1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல

பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

"ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளைக் கனவில் பார்த்தேன். ஏதோ பெரிய பிரச்சினை நடக்கப்போகிறது என்று நினைத்தேன். போகும் இடத்தில் ஏதாவது செய்துகொள்கிறேன் என்று மகள் கூறினாள். அவள்  எப்போதும் பௌத்த மதத்தைப் பற்றியே நினைப்பாள். விகாரை விகாரையாகச் சென்றாள்” என்று, சம்பவத்தில் உயிரிழந்த 35 வயதான தர்ஷனி திலந்திகா ஏக்கநாயக்கவின் தாயார், கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெஹர்வன் பகுதியில், இலங்கைக் குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடா நேரப்படி, புதன்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

தந்தை வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே, யாரோ அவரைத் தாக்கியுள்ளார். இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கியவர், இலங்கையைச் சேர்ந்த பிராங்க் டி சொய்சா என அடையாளம் கண்டுகொண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டறிந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகுதான், தனுஷ்காவின் கைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், தான் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்துள்ளார்.

அப்போது ​​தனுஷ்க, ஃபிராங்கின் கையில் இருந்த கத்தியைப் பறித்துக்கொண்டு, தனக்கு உதவுமாறு கூறி வீட்டை விட்டு வெளியே ஓடினார். 911 என்ற அவசர அழைப்புக்கு, இரவு 10:52 மணிக்கு தகவல் கிடைத்ததாக ஒட்டாவா காவல்துறை கூறுகிறது.

911ஐ அழைக்குமாறு, ஓர் ஆண் உதவி கேட்டு கத்தியதாக, அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்த அயல் வீட்டு நபரான சாந்தி ரமேஸ் தெரிவித்துள்ளார்.

“வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரண்டு பொலிஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொலிஸ் காரில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும் துயரமானதுமான சம்பவமாகும். அந்தக் குழந்தைகள் பாவம்” என்றார் அவர்.

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா காவற்துறையினர், முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

காவல்துறைத் தலைவர் எரிக் ஸ்டப்ஸ் கூறுகையில்,

"எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம்கண்டு, உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவத்தில் இறந்த 6 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குடும்பம், கனடாவுக்கு புதிதாக வந்துள்ளது. அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார். அவர் காயமடைந்த நிலையில் எம்மை அழைத்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இப்போது அவரது உடல்நிலை சீரடைந்துள்ளது. இந்த கொலைகளுக்கும் காயங்களுக்கும் கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

அண்மையில் கனடாவுக்குச் சென்ற இலங்கைக் குடும்பம் ஒன்றே இந்த அசாதாரண நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

35 வயதான தாயார் தர்ஷனி திலந்திகா ஏக்கநாயக்க, அவரது 04 குழந்தைகளான 07 வயதான இனூகா விக்ரமசிங்க, 04 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான ரின்யானா விக்கிரமசிங்க மற்றும் 02 மாத குழந்தை கெல்லி விக்கிரமசிங்க, விக்கிரமசிங்க குடும்பத்தின் நெருங்கிய உறவினரான 40 வயதான காமினி அமரகோன் என்பவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட இரண்டு வயது சிறுமி ரின்யானா விக்ரமசிங்கவின் பிறந்தநாள், இம்மாத ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டிருந்தது. கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய பிராங்க் டி சொய்சா என்ற மாணவனே, கொலைக்குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற அதே வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்க குடும்பத்தாரின் கொலைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அந்த இளைஞன், விக்கிரமசிங்க குடும்பத்துடன் வசிப்பதற்கு முன்னர், வேறொரு இலங்கைக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.வீடியோ கேம்களுக்கு அதிக அடிமையாக இருந்த பிராங்க், மிகவும் வன்முறையாக நடந்துகொள்பவர் என்று தெரியவந்துள்ளது.

குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின்படி அவர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அதன்படியே தனுஷ்கவினால் ஃபிராங்கிற்கு தங்க இடமளித்திருந்தார்.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் ஒட்டாவா நகரில், இதுபோன்ற படுகொலைகள் அரிதாகவே கருதப்படுகின்றன.

நவீன வரலாற்றில், தலைநகரில் நடந்த மிகக் கொடிய படுகொலை இது என்று கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் படுகொலை, இந்த வீதியில் நடந்த மிக மோசமான சோகம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உயிரிழந்த இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு கவலை தெரிவித்தார்.

அப்பகுதி மக்கள், இறந்தவர்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய வணக்கத்திற்குரிய நுகேகலய ஜினாநந்த தேரர், கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சிறுவர்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி