1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 700

முழு உரிமையுள்ள காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) காலை வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வழங்கப்பட்டது.

“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதன் முதற்கட்டமாக இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.


PV

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட முன்னெடுப்பாக உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் மூன்று வருடங்களில் நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மக்கள் தமது வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவது அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் மயமாக்குவதாகும் எனவும் அது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நேரடியாகப் பங்களிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

1935 முதல், மக்களுக்கு விவசாயம் செய்வதற்கும் வீடு கட்டுவதற்கும் காணிகளின் உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் முழுமையான உரிமை வழங்கப்படவில்லை. எனவே, உங்களுக்கு முழு உரிமையுடன் காணிஉறுதி வழங்க முடிவு செய்தேன். இவ்வாறு முழு உரிமையுடன் காணி உறுதிப் பத்திரம் வழங்கினால் மக்கள் நிலத்தை விற்றுவிடுவார்கள் என்று பலர் கூறினர். இரண்டு தலைமுறைகள் அனுபவித்த நிலத்தை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

PV1

கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அந்த நெருக்கடியின் காரணமாக இந்நாட்டில் சுமார் எழுபது சதவீத மக்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இன்று வழங்கப்படும் காணி உறுதியினால் உங்களின் சொத்து மதிப்பு உயரும்.

இந்த நிலங்களைப் பயன்படுத்தி நவீன விவசாயத்தை உருவாக்க பங்களிக்க வேண்டும். இதனூடாக நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க முடியும். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போது நீங்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பாக இது இருக்கும். மல்வத்து ஓயா திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மன்னார் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையை இதனைவிட இலகுவாக மேற்கொள்ள முடியும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் இந்த நாள் பொன்னான நாளாகும். ஆளணிப் பிரச்சினை இல்லாவிட்டால் மேலும் பலருக்கு இந்த உறுதி வழங்க முடியும். இது ஒரு நீண்ட செயற்பாடாகும். எதிர்காலத்தில் இதனைவிடத் துரிதமாக காணி உறுதி வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூர நோக்குடன் ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார். அடுத்த வருடமும் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும். அவரின் கரத்தை நாம் பலப்படுத்த வேண்டும்.

மன்னார் மாவட்ட மக்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றுக்கும் தீர்வு வழங்க வேண்டும்.

வடமாகாண ஆளுநர் வீ.எம்.எஸ் சார்ள்ஸ்,

5 மாவட்டங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்தார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, காணி உறுதி என பல திட்டங்களை கடந்த மூன்று தினங்களில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் அவர் செவிசாய்த்து தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சிரமங்களுக்கு மத்தியில் சூறாவளி பயணம் மேற்கொண்டு மன்னார் மாவட்டம் தவிர சகல மாவட்டங்களுக்கும் சென்று இவற்றை முன்னெடுத்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

PV 2

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். காணி உறுதி வழங்குவதன் ஊடாக இப்பகுதி மக்களுக்கு விடிவு காலம் கிடைத்துள்ளது. இது போதுமானதல்ல. 20 இலட்சம் காணி உறுதி வழங்கப்படுமானால் வன்னியில் காணிஉறுதி அற்ற எவரும் எஞ்சமாட்டார்கள். பிரதமராக இருந்த போது நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அவற்றை திறந்து வைத்தது தொடர்பில் எமது நன்றியை தெரிவிக்கிறோம்.ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்யாத போதும் மன்னாரில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தி அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். காணி உறுதி பெற்றவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம்,

வடக்குக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு பல அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். எமது பிரதேசத்தில் நடைபெறும் இந்த அபிவிருத்தித் திட்டங்களில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு முடிந்தளவு ஆதரவை அரசுக்கு வழங்கி வருகிறோம். ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. வாடகை காணியில் வாழ்ந்த உணர்வுடன் வாழ்ந்த மக்களுக்கு விடுதலை கிடைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

PV5
பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன் உள்ளிட்ட வடக்கு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ. சரத்சந்ர உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி