1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டமையை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள கட்சியின்

நிர்வாகிகளான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் முடிந்த கட்சி நிர்வாகிகள் தெரிவுகளை எல்லாம் புறமொதுக்கி வைத்துவிட்டு, அனைத்து விடயங்களையும் ஆரம்பத்தில் இருந்து யாப்பு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கைக் கட்சியின் உறுப்பினரான பரா சந்திரசேகர் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் கட்சியின் தேசிய மாநாட்டுக்கும் நடந்து முடிந்த பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கும் தடை விதித்து நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்திருந்தமை தெரிந்ததே.

இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் குகதாசன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும் முன்னிலையாகினர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் ஆகிய எதிராளிகளின் சார்பில் சட்டத்தரணி பிரஷாலினி உதயகுமாரின் அனுசரணையுடன் சட்டத்தரணி ஆன் குலநாயகம் முன்னிலையானார்.

கட்சியின் யாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன என வழக்காளி குறிப்பிட்ட விடயங்களைத் தமது தரப்பினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும், ஆகையினால் கட்சி விடயங்களை ஆரம்பத்தில் இருந்து கட்சி யாப்புக்கு அமைய முன்னெடுக்கத் தாங்கள் தயார் என்றும் சிறீதரன், குகதாசன், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, வழக்காளிகளுக்கு அவர்கள் கோரிக்கைப் படி. நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குகின்றனர் எனவும், யாப்பு விதிகளுக்கு அமைய இனித் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மீள எடுக்கப்படும் எனவும் அவர்கள் மன்றில் உறுதியளித்துள்ளனர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது தரப்பினர் பதில் வாதங்களை எழுத்து மூல சமர்ப்பணங்களாக முன்வைக்கத் தயார் என்ற போதிலும், மற்றைய எதிராளிகளோடு ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்காக அவர்களின் கருத்தியலோடு இணங்கிப் போகத் தயார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏழாவது எதிரியான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமுகமளிக்காத காரணத்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்து செய்ய உடன்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது, இன்றையதினம் (29.02.2024) திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 “கடந்த மாதம் 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம்.

இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனை. இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். இதன்படி வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எனினும் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து மேலதிக முடிவை எடுப்போம்" என்றார்.

மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

tamil-arasu-katchi-e1709196246873.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி