1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக வந்துள்ள இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி இளையராஜா, இன்று காலமானார்.

பவதாரணி, கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை மாலை 5.20 மணியளவில், இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுசெல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ‘பாரதி”படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984இல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இரங்கல்:

“என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்:

“இசையமைப்பாளர் இளையராஜா மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்:

“இசைஞானி இளையராஜா மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, பவதாரணியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்:

“இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்:

“சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி, உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி