1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அவலோகிதேஸ்வரர் என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மஹிந்த கொடிதுவக்குவுக்கு,

மனநல சிகிச்சை தேவையென சட்ட வைத்திய நிபுணர் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதன்படி, மேற்படி சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை மனநல சிகிச்சைக்காக அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அவலோகிதேஸ்வர போதிசத்துவர் என்ற பெயரில் நாட்டுக்கு வந்த மஹிந்த கொடிதுவக்குவை, அவரது ஆதரவாளர்களால் வழிபடப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதுடன், அவரது விரிவுரைகள் மூலம் பௌத்த மதம் அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர், கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜனவரி 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபரின் மனநலம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

இதன்படி, சந்தேகநபர் நேற்று அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு வைத்தியர்கள் கிட்டத்தட்ட 03 மணித்தியாலங்கள் அவரது மன நிலையை பரிசோதித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கு இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவின் சார்பில் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்தார்.

“நீதிபதி அவர்களே, இந்தச் சந்தேகநபரால் நடத்தப்பட்ட “180 பிரசங்கங்கள்” இணையத்தளத்தின் மூலம் சுமார் 1200 பிரசங்கங்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன. ‘180 சிறு பிரசங்கங்கள்” இணையத்தளத்தின் மூலம் சுமார் 479 பிரசங்கங்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வாரத்திற்கு சுமார் 350 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளது தெரியவந்தது.

“வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சாரதியாக கடமையாற்றும் மதுவந்த ஜயவர்தன என்பவர் 25,000 ரூபாவை செலுத்தி இந்த சந்தேகநபரை விமான நிலையத்தில் இருந்து களனிக்கு வருவதற்காக 'லிமோசின்' ரக வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.

“மேலும், இந்த சந்தேகநபரின் பாதுகாப்பிற்காக 10 உயரடுக்கு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு 85,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

“இதன் மூலம் இந்த சந்தேக நபர் இலங்கைக்கு வந்து நடிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இந்த சந்தேக நபர் தொடர்பான மனநல அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதா என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதவானிடம் வினவினார்.

அந்த விசாரணைக்கு மஜிஸ்திரேட் அளித்த பதில்கள் வருமாறு:

“அங்கொட மனநல மருத்துவ நிறுவனம், இந்த சந்தேகநபர் தொடர்பில் சுருக்கமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் ஊடாக இந்த சந்தேகநபர் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க இந்த வழக்கின் அசல் B அறிக்கை அவசியம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபருக்கு மனநல சிகிச்சை தேவை என்று சிறைச்சாலை தடயவியல் மனநல மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சந்தேகநபரை பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், மனநல சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் எந்த நிபந்தனையிலும் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரினார்.

எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேகநபரை தற்போது பிணையில் விடுவித்தால், அவரது எதிர்கால நடவடிக்கைகள் காரணமாக பொது அமைதியின்மை ஏற்படலாம் என தெரிவித்தார்.

பின்னர் கோட்டை நீதவான் திலின கமகே தனது முடிவை அறிவித்தார்.

“சந்தேகநபருக்கு மனநல சிகிச்சை தேவை என அங்கொட மனநல மருத்துவ நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், சந்தேகநபர் இந்த நேரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டால், அவர் மீண்டும் சமூகமளித்து சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் துறவிகள் உள்ளிட்ட சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும் சூழல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே இந்த சந்தேகநபருக்கு உரிய சிகிச்சை வழங்காமல் சமூகமளிப்பது ஆபத்தானது என்பது நீதிமன்றத்தின் கருத்தாகும். இதன்படி, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும், சிறைச்சாலை ஊடாக மனநல சிகிச்சைக்கு அனுப்புமாறும் உத்தரவிடுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி