1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த இலங்கை தீவில் தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்றுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதனடிப்படையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

குறிப்பாக இந்த இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறப்பட்டுக்கொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. வெறும் பேச்சுமட்டத்தில் மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருக்கின்றார்கள். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் ,அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்த  ஆதரவினை வழங்கவேண்டும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நேற்றைய தினம்கூட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை, ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது.

இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்தி மல்லினப்படுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை நிறுத்தப் போவதில்லை .

எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.

மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே.  காரணம் இன்றைய தினம் சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது  திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது .13இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.

ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.

எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும்.இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி