1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழக ஆளுநர் மாளிகையில் 7 ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். `அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்?' என்ற விவாதமும் முடிவுக்கு வரவில்லை. என்ன நடக்கிறது தி.மு.கவில்?

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்டனர். இந்நிலையில், இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக வரும் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்பு வைபவம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சியை எளிமையாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தி.மு.க அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், ``புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் புதிய அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதில் தி.மு.க தலைவர் உறுதியாக இருக்கிறார். அனுபவம் பிளஸ் இளமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே அமைச்சரவை பட்டியல் தயாராகியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தனியாக துறையும் உருவாக்கப்பட உள்ளது. தனது உதவியாளரிடம் உள்ள ஐபேடில் புதிய அமைச்சரவை பட்டியலை தயார் நிலையில் தி.மு.க தலைவர் வைத்திருக்கிறார்," என்கிறார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

பட மூலாதாரம்,DMK

தொடர்ந்து பேசுகையில், ``மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றுப் போனதை தி.மு.க நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அங்கு பா.ஜ.க போட்டியிடுவதால் வெற்றி எளிதாக இருக்கும் என கணக்கு போட்டனர். ஆனால், தேர்தல் முடிவில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலட்சுமி தோற்றுப் போனார். ஒருவேளை அவர் வெற்றி பெற்று வந்திருந்தால் சபாநாயகர் பதவியைக் கொடுக்கவும் ஸ்டாலின் முடிவு செய்து வைத்திருந்தார். அது நிறைவேறாமல் போய்விட்டது" என்றவர், அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படலாம் என்பது குறித்து விவரித்தார்.

``அமைச்சரவையில் புதியவர்களுக்கான வரிசையில் மா.சுப்ரமணியன், டி.ஆர்.பி.ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், அன்பில் மகேஷ், பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், ஆவடி நாசர், சேகர்பாபு ஆகியோர் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சீனியர்களில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், தமிழரசி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, 50:50 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைய வேண்டும் எனத் தி.மு.க தலைமை நினைக்கிறது.

அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் தோற்றுவிட்டதால், இந்தமுறை ஒட்டன்சத்திரம் அர.சக்ரபாணிக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. துரைமுருகனுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். மேலும், சேப்பாக்கத்தில் வென்ற உதயநிதியின் பெயர் தற்போது வரையில் அமைச்சரவை பட்டியலில் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. `அமைச்சரவையில் இப்போது சேர்க்க வேண்டாம், பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என குடும்ப உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். கடைசி நேரத்தில் அவரது பெயர் சேர்க்கப்படுமா எனவும் தெரியவில்லை" என்கிறார் விரிவாக.

`தி.மு.க அமைச்சரவை எப்படிப்பட்டதாக இருக்கும்?' என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``புதிய கலவையில் அமைச்சரவை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நேர்மையான, வெளிப்படையான அரசைக் கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் நினைக்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் எந்தவிதத் தவறுகளும் நேராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

அதற்கு உதாரணமாக, நேற்று காலை சென்னையில் அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கட்சியைவிட்டு நீக்கிய சம்பவத்தைக் கூறலாம். இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே இதுபோன்ற நடவடிக்கைகளை மிக முக்கியமானதாகப் பார்க்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய வகையில் துடிப்பான செயல்பாடுகளைக் கொண்டவர்களை அமைச்சரவையில் நியமிக்கும் முடிவில் தலைமை இருக்கிறது" என்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி