1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்ய நடத்தப்பட்ட பரீட்சையின்

பெறுபேறுகளைக் கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கிழக்கு ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு, நேற்று (20) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 46 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே. றாஸி முஹம்மட் மற்றும் சட்டத்தரணி எப்.எச்.ஏ. அம்ஜாட் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

குறித்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 2020.09.16ஆம் திகதி கோரப்பட்டு, அதற்கான பரீட்சைகள் 2021.02.27 மற்றும் 2021.10.30 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தன. பரீட்சைகளின் பெறுபேறுகள் புள்ளிவாரியாக வெளியிடப்படாமல் வெறுமனே நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என ஒரு பட்டியலும் குறித்த பரீட்சையில் வெட்டுப்புள்ளியை விடக் குறைவாகப் பெற்றவர்கள் என ஒரு பட்டியலுமாக இரண்டு பட்டியல்கள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன என்ற காரணத்தினால், பரீட்சையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நீதிமுறையான எதிர்பார்ப்பு (Legitimate Expectation) தமக்கு இருப்பதனை பிரதான அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கினை மனுதாரர்கள் கோப்பிட்டிருந்தனர்.

பிரதிவாதிகளாக கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளர், கிழக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கை ஆதரித்து சட்டத்தரணி ஜே. றாஸி முஹம்மட் மேற்கொண்ட சமர்ப்பணத்தினையும் பிரதிவாதிகள் சார்பில் தெரிபட்டிருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தினையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர்களால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகப் பிரதானமாகக் கோரப்பட்ட “வழக்கு நிறைவடையும் வரை குறித்த நியமனம் வழங்கப்படக் கூடாது” என்ற இடைக்காலத் தடை உத்தரவுக்கும் அனுமதியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி