1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று, வைபவரீதியாக

ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த ஆரம்ப விழாவை புறக்கணிக்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா கூட்டமைப்பு கட்சிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கை நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உத்தர லங்கா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடித் தீர்மானித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 9.45 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இன்று நாடாளுமன்றத்தை திறப்பதற்காக ஜனாதிபதி அமர்வுக்கு வரும்போது, தமது ஆசனங்களில் இருந்து எழுந்து செல்வது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐமச கூட்டணியின் மற்ற சிறு கட்சிகள் அத்தகைய முடிவில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

9ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது அமர்வு, இன்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போதே, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைத்தார். இதன்படி, இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்புவேளை விவாதம், நாளை மற்றும் நாளை மறுதினம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காலை 10.25 மணிக்கு எம்.பி.க்கள் அவையில் அமர உள்ளனர். முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி அவைக்குள் பிரவேசித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் பிரகடனத்தை வாசித்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவார்.

ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், பெப்ரவரி 8ஆம் திகதி காலை 9.30 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து இன்றையதின நடவடிக்கைகளை முடிப்பார் என குறிப்பிடப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி