1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தலைநகரில் அமைந்துள்ள பிரபலமான ஆண்கள் கல்லூரின் ஒன்றின் அதிபரை நீக்கி, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக  ஓய்வுபெற்ற அதிபரை நியமிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டுகிறது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ. அபேரத்ன தானாக முன்வந்து பதவி விலகுவதாக கூறி கல்விச் செயலாளரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், எனினும் அதன் பின்னர் அவரே தனது இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், கல்வி இராஜாங்க அமைச்சினால் அபேரத்னவுக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், இது கடுமையான அரசியல் தலையீட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள, சட்டவிரோத செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர கரியவசம், அபேரத்னவை பதவியில் இருந்து அகற்றுவதில் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக  நேற்றைய தினம் (16) வெளியிட்ட ஊடக அறிக்கையில் அறிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாகர காரியவசத்தின் தலையீட்டை  ஊடக சந்திப்பில் வெளிப்படையாகவே விமர்சித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அதிபர் அபேரத்னவிற்காக முன்னிற்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 8,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும்,  இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலை அதிபர் குறித்த விடயத்தில் இத்தகைய அரசியல் தலையீடு காணப்படுவது, கல்வியில் கடுமையான சரிவுநிலையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

"பிரதான பாடசாலைகளில் இதுபோன்ற நிலை காணப்படுமாயின், மாகாண மட்ட பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அதனைவிடுத்து அழுத்தம் கொடுத்து அதிபரின் ஒப்புதலுடன் அவரை இடமாற்ற கல்விச் செயலாளர் முயற்சிப்பது,  அரசியல் நோக்கத்தை  நிறைவேற்றும் செயற்பாடாகும்.” 

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் இத்தகைய குறுக்கீடு ஏற்படுவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தகைய தலையீட்டை நிறுத்த உடனடியாக தலையீடு வேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சமுதாயத்தில் பரபரப்பான விவாதத்திற்கு உட்பட்டுள்ள முன்னாள் நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் குறித்த குழு, ரோயல் கல்லூரியின் அதிபர் பதவி தொடர்பாக அருவருப்பான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

”இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத அரசியல் பழிவாங்கல் குறித்த குழுவின் அறிக்கையின் பக்கச்சார்பான பரிந்துரைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன.  உதாரணமாக, ரோயல் கல்லூரியின் முன்னாள் அதிபர் உபாலி குணசேகர 55 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் ஓய்வுபெற்றுள்ளதாக குறிப்பிட்டு,  அவரை மீண்டும் பதவியில் அமர்த்தி மூன்று வருடங்கள் சேவையை பெற்றுக்கொள்ள பரிந்துரைப்பது நகைப்பிற்குரிய விடயமாகும்.”

முன்னாள் அதிபர் உபாலி குணசேகர மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படுகின்ற போதிலும், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு தனியார் பாடசாலையின் அதிபராக  அவர் பணியாற்றி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது அவர் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், ரோயல் கல்லூரி அதிபர் பதவிக்கு அவர் மீண்டும் நியமனம் செய்வதற்கும், தற்போதைய அதிபரை பதவி நீக்குவதற்கும் இடையில் சூழ்ச்சி  ஒன்று காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், ரோயல் கல்லூரியின் அதிபர் பதவியை அரசியல்மயமாக்குவதானது, கல்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என ஆசிரியர் சங்கத்தின் தலைவர், ஜோசப் ஸ்டார்லின் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி