1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பௌத்த மதத்தை திரித்து பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர என்று அழைக்கப்படும் மஹிந்த

கொடிதுவக்கு, எதிர்வரும் 24 திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றைய தினம் (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஆரம்பத்தில் நாட்டுக்கு வருகை தந்த அவலோகிதேஸ்வர என்ற பெயரில் போதனைகளை வழங்கி வந்த மஹிந்த கொடித்துவக்குவை அவரது பக்தர்களால் வழிபடுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

அவர் சொகுசு காரில் களனி ரஜமஹா விகாரைக்கு வந்த விதம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர் அவரை வழிபடும் விதமும் அதில் அடங்கியிருந்தது.

இந்த நிலையில், அவர் மீது உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த நபர் பன்னிபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டது மேலும் இந்த நபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் இவர் கைது செய்யப்பட்டார்.

மகிந்த கொடிதுவாக்கு என்ற நபர், கடந்த 1ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதும் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரது காலில் விழுந்து வணக்கம் செலுத்துவதும் போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதன்படி, குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் அவமதிக்கப்படுவதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, அவர் ர் தங்கியிருந்த கெஸ்பேவ - மகந்தன சர்வோதய வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டிற்கு அழைத்துச்சென்ற விசாரணை அதிகாரிகள், அந்த வீட்டை சோதனையிட்டனர். இதன்போது தங்க நிறத்திலான கதிரை போன்ற பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் நேற்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சிறைக்கூண்டில் நின்றவாறு சிரித்துக்கொண்டிருந்துள்ளார். இதனால், இந்நபர் தொடர்பில் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் இருந்து மனநல அறிக்கையை பெறுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததை நீதிமன்றம் அவதானித்ததாக நீதவான் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை தொடர்பான உண்மைகளை விளக்கினார்.

“ஐயா, இந்த சந்தேக நபர் குற்றவியல் சட்டம், கணினி குற்றச் சட்டம் மற்றும் பணமோசடிச் சட்டம் பிரிவுகள் 291 (a) மற்றும் (b) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு எகிப்து சென்ற இவர் அமெரிக்க முகாமில் நாய்களை பராமரித்துள்ளார். பின்னர், வீசா காலாவதியானதையடுத்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு 04 வருடங்கள் தங்கியிருந்தார். மனைவியும் இரட்டைக் குழந்தைகளும் அந்நாட்டில் இருந்தபோது, ​​450 டொலர் அபராதம் செலுத்திவிட்டு இலங்கை வந்துள்ளார். கைது செய்யப்படும்போது, அவர் தங்கியிருந்த பன்னிபிட்டியவில் உள்ள வாடகை வீடு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் மனைவிக்கு சொந்தமான வீடாகும்" என்றார்.

சந்தேகநபர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழங்கிய விரிவுரைகள் குறித்தும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

“அவரது கூற்றுப்படி, இந்த சிறப்பு உணர்வு அவருக்கு 2016 இல் வந்துள்ளது. அப்பாவி இலங்கை மக்கள் நிர்வாணத்தை உணர உதவுவதற்காக ஒரு பயணத்தை மேற்கொண்டதாக கூறுகிறார், அவர் தனக்கு 41 ரஹத்துன்வான்சேக்கள் இருப்பதாக கூறுகிறார். மேலும் 03 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்கிறார். விமான நிலையத்தில் இருந்து களனி விகாரைக்கு லிமோசின் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு 25,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. களனி புனித பூமியில் எவ்வித அனுமதியுமின்றி அபத்தமான நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார். கைது செய்யப்படும் வரை அவர் செய்த மொத்த நடிப்பிற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். அவரைப் பின்தொடர்பவர்களில், படல்கும்புர பொலிஸ் சார்ஜன்ட் புண்யசிறி, இரண்டு வைத்தியர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்ணொருவர் அடங்குகின்றனர்” என்றார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எதிர்ப்புத் தெரிவித்தார்.

“பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்பதால் இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று முப்பெரும் பீடாதிபதிகள் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த காலத்தில் காளான் போல ஆயர்களும் தெய்வீக மைந்தர்களும் தோன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு போதிசத்வர் காலமானார். தற்போது களுத்துறையில் இன்னொரு போதிசத்வர் அவதரித்துள்ளார். இதெல்லாம் நடிப்பு, இவர் தொடர்பில் சமீபத்தில் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த பின்னர், "என்னைக் கைதுசெய்தால் நாட்டுக்கே கேடு" என்று, பிரசங்கமொன்றின்போது தெரிவித்திருக்கிறார்.  சர்வ சாதுர்யத்தால் வழக்குகளை தீர்த்து வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு பிணை வழங்குவதை அட்டர்னி ஜெனரல் எதிர்க்கிறார், ஏனெனில் இந்த நபரின் செயல்கள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனையை எதிர்பார்க்கவில்லை. இத்தகைய மனநோயாளிகளுக்கு இரக்கத்துடனும் மருந்துடனும் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, அவரது மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது சந்தேகநபர் அவலோகிதேஸ்வரா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

“இவர் எந்த மதத்தையோ அல்லது மதகுருவையுா குறை கூறவில்லை. அதுமட்டுமல்ல, அவர் புத்தரை தாழ்த்திப் பேசவில்லை. புத்தராக மாற விரும்பும் போதிசத்துவர் பற்றியே அவர் பேசுகிறார். அவதரிக்கப் போகும் புத்தர்களைப் பற்றிச் சொல்ல முடியாதல்லவா? அவர் புத்தராக மாறுவாரா அல்லது நான் புத்தராக மாறுவேனா என்பதை என்னால் கூறமுடியாது. நாளைக் காலை எழுந்தவுடன் புத்தனாக மாறுவதைப் பற்றிக் கூட நினைக்கலாம். ஏனெனில் இது துட்டகைமுனு மீண்டும் பிறந்த நாடு. எனது கட்சிக்காரருக்கு, எந்த நிபந்தனையின் கீழும் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று வாதிட்டார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க மறுத்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முழு நேரத்திலும், சிறைக்கூண்டில் நின்றுகொண்டு அவ்வப்போது சிரித்துக் கொண்டிருந்த சந்தேகநபரான அவலோகிதேஸ்வரவின் நடத்தை குறித்தும் மஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

“வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்பின் போது, ​​குற்றஞ்சாட்டப்பட்டவரின் பதில் மற்றும் அவரது தோரணை நீதிமன்றத்தின் சிறப்பு கவனத்தை ஈர்த்தது. இந்த சந்தேகபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றம் அவதானித்துள்ளது. இதன்படி, சந்தேகநபரை அங்கொட தேசிய மனநல வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து, நீதிமன்றில் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைக்கு உத்தரவிடுகிறேன்.”

சந்தேகநபரின் மனநல மருத்துவ அறிக்கையை எதிர்வரும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட கோட்டை நீதவான் திலின கமகே, சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி