1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம்,புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித

உரிமைகள் ஆணையாளர் வோல்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தமது வாய்மூல அவதானிப்பு அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

“படுமோசமான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு காரணமான - தவறான - பொருளாதார முகாமைத்துவத்துக்கும் ஊழலுக்கும் பொறுப்புக்கூறக் கோரியும் ஆழமான ஜனநாயகச் சீர்திருத்தங்களை வேண்டியும் இரு வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கில் இலங்கையர்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். நாட்டின் சகல சமூகங்களுக்கும் பயன்தரக்கூடியதாக நீண்டகாலத்துக்கு முன்னரே இடம்பெற்றிருக்கவேண்டிய மாற்றத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அப்போது இருந்தது.

“பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முக்கியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட அதேவேளை, அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய அல்லது உத்தேச சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து நான் கவலை கொண்டிருக்கிறேன்.

“இணைய வழி பாதுகாப்பு சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம், அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவன மேற்பார்வை மற்றும் பதிவு சட்டமூலம் ஆகியவை அவற்றில் அடங்கும். இவை நிறைவேற்று அதிகாரபீடத்தின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி, பாதுகாப்பு படைகளுக்குப் பரந்தளவு அதிகாரங்களை வழங்குவதுடன், ஒன்று கூடுவதற்கும் கூட்டு அமைப்பதற்கும் கருத்து வெளிப்பாட்டுக்கும் இருக்கும் சுதந்திரங்களை கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் சிவில் சமூகப் பரப்பை மாத்திரமல்ல வர்த்தகத்துக்கான சூழ்நிலை மீதும் தாக்கத்தைச் செலுத்தும்.

“அதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் அனர்த்த விளைவுகள் மிகவும் வசதிகுறைந்த பின்தங்கிய மக்கள் பிரிவினரை தொடர்ந்தும் படுமோசமாக வதைக்கிறது.

“கடந்த வருடம் வறுமை 27.9 சதவீதத்துக்கு உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2022 மார்ச்சில் இருந்து சுமார் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்களின் மாதாந்த வருமானம் குறைவடைந்திருக்கின்ற அதேவேளை, உணவு, போக்குவரத்து, கல்வி செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

“சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும், அதை வேண்டிநிற்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இவ்வருடம் அரசாங்கத்தின் மிகவும் பெரியளவு பட்ஜெட் செலவினம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கே செல்லும்.

“பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு வசதியாக சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு நிதி வசதியையும் ஆதரவையும் வழங்கவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

“நீண்டகால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து இவ்வருடம் 15 வருடங்கள் நிறைவடைகிறது. இருந்தாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. காணாமல்போனவர்களின் ஆயிரக்கணக்கான குடுமப்பங்கள் தங்கள் உறவினர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றன.

“அந்த முயற்சிகளின் போது அவர்கள் அச்சுறுத்தலையும் கைதுசெய்யப்படும் ஆபத்தையும் வன்குறையையும் எதிர்நோக்குகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் நிலத் தகராறுகள் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன. ஓரளவு அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிசெய்யும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும் தற்போது இயங்கவில்லை.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு சுமார் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. உயர்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்த, போதிலும் மக்கள் உண்மையையும் நிதியையும் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

“உண்மை,ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஒன்றுக்கான சடடவரைவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்ற போதிலும், உண்மையை நாடும் நம்பகத்தன்மையான செயன்முறை ஒன்றுக்கான உகந்த சூழல் இன்னமும் தோன்றவில்லை.

“சிவில் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு படைகளினால் கண்காணிப்புக்கு உள்ளாகுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் எனது அலுவலகத்துக்கு தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருக்கிறது.

“இலங்கைப் பாதுகாப்பு படைகளும் பொலிஸரும் பாலியல் வன்முறைகள் மற்றும் ஆள்கடத்தல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக நம்பகமான விவரங்கள் எனது அலுவலகத்துக்குக் கிடைத்து வருவது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்தச் சம்பவங்கள் பிரதானமாக நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே இடம்பெறுகின்றன.

“கடந்த வாரம் புதிய பொலிஸ்மா - அதிபர் நியமனம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 2010 ஆண்டில் நபர் ஒருவர் சித்திரவதை செயயப்பட்ட சம்பவத்துக்கு அவர் பொறுப்பாக இருந்தார் என உயர்நீதிமன்றம் திர்ப்பளித்தபோதிலும் இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் விரிவான பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திநிற்கின்றன.

“பிற்போக்கான சட்டங்களையும் எதேச்சாதிகார அணுகுமுறைகள் மூலமாக இலங்கையில் நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் சாதிக்கமுடியாது. அவை கடந்த காலத்து மனித உரிமைமீறல்கள் பற்றிய கவலைகளை நீடிக்கவே செய்யும்.

“இந்தப் போக்கை உடனடியாக்கி மறுதலையாக்கி கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல்களையும் பொருளாதாரக் குற்றங்களையும் விசாரணை செய்து அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கு நம்பகமான பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நான் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.

“சர்வதேச மற்றும் எல்லை கடந்த நியாயாதிக்கத்தை உகந்த முறையில் பயன்படுத்தவது உட்பட இந்த முயற்சிகளை தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்குமாறும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைச் செய்ததாக நம்பகமான முறையில் குற்றச்சாட்டப்படுபவர்களை இலக்குவைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உறுப்புநாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

“நாட்டின் முரண்பாட்டினதும் பொருளாதார நெருக்கடியினதும் மூலவேர்க் காரணிகளை கையாளுவதன் மூலமாகவும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் மூலமாகவும் மாத்திரமே மெய்யான நல்லிணக்கத்தையும் நிலைபேறான சமாதானம் மற்றும் அபிவிருத்தியையும் அடைவதற்கான வாய்ப்புக்களை இலங்கையினால் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்” என்று உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி