1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று இந்திய அரசு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அந்த ஐஏஎஸ் உயரதிகாரி விலகியிருக்கிறார். மேலும், அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

இதன் மூலம் தமது ஆணைக்கு இணங்காத மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரியை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் ஆளும் மத்திய அரசின் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத தடையை மமதா பானர்ஜி ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நடவடிக்கை, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் இரு வேறு எதிரெதிர் கட்சிகளின் அரசியல் மற்றும் அதிகார போட்டியின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

அலாபன் பந்தோபாத்யாய

மத்திய பணியில் சேர அலாபன் பந்தோபாத்யாயவை உடனே விடுவிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனால், அந்த கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய மேற்கு வங்க அரசு, எந்த காரணத்துக்காக அவரை விடுவிக்க வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவரை விடுவிக்க முடியாது என்றும் கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அழுத்தம் அதிகரித்ததால், தமது ஐஏஎஸ் பணியில் இருந்து அலாபன் பந்தோபாத்யாய விலகி விட்டார். அவரது பொறுப்பை அடுத்த நிலையில் இருந்த ஹெச்.கே. த்விவேதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் புயல் சீற்ற நிவாரண நடவடிக்கையிலும் மாநில அரசின் தலைமைச் செயலாளர் என்ற முறையில் அலாபன் பந்தோபாத்யாய தீவிரமாக பங்கெடுத்த வேளையில், அவரை மத்திய அரசு திடீரென அழைத்துக் கொள்ள முற்படும் செயல் மூலம் என்ன மாதிரியான செய்தியை நாட்டுக்கு விடுக்க பிரதமரும் அவரது அரசாங்கமும் முற்படுகிறது? என்று மமதா கேள்வி எழுப்பினார்.

நிலைமை இப்படியே போனால், மாநிலத்தில் உள்ள மேற்கு வங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் போக்கை போல, மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பணியில் உள்ள மேற்கு வங்க பிரிவு அதிகாரிகளை தம்மாலும் அழைத்துக் கொள்ள முடியும். இப்படித்தானா ஐஏஎஸ் அதிகாரிகளை நடத்துவது? முறையின்றி அழைப்பதற்கு அவர்கள் என்ன கொத்தடிமை தொழிலாளர்களா? என்று மமதா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, மேற்கு மாநில அரசு தலைமைச் செயலாளரை மத்திய பணியில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேருமாறு அவருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி மே 28ஆம் தேதி அழுத்தம் கொடுத்திருந்தது.

ஆனால், இக்கட்டான காலகட்டத்தில் மாநிலம் உள்ள நிலையில், அலாபன் பந்தோபாத்யாயவை விடுவிக்க முடியாது என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை அனுப்பிய கடிதத்தில், மாநிலத்தில் உள்ள நிலைமை கருதியே தலைமைச் செயலாளரின் பதவி நீட்டிப்புக்கு மத்திய அரசு மே 24ஆம் தேதி அனுமதி வழங்கியது. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே அந்த அதிகாரியை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்வதென்பது, அதுவும் மாநில அரசின் ஆலோசனையின்றி திருப்பி அழைக்க முற்படுவது ஐஏஎஸ் பணி விதிகளுக்கும் அரசியலைப்புக்கும் எதிரானது என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநில பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகளை திடீரென்று மத்திய பணிக்கு மத்திய அரசு அழைத்துக் கொள்ளும் நடவடிக்கை இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பேரணிக்காக பயணம் செய்தபோது அவரது வாகன தொகுப்பை சில கும்பல் தாக்கியது. அந்த சம்பவத்தில் மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது.

அப்போது அந்த தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், டிஐஜி நிலையிலான மூன்று இந்திய காவல் பணி அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் கடிதத்தை மத்திய அரசு அனுப்பியது.

ஆனால், மாநில முதல்வரான மமதா பானர்ஜி தலையிட்டு அந்த அதிகாரிகளை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மோதிமமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்

இந்த நிலையில் கடந்த வாரம் யாஸ் புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோதி மேற்கு வங்கம் சென்றபோது அவரை வரவேற்க மாநில முதல்வரோ மாநில அரசு தலைமை செயலாளரோ செல்லவில்லை. பிறகு காலாய்குண்டா விமான தளத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் நடத்திய ஆய்வுக்கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த முதல்வர் மமதா பானர்ஜி, ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டார். அப்போது பிரதமரிடம் மாநில அரசின் புயல் பாதிப்பு அறிக்கையை கொடுத்த மமதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அந்த கூட்டத்திலும் மாநில அரசு தலைமைச்செயலாளர் கலந்து கொள்ளவில்லை.

மோதி Vs மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்

மோதி மமதா: மேற்கு வங்க தலைமைச் செயலரை பதவி விலகச் செய்து தலைமை ஆலோசகராக்கிய முதல்வர்

இந்த மாநில அரசு தலைமைச் செயலாளர் மே 31ஆம் தேதி பதவி ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவரது சேவை மாநிலத்துக்கு தேவை என்று மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி சில வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதியதன் அடிப்படையில் அவருக்கு மூன்று மாத பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் பிரதமரின் கூட்டத்தில் மாநில அரசு தலைமைச் செயலாளர் பங்கேற்காததன் பின்னணியில் அவரை மத்திய பணிக்கு அனுப்புமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால், அது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாக கருதப்படுவதாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில், அந்த கட்சிக்கும் ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அதிகார போட்டியில் 1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான அலாபன் பந்தோபாத்யாய சிக்கியிருப்பதாகவே அம்மாநில அரசியல் விவகாரங்களை நெருக்கமாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி