1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இன்றையதினம் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை, இன்றைய தினம் (26) ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது, உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தாமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இதில் கையொப்பம் இட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் இதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயற்படுகின்றன. சட்டங்களை ஏற்றுக்கொள்வதோடு அவை சட்டமன்றத்தின் மூலம் செயற்படுத்தப்படுவது மற்றும் அதன் சட்ட மற்றும் அரசமைப்பு அமுலாக்கம் சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளின் பொறுப்பாகும்.

“நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டவிரோதமான முறையிலயே சட்டமாக மாறியுள்ளது. இந்தச் சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார்.

“இதன் மூலம், சபாநாயகர் அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளார். சபாநாயகர் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் சட்டத்தைப் பின்பற்றி, சட்டங்களைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டும். அதை அவர் வேண்டுமென்றே மீறினார். எனவே, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் சபாநாயகரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. அவர் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.

“நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல தடவைகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தத் தவறை சரி செய்யுமாறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த போதும், அதனை வேண்டுமென்றே நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் அத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லை என்பதனால் நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளோம்.

“அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதன் பின்னர் இவ்விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்து பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி