1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது. இன்று

நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

அயோத்தியில் இன்று கண் திறக்கும் பால ராமர்...

அயோத்தியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேம் விமரிசையாக நடைபெறுகிறது.

ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இனி, அயோத்தி வரும் பக்தர்களுக்கு பால ராமர் காட்சிதர உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் இனி ராம ராஜ்ஜியம் தான் என்று மக்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.

மேலும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை, தீபாவளி பண்டிகையை போல் மக்கள் கொண்டாடுகின்றனர்.

ராம ஜென்ம பூமியில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பிரமாண்டமான கோவில்

கடவுள் ராமருக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அவரது பிறந்த பூமியான அயோத்தியில் ஒரு ராமர் கோவில் கூட இல்லை என்பதுதான் இந்துக்களின் ஏக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஏக்கத்தை போக்கும் விதமாக, அயோத்தியில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படும் இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.

3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன.

அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவிலின் கருவறையில் வைக்கப்படும் சிலை மட்டும் சாதாரணமாக இருக்குமா என்ன?

ஆம்! அதுவும் சிறப்பு வாய்ந்ததுதான். இதற்காக மைசூருவில் சுமார் 300 கோடி ஆண்டு பழமை வாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதனை மைசூருவை சேர்ந்த சிற்பிஅருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

5 வயதுடைய பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலை, கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. சிலையில் கண்கள் மட்டும் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது.

கடவுள் விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படும் ராமர்

அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்த தசரதரின் மகனான ராமர், கடவுள் விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுகிறார்.

அவர் ஜனக மன்னரின் மகளான சீதாதேவியை மணமுடித்து அயோத்தியில் வசித்து வந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை, வாழ்வியல் முறையாக கடைபிடித்து வந்த ராமர், அயோத்தி அரசராக முடிசூடும் வேளையில் தந்தையின் கட்டளையால் வனவாசம் சென்றார்.

என் கணவர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி என்று ராமருடன், சீதா தேவியும் கானகம் புறப்பட்டார். அண்ணனுக்கு சேவகன் நானே என்று ராமரின் தம்பியான லட்சுமணனும் அவர்களுடன் புறப்பட்டார்.

கானகத்தில் தங்கி இருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில், இலங்கை வேந்தனான ராவணன், சீதா தேவியை இலங்கைக்கு கடத்தி சென்றான். அந்த ராவணனை இலங்கைக்கு சென்று வதம் செய்து, சீதாவை மீட்டு ராமேசுவரம் வருகிறார் ராமர்.

சிவனை வழிபாடு செய்த பின், ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் நல்லாட்சி செய்கிறார். அவரது ஆட்சியில் மக்கள் சீரும், சிறப்புடனும் வாழ்ந்தனர். இத்தகைய சிறப்புமிக்க ஆட்சியைதான் மக்கள் ராம ராஜ்ஜியம் என்று சொல்கின்றனர்.

பழமையும், நவீனமும் இணைந்த ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள இடம், சரயு நதிக்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. சரயு நதி என்பது கங்கையை போல் பரந்து விரிந்து செல்லும் மிகப்பெரும் ஆறு. எனவே அதன் கரையில் கோவில் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதுமட்டுமின்றி பூலோக ரீதியாக அங்கிருந்து நேபாளம் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

எனவே நிலநடுக்கம், ஆற்று வெள்ளம் என அனைத்தையும் தாங்கி கோவில் பல நூற்றாண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எனவே பழங்கால முறைப்படி கற்களை கொண்டே ஆழமான அஸ்திவாரத்துடன் இரும்பு போன்ற உலோக பயன்பாடு இல்லாமல் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

கோவில் கட்டிட வடிவமைப்பாளர் சோமபுரா கூறும்போது, ராமர் கோவில் பழங்கால முறைப்படி கட்டப்பட்டுள்ள நவீன கோவில் என்றார்.

பால ராமர் சிலையின் சிறப்பு அம்சங்கள்

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால ராமர் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலையின், வெளிப்பகுதியில் மாலை போல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தர் அனுமன், கருடன் சிற்பங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

பக்தர்கள் நன்கொடையில் ஏழுமலையானை மிஞ்சும் ராமர்?

இந்தியாவிலேயே பக்தர்கள் அதிகம் நன்கொடை தரும் கோவிலாக திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 500 கோடி வரை பக்தர்கள் நன்கொடை தந்து உள்ளனர்.

அதே போல் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை பக்தர்கள் நன்கொடை தந்து உள்ளனர். இது சராசரியாக ஆண்டுக்கு ரூ.1666 கோடியாக இருக்கிறது. எனவே வருங்காலங்களிலும் இதேநிலை நீடிக்கும்பட்சத்தில் ராமர் கோவில் வருமானம், திருப்பதி ஏழுமலையான் கோவிலை மிஞ்சுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோவிலும், தமிழகமும்...

  • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடியவர் தமிழகத்தை சேர்ந்த கே.பராசரன் என்ற மூத்த வக்கீல் தான். இவர், இந்த வழக்கில் வாதாடும் போது ராமருக்காக தனது காலில் செருப்பு அணியாமல் வாதாடினார். எனவே அவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோவில் கட்டுவதற்கு அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் தலைவராக கே.பராசரன் நியமிக்கப்பட்டார். தற்போது இவர் கோவிலின் நிரந்தர அறக்கட்டளை உறுப்பினராக உள்ளார்.
  • இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள கோவில்கள்தான் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கிறது. எனவே இதுபோல ராமர் கோவிலும் நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக கோவில் கட்டிட கலையை பின்பற்றி ராமர் கோவில் கட்டப்படுகிறது. அதனை கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் “தினத்தந்தி”க்கு அளித்த சிறப்பு பேட்டியில் பெருமிதத்துடன் கூறினார். இது ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
  • ராமர் கோவிலுக்கான கதவுகள், மணிகள் போன்றவை தமிழகத்தில் இருந்து சென்று இருக்கின்றன. அதேபோல் ராமேசுவரம், திருச்செந்தூர் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தம், மதுரை, தஞ்சை, காஞ்சி, கும்பகோணம் போன்ற புராதன நகரங்களில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர்கள், சிற்பங்களை செதுக்கும் என்ஜினீயர்கள் என கட்டுமான துறையில் ஏராளமான தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி கோவிலின் தரிசன நேரம்

அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஆனால் இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. இதே இணையதளத்தில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம். கோவில் திறக்கப்பட்டவுடன் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தீபாவளி பண்டிகையைபோல் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி இன்று இரவு அயோத்தியில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். அதுபோல், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ‘ராம ஜோதி’ ஏற்றி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களும் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘கருண்’ என்ற விசேஷ டிரோன் உதவியுடனும் கண்காணிப்பு பணி நடக்கிறது.

சரயு நதியில், நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இதேபோல் டெல்லியிலும் முக்கிய கோவில்கள், சந்தைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விழாக்கோலம் பூண்ட அயோத்தி

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் 7 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர்கள் அயோத்திக்கு விரைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று லக்னோ சென்றடைந்தார். இன்று அயோத்தி செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார். யோகா குரு பாபா ராம்நாத், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ராம்நகரியை அடைந்தனர்

இது தவிர நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி சென்றுள்ளனர். அவர்கள் அயோத்தி நகர எல்லையில் தங்கியுள்ளனர். இதனால் நகரம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்தி நகரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே விழாக்கோலம் பூண்டது. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மராட்டிய மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 அலங்கார செடிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இரவு நேரத்தில் கோவில் வளாகம் ஜொலிக்கும் வகையில் வண்ண வண்ண மின்விளக்கு சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களும், அயோத்தி அரச குடும்ப மாளிகையான ‘ராஜ் சதன்’ ஆகியவையும் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் ஏராளமான கலைக்குழுவினர் குவிந்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் ராம பாதையில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறிய மேடைகளில் ராமர் பாடல்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நடனம் ஆடி வருகிறார்கள். மேலும் ராமர், சீதை, லட்சுமணன் வேடம் அணிந்தவர்கள் நகரம் முழுவதும் நடனமாடி வருகிறார்கள்.

சிலை பிரதிஷ்டை விழாவில், பிரதமர் மோடி

சிலை பிரதிஷ்டை விழாவில், பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ்ஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், 125 துறவிகள், மடாதிபதிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்கிறார்கள்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை 10.55 மணிக்கு ராமஜென்மபூமிக்கு வருகிறார். பகல் 12.05 மணி முதல் 12.55 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். பின்னர், குபேர் தில சிவன் கோவிலில் ராமர் சிலையை வழிபடுகிறார்.

இன்று நடைபெறுகிறது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும்.

ராமர், திரேத யுகத்தில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தவர் ஆவார். அதனால், அபிஜித் முகூர்த்தத்தில் சிலை பிரதிஷ்டை நடக்கிறது.

பஞ்சாங்கப்படி, இன்றைய தினம் பவுஷ் மாதம் சுக்ல பட்சத்தின் துவாதசி திதி ஆகும். அபிஜித் முகூர்த்தத்துடன், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரவி யோகம் ஆகியவையும் இந்த நாளில் அமைந்துள்ளன.

கும்பாபிஷேகத்தின்போது, ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்படும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மங்கல இசை இசைப்பார்கள்,

நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை

இதனிடையே கோவில் கருவறையில் வைப்பதற்கான 51 அங்குல உயரம் கொண்ட பால ராமர் சிலை, மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜ உடையில், நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை, வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது.

தற்போது, சிலையில் கண்கள் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது துணி அகற்றப்படும்.

அயோத்தி கோவிலில் சிறப்பு பூஜைகள்

அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது.

நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமாக உள்ளது.

கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.

கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று (திங்கட்கிழமை) பகல் 12.20 மணிக்கு நடக்கிறது.

கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கின. சரயு நதியில் இருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், சிறப்பு பூஜைக்கு பிறகு ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டன.

கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் அந்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சார்யார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி