1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டி, மீள முடியாத இக்கட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம்

பிணையெடுத்து உதவ முன்வந்தமையால் மீளவும் மூச்சு விட்டு மீண்டெழக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தூக்கி நிறுத்துவதற்கு பல்வேறு கட்டங்களில் அமைந்த 290 கோடி டொலர் கடன் திட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஏற்பாடுகள் தொடர்பிலும், அதனுடன் தொடர்பு பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், ரணில் அரசின் அணுகுமுறைகள், செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் - குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் - கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

இந்தப் பின்புலத்தில்தான் சர்வதேச நாணய நிதியத்துடனான கடனுதவி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதியத்தின் நிர்வாக இயக்குநருடன் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.

'இங்கு அரசியல் கட்சிகள் அனைத்தினதும் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டு உரையாடலுக்கு வந்து பங்கேற்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநருக்கு அழைப்பு விடுக்க நான் தயாராக உள்ளேன். நாம் எப்படி முன்னேறுவது என்பது தொடர்பில் கூட்டாக ஆராய்வோம்'' - என்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சுங்கத் திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்கத் தின நிகழ்வுகளில் பங்கு பற்றி உரையாற்றுகையில் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் - உதவி பெறும் திட்டம் - இலகுவில் நாம் விலகிச் செல்ல முடியாத கட்டு என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக இந்த ஒப்பந்தத்தின் பொறுப்புக்கள், கடப்பாடுகள் போன்றவற்றை நாடு நிறைவேற்றுவது தொடர்பில் நமக்குள் கூட்டு உரையாடலும், பரிசீலனையும், தீர்மானங்களும் அவசியம் என்று வலியுறுத்துகின்றார்.

அதாவது, நாடு எதிர்கொண்ட மிக மோச மான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின உதவிகளை நாடுவதைத் தவிர வேறு வழி நாட்டுக்கு இருக்கவில்லை. ஆயினும் அந்த உதவிகளைப் பெறுவதற்காக நாட்டின் சார்பில் அரசு வழங்கியுள்ள உறுதிமொழிகள், கடப்பாடுகள், பொறுப்புக்கள் தொடர்பான விடயத்தில் அச்சுமையை அரசு தலைவர் என்ற முறையில் தாமும் தமது அரசும் மட்டுமே பொறுப்பேற்று சுமக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க கருதுகின்றார் போலும். அதன் காரணமாக அந்தக் கூட்டுப் பொறுப்பை ஏற்கும் கடப்பாட்டில் தமது பங்காளிகளாக வருமாறு மற்றைய அரசியல் கட்சிகளை - குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியினரை - அவர் அழைக்கின்றார் என்பதுதான் நிலைமை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்த னைகள் பலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய மீள முடியாத கடப்பாட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் அரசுத் தலைமை, அதனால் மக்கள் மத்தியில் தீவிரமடை க் கூடிய எதிர்ப்பு, எரிச்சல், சீற்றம் போன்றவற்றை அரசியல் ரீதியாகத் தாம் தனித்து எதிர்கொண்டு, ஏற்று, சுமப்பதைத் தவிர்ப்பதற்காக, எதிர்க்கட்சிகளையும் இவ்விடயத்தில் பங்காளிகளாக அழைத்து, அவர்களின் தோளின் மீதும் அந்தச் சுமையைச் சுமத்தி, அரசியல் செய்ய முனைகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது அவரது உரையிலிருந்து தெளிவாக வெளிப்படுகின்றது.

 இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணை எடுப்பது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், இலங்கை நிறைவேற்ற வேண்டிய பூர்வாங்க கடப்பாடுகளில் பலவற்றை இலங்கை நிறைவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் 'வெரிட்டே ரிசேர்ச்' ஆய்வு நிறுவனம், ஆனால் அரசாட்சி முறைமை, நிர்வாகம், வெளிப்படைத் தன்மை ஆகியவை தொடர்பாக நாணய நிதியம் சுட்டிக்காட்டி உள்ள சீர்திருத்தங்களை அரசு இன்னும் கவனத்தில் கூட எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. 2023 நவம்பருக்குள் நிறைவேற்று முடிக்கப்பட வேண்டிய சுமார் 73 பூர்வாங்கக் கடப்பாடுகளில் 60 கடப்பாடுகளை சில தாமதங்களுடனாவது அரசு நிறைவேற்றி உள்ளது.

ஆனால் இவ்விடயத்தில் இலங்கை அரசின் அர்ப்பணிப்பு, நேர்மைத் தன்மை, வெளிப்படைத்தன்மை, ஒழுங்கான செயற்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் கடப்பாடுகள் நிறைவு செய்யப்படவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இத்தகைய அரசுடன் சர்வதேச நாணய நிதியக் கடப்பாடுகளை சுமப்பதில் கூட்டுச்சேர்வது அல்லது பங்காளிகளாவது எதிர்க்கட்சிகள் தரப்புக்கு ஆபத்தானது தான்.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி