் மக்கள் பெருந்தோட்ட முகாமை நிறுவனங்களுடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் வெள்ளை ராஜ்யம் போன பிறகு உள்நாட்டு பிறவுன் ராஜ்யம் பெருந்தோட்டங்களில் எமது மக்களை இன்று ஆள்கிறது. இதனால் இன்னமும் இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக கருதப்படாமல், நமது மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவின் பாண்டிச்சேரி மக்களுக்கு பிரான்சிய ஆட்சியாளர்கள் செய்து விட்டு சென்ற ஏற்பாடுகளை ஒத்த ஏற்பாடுகளைக்கூட பிரித்தானியா எமது மக்களுக்கு செய்யவில்லை. 

“ஆகவே, கடந்த காலங்களில் இழந்துவிட்ட வளர்ச்சியை மீளப்பெறும், விசேட ஒதுக்கீட்டு செயற்திட்டத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் பின்தங்கிய பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிட முன்வருமாறு பிரிதானியாவை நான், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் கோருகிறேன்.

“இன்று உங்களுக்கு பிரித்தானிய தூதுவர் அன்ரூ பெட்றிக் நடத்துகின்ற வரவேற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். நான் நாட்டில் இல்லாத காரணத்தால் அதில் கலந்துக்கொள்ள இயலாமல் இருப்பது அவருக்கு அறிவித்துள்ளேன். எமத கோரிக்கைள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவரிடம் உரையாடி உள்ளேன். தொடர்ந்தும் உரையாட உள்ளேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி