1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனா தொற்றுநோயிலிருந்து கைதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கையில் சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், அங்குனகொலபெலச சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் அங்குள்ள ஏனைய கைதிகள் தொடர்பாக கையாளப்படும்  முறைகள் குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு, ஆணைக்குழுவின் தலைவரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பாதிக்கப்பட்ட கைதிகள் வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்குனுகொலபெலச சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் கைதிகள் எங்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்கள்  என்பது குறித்து அவர் தமக்கு தெளிவான விளக்கத்தை தரவில்லை.” எனவும் குறித்த முறைப்பாட்டில், அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக  பெரேரா மற்றும் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு இது  தடையாக அமைந்துள்ளதாக இரு மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

கைதிகள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்து வரும் நிலையில், இதன் விளைவாக அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போராட்டங்களை நடத்துவதற்கான பின்னணி அங்குனுகொலபெலச சிறைச்சாலையில் உருவாகியுள்ளதாக,  அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகவே சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைத் தொடர்பில் ஆராய்ந்து உரிய  நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அங்குனுகொலபெலச சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில், அடையாளம் காணப்பட்ட சுமார் 30 கொரோனா தொற்றாளர்கள் தங்களை  தனிமைப்படுத்த கோரி போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, நேற்று முன்தினம் (04) இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தகவல்களுக்கு அமைய இலங்கையின் சிறைச்சாலைகளில்  தற்போது 25,000ற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

சிறைச்சாலையின் அதிக நெரிசல் மற்றும் போதுமான சுத்தமின்மை ஆகிய  காரணங்களால் கொரோனா தொற்று, சிறைச்சாலைகளில், வெளி உலகத்தை விட பல மடங்கு அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிறைகளில் பிசிஆர் சோதனைகளை நடத்தப்படுவதில்லை என்பதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.”

”அநுராதபுரம் சிறைச்சாலையின் மூன்று கைதிகள் அண்மையில் உயிரிழந்தனர்,  
மஹர சிறைச்சாலையில், 11 கைதிகள் கொரோனா தொற்றிலிருந்து  தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.” என்ற விடயத்தை
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தனது முறைப்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நினைவூட்டியுள்ளது.
 
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி