1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிறிலங்கா அரசாங்கம் யுக்திய சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் தொடர் கைது நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய

நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் போதைப்பொருள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான கொள்ளைகளை இந்த நடவடிக்கையின் போது பின்பற்ற தவறியுள்ளதாகவும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 29 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட சிலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதோடு மோசமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியில்லாமல் சிறிலங்காவின் படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின் அடிப்படையில், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்து தடுத்து வைக்க சிறிலங்கா காவல்துறையினர் நடடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களுள் நூற்றுக்கணக்கானவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அனுமதியற்ற தேடுதல்கள், கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைத்தல், மோசமாக நடத்துதல், சித்திரவதை செய்தல், பொது இடங்களில் ஆடைகளை களைந்து சோதனை நடத்துதல் போன்ற பல சட்டவிரோதமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகளுக்கும் சிறிலங்கா காவல்துறையினரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை மறு ஆய்விற்குட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்த நடவடிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போதையொழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து  ஒருபோதும் கைவிடப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டிர்க் மற்றும் உள்நாட்டு சிவில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் போதையொழிப்பு தொடர்பில் முன்னெடுத்து வரும் யுக்திய நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் எதேச்சதிகாரமாக செயற்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை குறித்த நடவடிக்கைளில் பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறித்த செயற்றிட்டமானது கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“இதுவரையில் கணிசமான அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் பங்கேற்பவர்கள், விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

“இவ்விதமான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் குறுகிய காலத்தில் போதைப்பொருட்களை ஒழித்த நாடாக இலங்கை உருவெடுக்கும் என்பதில் எனக்கு தீவிரமான நம்பிக்கை உள்ளது.

“நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு போதையொழிப்பு முக்கிய விடயமாக இருக்கின்றது. ஆகவே இந்தச் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். மனித உரிமைகள் உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் உள்நாட்டிலோ, சர்வதேசத்திலோ என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.

“முன்னதாகவே, நாட்டில் உள்ள இராஜதந்திரிகள் என்னுடன் இந்த விடயங்கள் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவர்கள் இந்த கடுமையான நடவடிக்கையை தளர்த்துமாறு கோரினார்கள்.

“ஆனால் போதைப்பொருளால் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதிலுள்ள பாரிய ஆபத்துக்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.

“ஆகவே, நான் தற்போதுள்ள பதவியில் நீடிக்கும் வரையில் நிச்சயமாக போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன். போதைப்பொருளற்ற நாட்டை மீளமைப்பதற்காக எனது அர்ப்பணிப்புக்கள் தொடரும். இந்த முன்னெடுப்பில் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், விமர்சனங்களைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை” என தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி