1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல நெருக்கடிகளுக்கு இடையே தாயகத்திலுள்ள தமிழர்கள் இயன்றளவில் தமது வீடுகளிலும் ஆலயங்களிலும் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அந்த அஞ்சலி நிகழ்வை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து இடையூற்றை ஏற்படுத்துவது வழமையான ஒன்றாகிவிட்டது.

இந்தாண்டு கொரோனா பெருந்தொற்று அதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இருந்தபோதிலும் சில ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஆண்மீகவாதிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பினர் தமது இல்லங்களில் விளக்கேற்றினர்.

வேலன் சாமிகள்,சிவாஜிலிங்கம் போன்றோர் தடைகளைத் தாண்டி  முள்ளிவாய்க்கால் திடலில் சுடரேற்றினர்.

இந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், உலகத்தின் பார்வையில் இனப்படுகொலை எனும் போர்வையில் சில அனுகூலங்கள் மற்றும் சுகங்களை அனுபவித்து வருகின்றனர் என்று இலங்கை அரசும் அதை ஆதரிப்பவர்களும் கூறுவதை சமூக செயல்பாட்டாளர்கள் மிகவும் வன்மையான கண்டித்துள்ளனர்.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு என்று அறியப்படும் ஜே டீ எஸ் (JDS) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித பாஷன அபேவர்தன, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய வழியாக ஏற்பாடு செய்திருந்த `முள்ளிவாய்க்காலை நினைவுகூருவோம்` எனும் கலந்துரையாடலில் பங்குபெற்று உரையாற்றும் போதே இலங்கை அரசையும் அதை ஆதரிப்போரையும் கண்டித்தார்.

``இனப்படுகொலை ஒரு அனுகூலமா-அதிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகளுக்காகவே போராடினார்கள்``? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஷன.

அனைத்து அளவுகோலின்படி இனப்படுகொலை எனும் படுபாதகச் செயல் இலங்கையில் உண்மையாகவே இடம்பெற்ற நிலையில்; அதை மறுக்கும் அரசோ அதன் காரணமாக தமிழர்கள் மேற்குல நாடுகளில் அகதி தஞ்சம் பெறுகின்றனர் என்ற விமர்சனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த 2009 முதல் ஆண்டுதோறும் கொழும்பின் வீதிகளில் இலங்கை அரசு தனது வெற்றி குறித்து கொக்கரிக்கிறது, ஆனாலும் இன்று வரை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் நாளாந்தம் இன்னலுறுகிறார்கள் என்று வேதனையுடன் கூடிய தனது உரையில் அவர் கூறினார்.

`` இலங்கை அரசு `பெருமிதம் கொள்ள முடியாத வகையில்`  நிலம், நீர் மற்றும் வான் வழியே, உணவு உறக்கம் மற்றும் மருந்துகள் இன்றி சுருங்கிக் கொண்டு வந்த ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் சுமார் நான்கு லட்சம் மனவுளைச்சல் மற்றும் பட்டினியில் தள்ளியது-அதுவே அரசின் வெற்றி``.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்கள் தன்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்துள்ளது என்றும் அவர் அந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார்.

சிங்கள தேசத்தின் உறுப்பினர் எனும் வகையில் அந்த நிகழ்வு குறித்து தான் வெட்கப்பட்டு குற்ற உணர்வுடன் இருந்தாலும் அதே நேரம் பெருமையும் கொள்வதாகவும் கூறுகிறார் பாஷன அபேவர்தன. தனிப்பட்ட முறையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிக மோசமான வன்செயல்களைத் தடுக்கவோ அல்லது மக்களுக்கு உதவவோ தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு என் மனதை அரிக்கிறது. அதேவேளை தமிழ் தேசத்தில் தப்பி பிழைத்தவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அது குறித்து பேசுவதற்கு என்னை அழைத்ததற்காகப் பெருமை படுகிறேன்`` என்று தனது உரையில் அவர் தெரிவித்தார்.

போரின் இறுதிக் கட்டத்தில் தப்பித்தவர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் இல்லையென்றாலும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இதில் சிறார்களும் அடங்குவர் என்று நினைவு கூர்ந்தார்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது `இனப்படுகொலையே என்பதை வலியுறுத்திய ரோஹித பாஷன அபேவர்தன அங்கு இடம்பெற்றவை இனச்சுத்திகரிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றையெல்லாம் கடந்த ஒன்றாகும் என்று அந்த கலந்துரையாடலில் கூறி வருந்தினார்.

தமிழர் தரப்பில் சிலர் இடம்பெற்ற குற்றங்களை இனப்படுகொலை என்ற பெயரில் அழைக்கக் கூடாது என்று கூறுவதை சாடிய அவர், நடைபெற்ற சம்பவம் இனப்படுகொலையா இல்லையா என்பதை அதிகாரத்திலுள்ளவர்கள் முடிவு செய்ய முடியாது என்கிறார்.

`` இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஒரு பிரேரணை அல்ல; அதை  ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைபட்சமாக வாக்கெடுப்புக்கு விட்டு முடிவு செய்யப்பட வேண்டியதல்ல. பல தசாப்தங்களாக தமிழ் தேசத்தின் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை மற்றும் குற்றங்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒருமனதாக முடிவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை``.

மறுவாழ்வு முகாம்கள் என்று அமைக்கப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். `` மறுவாழ்வு முகாம்கள் என்று அமைக்கப்பட்டவை அடிப்படையில் `ஒரே நாடு-ஒரே தேசம்` என்ற கோட்பாட்டை மூளைச் சலவை மூலம் கட்டியெழுப்புவதே நோக்கமாக இருந்தது. ஆனால் உண்மையில் இந்த `ஒரே நாடு- ஒரே தேசம்` என்பது நீறு பூத்த நெருப்பைப் போன்றது. உண்மையில் பல தலைமுறையினரின் எலும்புக்கூடுகள் மீதே அது கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சுதந்திரம், சமத்துவம் ஆகியவை இராணுவ வல்லாதிக்கத்தின் கீழ் இனவாத அரசால் அழித்தொழிக்கப்பட்டன.``

தமிழ்த் தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளை திட்டமிட்ட வகையில் சிதைப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது மிகவும் வெளிப்படையானது என்கிறார் அவர்.

``இனப்படுகொலை என்ற குற்றம் இடம்பெற்றதா என்பது விசாரணைகள், பரிசோதனைகள், பகுப்பாய்வுகள் மூலமும் சரித்திரத்தின் பின்னணியிலான வழிமுறைகள் மூலமும் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்து தமிழ்த் தேசத்தை அழித்து அதன் மீது (இலங்கை) சிங்கள பௌத்த தேசம் எனும் அடையாளத்தைத்  திணிக்க அடக்குமுறையை முன்னெடுத்தவர்கள் முயல்கிறார்கள்``.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தீவிரமாக முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜே டீ எஸ் அமைப்பின் பாஷன வலியுறுத்தினார்.

வல்லாதிக்க சக்திகளிடமிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொண்டு, நடைபெற்ற குற்றத்தை அச்சமின்றி இனப்படுகொலை என்று ஒப்புக் கொள்வதே நீதிக்கான முதல் படியாக இருக்க முடியும் என்று அழுத்தம் திருத்தமாக `முள்ளிவாய்க்காலை நினைவுகூருவோம்` எனும் கலந்துரையாடலில் பங்குபெற்ற உரையாற்றிய ரோஹித பாஷன அபேவர்த்தன கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி