1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக

முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 
 
சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுதான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. 
 
பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் நிகழ்வு. இதற்கு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக நாங்கள் செல்ல கூடாது. 
 
அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். சிவில் சமூகம் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம். அவர்களின் ஆலோசனைகளை வரவேற்போம். 
 
தேர்தல் என்பது அரசியல் நிகழ்ச்சி. அந்த அரசியலில் மக்களை வழி நடத்த சிவில் சமூகத்தை மக்கள் தெரிவு செய்து அனுப்பவில்லை. மக்கள் எமக்கே ஆணை தந்துள்ளார்கள். நாங்களே மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்த கூடியவர்கள். நாங்கள் எங்கள் பொறுப்பை விட்டு விட்டு மக்களை உதாசீனப்படுத்த முடியாது.
 
இதையெல்லாம் தாண்டி நாங்கள் நிறுத்தி தான் ஆவோம் என யாராவது ஒற்றைக்காலில் நின்றால் அவர்களுக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. 
 
அதற்கு எதிராக நாங்கள் செயற்பட்டால் எங்களுக்கு உடனடியாக துரோகி பட்டம் கட்டுவார்கள். அதற்காக நங்கள் ஒழித்து ஓட போவதில்லை. துரோகி பட்டத்திற்கு இன்று பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. 
 
ஆனால் என்ன தான் செய்தாலும் எங்கள் மக்களின் அடிப்படை உரித்தை விட்டுக்கொடுக்கவோ , விலை பேசவோ நாம் அனுமதிக்க போவதில்லை. 
 
தமிழ் வேட்பாளர் என ஒருவரை அடையாளப்படுத்தி முற்படுத்தினால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் நாங்கள் . ஏனென்றால் அவர் தேர்தலில் படு தோல்வி அடையும் போது, இது எங்களின் அரசியல் நிலைப்பாடு அல்ல. இது யாரோ செய்த கோமாளி கூத்து என நாங்கள் சொல்ல கூடியதாக இருக்க வேண்டும். 
 
எனவே எமது கட்சியை சார்ந்தவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும். என்னையும் துரோகி என்று சொல்லி விடுவார்களோ என ஒழித்து ஓட வேண்டாம். பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நங்கள் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.  
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி