1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்

அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எட்டுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பான தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பாராளுமன்றத்துக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு கடன் வழங்குநர்கள், வர்த்தக கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, விரிவான விளக்கத்தை அளித்ததுடன், இந்த பேச்சுவார்த்தைத் சுற்றுகளை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைத் தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்கான விரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி