1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு

அக்கூட்டத்திலேயே முறைப்படி அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தெரிவு இறுதியானது. அந்தத் தெரிவை இரத்துச் செய்யும் அதிகாரமோ, இரத்து செய்வதாக அறிவித்தல் விடும் அதிகாரமோ கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குக் கிடையவே கிடையாது.

இன்று நடைபெற வேண்டிய கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவித்து, மாநாட்டை குழப்பியமையும், முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தெரிவு இரத்துச் செய்யப்பட்டதாக சில ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார் என்று கூறப்படும் விடயமும் கட்சியின் யாப்பின்படி தவறான நடவடிக்கைகள்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் அவரைக் கூட்டாக நேரில் சென்று சந்திக்கும் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பியும், எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் இந்த விடயங்களை அவருக்கு நேரில் சுட்டிக்காட்டி அவரை நெறிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயங்களை கட்சியின் வட்டாரங்கள் தெரியப்படுத்தின. கட்சியின் யாப்பின் விதி 13 (உ) 1. பிரிவின் பிரகாரம் தேசிய மாநாட்டுக்கு முதல் நாள் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்துடன் கட்சியின் தலைமைப் பொறுப்பு புதிய தலைவரிடம் வந்து விடும். இது யாப்பின் மிகத் தெளிவாக உள்ளது.

அதன் பின்னர் நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்துக்குப் புதிய தலைவரே தலைமை வகிப்பார். எனவே, நேற்றுக் காலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துடன் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பின்னர் மதிய போசன இடைவேளைக்கு முன்னரும், அதன் பின்னர் மாலை வரையிலும் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்ட நடவடிக்கைகள், நிர்வாகிகள் தெரிவு, நடக்கவிருக்கும் மாநாடு குறித்து எல்லாம் ஏதேனும் முடிவை தலைவர் என்று அறிவுக்கு அதிகாரம் மாவை சேனாதிராஜாவுக்குக் கட்சியின் யாப்பின்படி கிடையவே கிடையாது.

அவற்றை அறிவிக்கும் முழு அதிகாரம் புதிய தலைவர் சிறீதரனுக்கே உண்டு. நேற்று இடம்பெற்று, இறுதி செய்யப்பட்ட நிர்வாகிகள் தெரிவு இரத்து என்று கட்சியின் தலைவர் சிறீதரன் எந்தக் கட்டத்திலும் அறிவிக்கவோ, கூறவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சிறீதரனும் சுமந்திரனும் கூட்டாக மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து இந்த விடயங்களை அவருக்கு நேரில் எடுத்துரைத்து, நிலைமைகளைத் தெளிவுபடுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று நடைபெறவிருந்து இரத்துச் செய்யப்பட்ட தேசிய மாநாடு நிகழ்வு ஒரு சம்பிரதாயபூர்வ வைபவம் என்பதாலும், அது நடைபெறாதமையால் கட்சிச் செயற்பாடுகளுக்கு எந்தப் பங்கமும் நேராது என்பதாலும் அது பெரும்பாலும் நடத்தப்படாமல் கைவிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்குப் பதிலாக புதிய தலைவர் சிறீதரன், பொதுச்செயலாளர் குகதாசன் ஆகியோரடங்கிய கட்சியின் புதிய நிர்வாகிகளை வரவேற்கும் ஒரு நிகழ்வு எல்லோரையும் ஒன்றிணைத்து நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று முறைப்படி தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தத்தமது பணிகளை நல்ல நாளில் ஆரம்பிப்பர் என்றும் கூறப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி