1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மொஹம்மது அஜீஸ். கடந்த நூற்றாண்டில் சைப்ரசின் மிக முக்கியமான சாதனை ஒன்றில் அவருக்குப் பெரிய பங்கு இருந்தது. சைப்ரசைச் சேர்ந்த வெகு சிலரைத் தவிர வேறு யாரும் அவரை அறிந்திருக்கவில்லை.

துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த அஜீஸ், சைப்ரசில் சுகாதார அதிகாரியாக பணியாற்றினார். மலேரியாவை முற்றிலுமாக ஒழித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை சைப்ரஸ் பெறுவதை அவர் உறுதிசெய்தார்.

தனது நாட்டு மக்களிடையே 'தி ஃப்ளை மேன்' என பிரபலமாக அறியப்பட்டார் அஜீஸ், நோபல் பரிசு பெற்ற மலேரியா நிபுணர் சர் ரொனால்ட் ராஸிடம் பயின்றவர். மலேரியாவை பரப்பும் கொசுக்களின் வகையை கண்டுபிடித்தவர்தான் இந்த ரொனால்ட் ராஸ் .

பிரிட்டிஷ் காலனியான சைப்ரசைக் குறித்த ஒரு நூல் குறித்து ஆய்வு செய்தபோது, ​​அஜீஸின் கதையை நான் தற்செயலாக அறிந்து கொண்டேன்.

1936 ஆம் ஆண்டு வரை உலகில் அதிக அளவில் மலேரியா நோயாளிகள் பதிவான நாடுகளில் சைப்ரசும் ஒன்று. அந்த நேரத்தில் சைப்ரஸ் பிரிட்டனின் காலணியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நோய் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. தனது குழந்தை பருவ நாட்களை நினைவு கூர்ந்த ஒரு வயதான நபர், இந்த நோயால் பல குழந்தைகள் உயிரிழந்ததாக கூறினார். நோய்வாய்ப்பட்ட பல குழந்தைகள் உயிர் பிழைத்தனர், இருப்பினும் அவர்களால், மலேரியா பாதிக்கப்பட்ட அந்த நாட்களில் ஒரு வேலையைக்கூட செய்ய முடியவில்லை என நினைவுகூருகிறார்.

மலேரியாவுக்கு எதிராக ராணுவ பாணியில் இயக்கம்

ரொனால்ட் ராஸ்

ரொனால்ட் ராஸ்

தலைமை சுகாதார ஆய்வாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அஜீசுக்கு காலணித்துவ மேம்பாட்டு நிதியத்தின் உதவி கிடைத்தது. இந்த நிதியத்தின் குறிக்கோள் மலேரியாவை உண்டாக்கும் அனோஃபிலிஸ் கொசுக்களிலிருந்து சைப்ரசை விடுவிப்பதாகும்.

அவர் தனது இயக்கத்தை, ராணுவபாணியில் திட்டமிட்டார். அவர் முழு சைப்ரஸ் தீவையும் 500 பகுதிகளாகப் பிரித்தார். ஒவ்வொன்றையும் ஒரு நபர் 12 நாட்கள் கண்காணிக்க வேண்டியிருந்தது.

இந்த திட்டத்தின் படி அவரது குழு முறையாக செயல்படத்தொடங்கியது. இதன் கீழ், ஒவ்வொரு மீட்டரிலும் அனைத்து நீர் ஆதாரங்களிலும் டி.டி.டி (DDT - Dichloro-Diphenyl-Trichloroethane) தெளிக்கப்பட்டது. இதில் குடிநீர் கிணறுகளும் அடங்கும்.

குறைவான அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு அஜீசின் குழு வேறுபட்ட ஒரு நுட்பத்தை பின்பற்றியது. முட்டையிலிருந்து கொசுப்புழுக்கள் வெளியே வருவதைத்தடுக்க நீரின் மேற்பரப்பில், மிக மெல்லிய அடுக்கு பெட்ரோலியம் ஊற்றப்பட்டது.

"ஒவ்வொரு குளம், அருவி, நீர் தேங்கும் பகுதிகளிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டன." என்று 1948 ஜூனில் வெளியான 'சைப்ரஸ் ரிவியூ' என்கிற செய்தித்தாள் தெரிவித்தது.

விலங்குகளின் குளம்புத் தடம்கூட விடப்படவில்லை. இந்த இயக்கத்தின் போது, ​​அஜீசின் கூட்டாளிகள் சில நேரங்களில் சதுப்பு நிலங்களில் இறங்கினர். சில நேரங்களில் கயிறுகளின் உதவியுடன் குகைகளுக்குள் இறக்கப்பட்டனர்.

சைப்ரஸ் வரைபடம்

சைப்ரஸ் வரைபடம்

பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட பகுதிகளில், கொசுக்களின் லார்வாக்கள் வளர்கின்றனவா என வாரந்தோறும் சோதனை செய்யப்பட்டது. எங்காவது அப்படி நடந்திருந்தால் அங்கு பூச்சிகொல்லி மீண்டும் தெளிக்கப்பட்டது.

இந்த இயக்கம் தொடர்ந்த நேரத்தில், அசுத்தமான இடங்களில் இருந்து சுத்தமான இடங்களுக்கு வரும் அனைத்து வண்டிகள் மீதும் மருந்து தெளிக்கப்பட்டது

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோயாகும். இது குணப்படுத்தக்கூடியது. இதைத் தடுக்கவும் முடியும். பெண் கொசுக்கள் கடிப்பதால் மலேரியா பரவுகிறது.

இந்த ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டவுடன், அந்த நபர் நோய்வாய்ப்படுகிறார். மலேரியா காரணமாக கல்லீரல் செல்கள், ரத்த சிவப்பணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நோய் முழு உடலையும், மூளையையும்கூட பாதிக்கிறது, மேலும் இது உயிருக்கும் ஆபத்தானது.

2019 ஆம் ஆண்டில் உலகளவில் 229 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். 4.09 லட்சம் பேர் இந்நோயால் இறந்தனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் குழந்தைகள் ஆவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

அஜீசின் மகள் துர்கான் தனது தந்தையின் சுகாதார ஆய்வாளர் சீருடையை நினைவு கூருகிறார். அது ராணுவ பாணியில் இருந்தது. இந்த சீருடையில் தோளில் இலச்சினை இருந்தது.

கொசு

கொசு

குழந்தை பருவ சுற்றுலா நாட்களில், வறண்ட ஆறுகளின் கரையோரத்தில் தனது தந்தையைப் பின்தொடர்ந்ததையும், அவர் இடைவிடாது நீர் ஆதாரங்களின் கசிவுகளைத் தேடியதையும் அவர் மனதில் அசைபோடுகிறார்.

அமெரிக்காவின் மலேரியா நிபுணர் ஒருவர் சைப்ரசில் இருந்த ஓர் ஊரை அஜீசுடன் சேர்ந்து பார்வையிட்டார், அங்கு 72 சதவீதக் குழந்தைகளுக்கு மலேரியா அறிகுறிகள் இருந்தன.

இந்த அமெரிக்க நிபுணர் பின்னர் அஜீசைப் பற்றி இவ்வாறு எழுதினார், "அவர் கொசுக்களின் வாழ்விடங்களை தேடுவதையும், உயர்ந்த மொட்டை மாடிகளில் கூட கொசுக்களைக் தேடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் ஓர் ஊரில் ஒரு குளியலறையின் ஈரமான சுவரைக் கண்டார். அங்கு ஏராளமான கொசுக்கள் காணப்பட்டன. "

இந்த இயக்கம் தொடங்கி மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 1950 பிப்ரவரியில் உலகிலேயே மலேரியா இல்லாத முதல் நாடாக சைப்ரஸ் உருவெடுத்தது.

ஹீரோவாக கருதப்பட்டு பின்னர் மறக்கப்பட்டவர்

மொஹம்மத் அஜீஸ் தன் மனைவியுடன்

மொஹம்மத் அஜீஸ் தன் மனைவியுடன்

'லண்டன் நியூஸ் கிரானிகல்' என்கிற நாளேடு அஜீசை ஒரு சிறந்த தீர்வு தருபவர் என்று குறிப்பிட்டது. அவரது கூட்டாளிகள், மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் முன் களப் போராளிகள் என அழைக்கப்பட்டனர்.

உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், விஞ்ஞானிகளிடையே புகழ் பெற்றதற்காக அஜீசை அப்போதைய காலணித்துவ விவகார அமைச்சர் பாராட்டினார், மேலும் அவருக்கு Medal of Excellence (MBE) என்றழைக்கப்படும் பிரிட்டனின் சிறந்த பதக்கம் வழங்கப்பட்டது. MBE என்றால் மெம்பர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் என்று பொருள். OBE மற்றும் CBE க்குப் பிறகு MBE மூன்றாவது இடத்தில் உள்ளது.

மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் முடிவுக்குப் பிறகும் அஜீஸ், தலைமை சுகாதார ஆய்வாளராக தனது பணியைத் தொடர்ந்தார். டைபாய்டு மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்கள் குறித்து பல சுகாதார கல்வி பிரச்சாரங்களை நடத்தி கிழக்கு மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றினார்.

ஆனால் அவரது வெற்றி அவருக்கு நீடித்த புகழைக் கொண்டு வரவில்லை. அவரது கதையை சுவாரஸ்யமாக்குவது அவரது குறிப்பிடத்தக்க சாதனை அல்ல. இப்படிப்பட்ட சாதனைக்குப் பிறகும், அந்நாட்டின் வரலாற்றிலிருந்து அவர் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

சுதந்திரப் போராட்டம் மற்றும் அடுத்தடுத்த உட்கட்சிப் மோதல் காரணமாக துண்டு துண்டான இந்த சிறிய தீவின் வரலாற்றில் இதன் பின்னணி உள்ளது.

இரண்டாம் உலகப் போரின் முடிவு (பல சைப்ரஸ் குடிமக்கள் தைரியமாக போராடினார்கள்) மற்றும் பிரிட்டனில் தேர்தலுக்கு பிறகு தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) அரசு ஆட்சிக்கு வந்தது ஆகிய காரணங்களால் இந்தத்தீவு நாடு, விரைவில் காலணி ஆட்சியிலிருந்து விடுபடும் என பலர் நம்பினர்.

ஆனால் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் நிலவிய அமைதியின்மை காரணமாக பிரிட்டன், சைப்ரஸை 'மூழ்காத விமான தளமாக' பயன்படுத்தியதால், ராஜ்யரீதியில் முன்பைவிட அதன் முக்கியத்துவம் அதிகரித்த காரணத்தால் இது நடக்கவில்லை. ஆங்கிலேயர்கள் அவ்வளவு எளிதில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்பதே இதன் பொருள்.

1955 ஆம் ஆண்டில், அஜீசின் சிறந்த வெற்றிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டனின் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டால் சைப்ரசுக்கு ஏற்பட்ட விரக்தி, வன்முறை மோதலாக வெடித்தது.

இறுதியில் சைப்ரஸ், 1960 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்த நாடு இன, மத மற்றும் அரசியல் அடிப்படையில் வேகமாக பிளவுபடத் தொடங்கியது. இந்த விரிசல்களுக்கு இடையில் மொஹம்மத் அஜீசின் கதை பின்னுக்குத்தள்ளப்பட்டது.

சைப்ரஸ் 1974 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. சைப்ரசின் வடக்குப் பகுதியை துருக்கி தாக்கியது. ஏனெனில் அந்த நேரத்தில் கிரேக்கத்தில் ஆட்சியில் இருந்த ராணுவ அரசு இங்கு கிளர்ச்சியை ஆதரித்தது.

அந்தக் காலகட்டத்திலிருந்து, நாட்டின் வடக்குப் பகுதியின் மூன்றில் ஒரு பகுதியில், முக்கியமாக துருக்கிய சைப்ரியாட் மக்கள் வசித்து வருகின்றனர். அதே நேரத்தில் தெற்குப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கில், கிரேக்க சைப்ரியாட்டுகள் வசித்து வருகின்றனர்.

இந்தப்பிரிவினை, மொகம்மது அஜீஸ் போன்றவர்களின் பணியைக் கொண்டாடவும் நினைவில் வைத்திருக்கவும் பெரிதாக இடமளிக்கவில்லை.

சைப்ரசில் மலேரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஹீரோ அஜீஸ், 'தி ஃப்ளை மேன்' என அழைக்கப்படுகிறார். அவர் 1991 இல் நிக்கோசியாவின் வடக்குப் பகுதியில் தனது 98 வது வயதில் காலமானார்.அவர் ஓய்வு பெற்றதிலிருந்து, அரசாங்க ஓய்வூதியத்தின் மூலம் தனது வாழ்க்கையை அங்கு நிம்மதியாக கழித்துவந்தார். எந்தவொரு அதிகாரபூர்வ மரியாதைகளும் இல்லாமல் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சைப்ரசின் கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்கள் இணைந்து அஜீசுக்கு மரியாதை அளித்தால், அது சைப்ரசைப் பற்றிய தேசியக்கதையைச் சொல்வதற்கான ஒரு சிறிய முன்னடியாக இருக்கக்கூடும்.

(தபிதா மோர்கன் 'ஸ்வீட் அண்ட் பிட்டர் ஐலெண்ட்: எ ஹிஸ்டரி ஆஃப் தி பிரிட்டிஷ் இன் சைப்ரஸ் 1878-1960' புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி