1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் உரிமையை அதானி நிறுவனத்திடம் தாரைவார்க்க ராஜபக்ஷ அரசாங்கம் மே 3ம் திகதி திருட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

கிழக்கு முனையத்தை விற்கும் முயற்சியை துறைமுக தொழிலாளர்கள் போராடி தோற்கடித்ததன் பின்பு, அரசாங்கம் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ளதாக மே (31) ம் திகதி நுகேகொடயில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மு.சோ.கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ இவ்வாறு கூறினார் கருத்து தெரிவித்த பிரச்சாரச் செயலாளர்,

“கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திற்கு விற்பதற்காக மே 3ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும், இதற்கு விருப்பம் தெரிவிக்கும் ஒப்பந்தத்தில் அன்றே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு மத்தியில், கிழக்கு முனையத்திற்குப் பதிலாக மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. மேற்கு முனையத்தை கட்டுவதைப் பற்றி இன்னும் நினைத்துப் பார்க்கவுமில்லை, கிழக்கு முனையம் பாதுகாக்கப்பட்டதால் பிரச்சினையில்லையென ஆளும் தரப்பு கூறியதால் சில போராட்டங்கள் விடுபட்டன.

ஆனால் கிழக்கு முனையத்தில் 51% பங்கை அதானி நிறுவனத்திற்கும், 34 % ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதால், துறைமுக அதிகார சபைக்கு 15 % மட்டுமே எஞ்சியுள்ளது. தேசிய வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படமாட்டாதெனக் கூறிய தேசபக்தி தலைவர்களின் தீர்மானங்கள் தான் இவை. கொழும்பு துறைமுகத்தின் மிகவும் லாபகரமான இடங்கள் கடந்த காலங்களில் சீனாவிற்கும், ஜப்பானுக்கும் விற்கப்பட்டது. கிழக்கு முனையத்தை விற்கும் முயற்சி மக்கள் போராட்டத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இந்த கொள்கலன் முனையம் அதானி நிறுவனத்திற்கு திருட்டுத்தனமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வாரப் பத்திரிகையொன்று வெளிப்படுத்தும் வரை நாட்டின் நாடாளுமன்றம் அறிந்திருக்கவில்லை. மக்களுக்குத் தெரியாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் போலி தேசபக்தர்கள் கூறியதைப் போன்று, இந்த தேசிய வளங்களை தாரைவார்ப்பது தேசத் துரோகம். கிழக்கு முனையம் சம்பந்தமான போராட்டம் நடைபெறும் போது, 51 வீதத்தை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை கொடுப்பதில் பிரச்சினையில்லையெனக் கூறிய இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவன்ச போன்ற தேசாபிமான போலி தேசபக்தர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று நாம் கேட்கிறோம். 3.5 மில்லியன் கொள்கலன்களை கையாளும் இலக்குடன் 35 வருடத்திற்கு இந்த முனையம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த முனையத்தில் தற்போதுள்ள திறனில் பாதியை அதானி பெற முடியும். எனவே இந்த பரிமாற்றம் என்பது துறைமுகத்தின் பாதியை ஒப்படைப்பதற்கு சமம் என்று கணக்கிட முடியும். இந்த முனையத்தை விற்பது நாட்டுக்கு ஆபத்து, போலி தேசபக்த துரைமார் என்ன சொன்னாலும் இந்நாட்டில் இனத்தையும், மதத்தையும முன்வைத்து தேசியக் கொடியை ஏந்தி யூ.என்.பி. கொண்டு வந்த பிறகும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நவ தாராள முதலாளித்துவத்தை செயற்படுத்தும் கொள்கை இதுதான் என்று நாங்கள் கூறுகிறோம்.

நாடாளுமன்றத்திற்குத் தெரியாமல் இப்படிச் செய்தது தவறென எதிர்க்கட்சி துரைமார் சொல்கிறார்கள். யூ.என்.பி. செய்தவற்றைத்தான் இந்த அரசாங்கமும் செய்கிறதென நாங்கள் சொல்கிறோம். இந்த போலி தேசபக்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேசிய வளங்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்து செய்யும் இந்த மோசமான காரியங்களினால் இந்நாட்டு மக்களின் பொருளாதார வளங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிடும்.

இதை தடுப்பதற்கு மக்கள் அதிகாரமொன்றை நிர்மாணிப்பதைத் தவிர வேறு பதில் கிடையாது. இதற்காக, இந்த அரசாங்கத்தினதும், எதிர் கட்சியினதும் திட்டங்களை தோற்கடித்து, மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பி இந்நாட்டு மக்களுக்காக செயற்படும் ஆட்சியொன்றை உருவாக்க முன்வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்”

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி