1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும்

நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை இந்தியச் சங்கம் (Sri Lanka India Society) நேற்று முன்தினம் (14) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோர் ​​பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விசேட விருந்தினராக கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதன்போது விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், இந்திய – இலங்கை உறவுகளின் அண்மைக்கால சிறப்பம்சங்கள் அடங்கிய “மைத்திரி” சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.

இவ்விழாவில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மத மற்றும் கலாச்சார ரீதியான பாரிய பிணைப்பு உள்ளது. மேலும் நமது இரு நாடுகளுக்கும் பொதுவான பாரம்பரியமும் உள்ளது.

நானும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக கைச்சாத்திட்ட தொலைநோக்கு பிரகடனம் செயற்படுத்தப்படும் நிலையில் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவது விசேட அம்சமாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவை பலப்படுத்தும்” தொலைநோக்கு அறிக்கை”யை தொடர்ச்சியாக முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகள், இரு நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பது, இரு நாடுகளுக்கும் பிரிட்டிஷ் சட்டக் கட்டமைப்பு இருப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை நாம் மறந்துவிட்டோம்.

அந்த உறவு கலாச்சார உறவுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மொஹஞ்சேதாரோ நாகரிக காலத்திலிருந்தே இந்தியாவில் இருந்து கப்பல்கள் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் இலங்கையில், அனுராதபுரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு இராச்சியங்களும் தங்கள் பொருளாதார நலன்களைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கூட்டணி வைத்தன அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டன.

இந்த மூன்று இந்திய இராச்சியங்களும் உலகின் கிழக்கு நாடுகளை அணுகுவதற்கு பல சந்தர்ப்பங்களில் திருகோணமலை துறைமுகம் ஒரு முக்கிய துறைமுகமாக மாறியது. முன்னேஸ்வரம் கோயில், மாந்தையிலுள்ள கேதீஸ்வரம் கோயில், நகுலேஸ்வரம் கோயில், திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் கோயில் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் கிடைத்த நாணயங்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பற்றியும் தெளிவுபடுத்துகிறது. அனுராதபுரத்தில் பழைய கிராமங்களில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது தென்னிந்திய வர்த்தக அமைப்புகளால் வெளியிடப்பட்ட நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரூபா மற்றும் இந்திய ரூபாயின் பாவனை தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னரே, கடந்த காலங்களில் மக்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குப் பொதுவான நாணயத்தைப் பயன்படுத்தியதை இது காட்டுகிறது. அதற்கேற்ப, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த நாம் இப்போது உழைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஆகிய அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த வேண்டும்.

மேலும், தென்னிந்தியாவிற்கு வசதியாக இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன்படி, தென்கிழக்காசியா மற்றும் வங்காள விரிகுடாவின் பிராந்தியங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் திருகோணமலையின் மீள் அபிவிருத்தி தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா பிராந்தியத்தின் மூலோபாய மதிப்பு காரணமாக, கொழும்பு துறைமுகத்தின் பயன்பாடு தற்போது மேம்பட்டு வருகிறது. இதன் ஊடாக இலங்கைக்கு எவ்வாறு பயன்களைப் பெறுவது மற்றும் இலங்கையிடம் உள்ள மேலதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இந்தியாவுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் செயற்பட்டு வருகிறோம்.

சுற்றுலாத்துறையில் கவனம் செலுத்துகையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவுக்கு அடிக்கடி வரும் இலங்கையர்களும் உள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதைப் போன்றே இலங்கையில் இருந்து திருப்பதி, அயோத்தி, குருவாயூர் போன்ற இடங்களுக்கு இலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக செல்கின்றனர்.

நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்து சமுத்திரம் வளர்ச்சி அடையும் போது நமது நாடும் வளர்ச்சி அடையும். நாம் பொருளாதார ஒருங்கிணைப்பை நோக்கி நகர்ந்து வருகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தபோது பின்பற்றியதை நாம் இங்கு செய்யக்கூடாது. அதிலிருந்து வெளியேறுவதாக பின்னர் அவர்கள் முடிவு செய்தனர். மேலும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவது குறித்து இன்னும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த விடயம் நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. இருப்பினும், நமக்கு இருக்கும் வாய்ப்புகளை நாம் உணர வேண்டும். இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு முன்னேறுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இது மிகவும் எளிதான செயல் எனலாம்.

பெங்களூரில் இருந்து ஒருவர் ராஜஸ்தானுக்கு செல்வதை விட எளிதாக விடுமுறைக்கு இலங்கைக்கு வரலாம். ராஜஸ்தானை அடைய இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் இலங்கையை அடைய ஒரு மணி நேரம் மட்டுமே செல்லும்.

கைத்தொழில் நடவடிக்கைகளைப் போன்றே இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் விநியோகச் சங்கிலிகளை நிறுவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்து சமுத்திரம் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா போன்ற ஏனைய நாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

அப்போது இந்து சமுத்திர வலயம் பொருளாதார மையமாக மாறும். அடுத்த 50, 60 ஆண்டுகளில், ஆபிரிக்க வலயமும் வளர்ச்சியடைவதால் அந்த மாற்றம் நிகழும். எனவே இந்தப் பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவுகள் உள்ளன. இந்த அனைத்து துறைகளிலும் நமது இரு நாடுகளும் நெருக்கமாக உள்ளன. எனவே நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேற வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும்.

எனவே, எமது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கடந்த வருடத்தில் முன்னெடுத்த வேலைத் திட்டத்திற்காக இலங்கை – இந்தியச் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் நாம் வெளியிட்டிருக்கும் இந்த “தொலைநோக்கு” அறிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான அரவிந்த் குமார், ஷெஹான் சேமசிங்க, சுரேன் ராகவன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், இலங்கை – இந்திய சங்க அங்கத்தவர்கள் மற்றும் இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sri-Lanka-India-Society-22.jpg

 

Sri-Lanka-India-Society-15.jpg

 

Sri-Lanka-India-Society-24.jpg

 

Sri-Lanka-India-Society-14.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி