1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்புடன் கிழக்கிலிருந்து வடக்கே பயணித்த சமாதான ஊர்வலத்தை நீதிமன்றத் தடைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஊடாக அச்சுறுத்தி தடுக்க இயலாது, ஆத்திரமடைந்த அரசாங்கம் பங்கேற்பாளர்களை சிறையில் அடைத்து, அவர்களது வாகனங்களை கைப்பற்ற முடியுமென பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளது. 

அதே நேரத்தில், பல மத குழுக்கள் தடை செய்யப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பெப்ரவரி 8ஆம் திகதி, தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் இடம்பெற்ற  கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஐந்து  நாள் பேரணியை  கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

”நாங்கள் தடை உத்தரவை பெற்றுள்ளோம். இப்போது இவர்களின் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. இவர்களின் வாகனங்களின் இலக்கங்கள் எங்களுக்குத் தெரியும். மக்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடுத்து அந்த வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும். அவர்களை சிறையில் அடைக்கக்கூடிய இயலுமை எங்களுக்கு காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

போராட்டம் இடம்பெற்ற வீதிகளில் அரசாங்க பாதுகாப்புப் படையினர் உயர் தொழில்நுட்ப கமராக்கள் மற்றும் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி அதனை பதிவு செய்ததாக  ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என வர்ணித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பையும் நீக்கியதோடு ”சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாயின், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இவ்வாறு ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம் மத அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"நாங்கள் நாளை, நாளை மறுநாள் ஏராளமான மத குழுக்களை தடை செய்வோம்.  ஏராளமான மதரஸா பாடசாலைகளை தடை செய்வோம், ஏனென்றால் நம் நாட்டில் ஒரு பிள்ளைக்கு நாட்டின் கல்விக் கொள்கையின்படி கற்பிக்கப்பட வேண்டும். ஒருவர் விரும்பியபடி பாடசாலைகளை ஆரம்பித்து, விரும்பிய பாடங்களை கற்பிக்க முடியாது.”

பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பங்கேற்பதை தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவர் விபரித்தார், இந்த பேரணியானது "இயற்கைக்கு மாறான கூட்டம்" என அவர் குறிப்பிட்டார்.

"இப்போது கொழும்பில் இதைச் செய்ய பொலிஸார் அனுமதிக்கமாட்டார்கள்” என மற்றுமொரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் குறிப்பிட்டார். 

எவ்வாறெனினும், எந்த கொழும்பு பேரணியில் அவர் பங்கேற்றார் என்பதை  நிகழ்ச்சித் தொகுப்பாளர் விரிவாகக் கூறவில்லை, ஆனால் அது பொலிஸால் தடுக்கப்பட்டது என மாத்திரம் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் வழக்கு விசாரணை ஆரம்பம்

பல தடைகளுக்கு மத்தியில், பெப்ரவரி 8ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  கிழக்கு மாகாணம் பொத்துவில்லில் இருந்து, வடக்கின் பொலிகண்டி வரை  பெரிய அளவிலான சமாதான அணிவகுப்பின் தலைமைகளுக்கு  எதிரான நீதிமன்ற நடவடிக்கை முல்லைத்தீவில்  ஆரம்பமானது.

எவ்வாறெனினும், தேசிய சுதந்திர தினத்தன்று, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பங்கேற்புடன் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இருந்து, பொது நூலகத்திற்கு அணிவகுத்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் போராட்ட அணிவகுப்புக்கு பொலிஸார் தடை உத்தரவு எதனையும் பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி