1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாலியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட ராணுவ கேரணல் கொய்டாவை அந்நாட்டு இடைக்கால அதிபராக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஆகஸ்டில் ராணுவம், ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.  இதன் எதிரொலியாக அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். 

இதனால், அந்நாட்டில் கடந்த 9 மாதங்களாக இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  மாலியின் அதிபராக பாடாவ் மற்றும் பிரதமராக மொக்தார் உவானே பொறுப்பு வகித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பு நடந்தது.

இதில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டதற்கு ஆதரவாக செயல்பட்ட ராணுவ உறுப்பினர்கள் 2 பேர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு இருவர் நியமிக்கப்பட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், அதிரடி நடவடிக்கையாக அதிபர் மற்றும் பிரதமரை கைது செய்தது.  இதேபோன்று ராணுவ மந்திரி சொலேமான் டவ்கோர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது.  கடந்த 9 மாதங்களாக மக்களாட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது.  எனினும், முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கைது நடவடிக்கைக்கு ஆபிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும், அமெரிக்காவும் வன்மையாக கண்டித்துள்ளன. கைது செய்யப்பட்ட மாலியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவை வலியுறுத்தின.

இந்நிலையில், மாலி நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.  ராணுவத்தின் தலைவராக இருந்து வழிநடத்தி சென்று, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட கேர்ணல் அசிமி கொய்டா என்பவரை மாலியின் இடைக்கால அதிபராக அறிவித்து உள்ளது.  அசிமி, அந்நாட்டின் துணை அதிபராக உள்ளார்.

இந்த கொய்டா என்பவரே, கடந்த ஆகஸ்டில், அதிபராக இருந்த பவுபாக்கர் கெய்டாவை ஆட்சியில் இருந்து வெளியேற்றினார்.  அதன்பின்னர் கடந்த திங்கட்கிழமை, அதிபர் பா டாவ் மற்றும் பிரதமர் மோக்டார் உவானே ஆகியோரை கைது செய்யவும் உத்தரவிட்டவர்.

அவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்த பின்னரும் சிறை பிடிக்கப்பட்டு இருந்தனர்.  இதன்பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இதனால், காலியாக உள்ள அதிபர் பதவியை நிரப்பும் வகையில் கொய்டா அந்த பதவியை வகித்திடுவார் என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து உள்ளது.

எனினும், 15 உறுப்பினர்களை கொண்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பு கடந்த அக்டோபரில், இடைக்கால அதிபராக உள்ளவர் எந்த சூழ்நிலையிலும் அதிபருக்கு மாற்றாக முடியாது என கூறியிருந்தது.  இந்த சர்ச்சை தொடரும் நிலையில், கானாவில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பின் தலைவர்கள் நாளை ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி